மிக மிக அவசரம் - விமர்சனம்

10 Nov 2019
கதை விவிஐபிக்கள், விஐபிக்கள் ஒரு இடத்திற்கு வருகை தரும் போது, அவர்களது பாதுகாப்பிற்காக நிறுத்தப்படும் பெண் போலீசார், இயற்கை உபாதைகளைக் கூட செல்ல முடியாத ஒரு சூழலில் எப்படி சிரமப்படுகிறார்கள் என்பதைச் சொல்லும் கதை. நடிப்பு ஒரு பாலத்தின் நடுவின் இன்ஸ்பெக்டரால் பழி வாங்கும் நோக்கத்தில் தனி ஒரு பெண் போலீசாக நிறுத்தப்படுகிறார் ஸ்ரீபிரியங்கா. மண்டையைப் பிளக்கும் உச்சி வெயில், கடுமையான தாகம், அதோடு சிறுநீர் கூட கழிக்க முடியாமல் அவஸ்தைப்படும் ஒரு சூழ்நிலை. அதே சமயம், மேம்பாலத்தில் எந்த இடையூறும் ஏற்படாத வகையில் பணியாற்ற வேண்டும். போலீஸ் வேலை என்பதிலும் எவ்வளவு கஷ்ட, நஷ்டங்கள் இருக்கிறது என்பதை ஸ்ரீபிரியங்காவின் கதாபாத்திரமும், அதில் அவருடைய நடிப்பும் நம்மை மிகவும் நெகிழ வைக்கிறது. பெண்களின் பிரச்சினைகளை வெளிப்படுத்திய எத்தனையோ படங்கள் வந்திருக்கின்றன. ஆனால், இப்படி ஒரு முக்கிய பிரச்சினையைப் பற்றி எந்தப் படமும் சொன்னதில்லை. முத்துராமன், ஈ. ராமதாஸ், வி.கே. சுந்தர் அவரவர் கதாபாத்திரங்களாகவே மாறியிருக்கிறார்கள். இசை, மற்றவை இஷான் தேவ் இசையமைப்பில் கதைக்கும், காட்சிகளுக்கும் என்ன தேவையோ அந்த இசையைக் கொடுத்திருக்கிறார். படத்தை வளவளவென்று நீட்டி முழக்காமல் ஒரு பகலில் நடக்கும் சம்பவங்களை அதன் யதார்த்தம் மீறாமல் மிகவும் இயல்பாக அமைத்திருக்கிறார்கள். அதற்கு ஒளிப்பதிவாளர், படத்தொகுப்பாளர் சரியான உதவி புரிந்திருக்கிறார்கள். + சினிமாத்தனமில்லாத யதார்த்தமான கதை, கதாபாத்திரங்கள் - ஓரிரு, பரபரப்பான திருப்பங்களை வைத்திருக்கலாம்.

Share via: