லாரா - விமர்சனம்
03 Jan 2025
காரைக்காலில் உள்ள நிரவி காவல் நிலையத்தில் தொடங்கும் இந்த கதை, ஒரு மர்ம பெண்ணின் சடலத்தைச் சுற்றி நகர்கிறது. கடற்கரையில் முகம் சிதைந்த ஒரு சடலம் கிடைப்பதைத் தொடர்ந்து, லாரன்ஸ் என்பவர் தனது மனைவி ஸ்டெல்லா காணவில்லை என்று புகார் அளிக்கிறார். ஆனால் போலீசின் மர்ம தொலைபேசி தகவல்களும், லாரன்ஸின் ஒட்டுமொத்த நடத்தை போலீசில் சந்தேகத்தை ஏற்படுத்துகின்றன.
விசாரணையின் பின்புலத்தில் பாலியல் தொழிலாளிகள், ஹவாலா மோசடி, ஆயுத தயாரிப்பு, ஆதரவற்றோர் இல்லம் மற்றும் லாராவின் காதல் வாழ்க்கை போன்ற பல கூறுகள் இணைகின்றன. ஒரு விறுவிறுப்பான திருப்பமாக, கதை கதாநாயகர்களின் புறநோக்கங்களையும் உள்ளுணர்வுகளையும் விளக்குகிறது.
அசோக் குமார், குறைந்த காட்சிகளில் கூட தன் திறமையை வெளிப்படுத்தியுள்ளார். தயாரிப்பாளர் கார்த்திகேசன், விசாரணை நடத்தும் இன்ஸ்பெக்டர் வேடத்தில், யதார்த்தத்துடன் நடித்துள்ளார். அனுஷ்ரேயா ராஜன், லாரா வேடத்தில் தனது அழுத்தமான நடிப்பை வெளிப்படுததியுள்ளார். வெண்மதி (ஸ்டெல்லா) மற்றும் வர்ஷினி (ஜெயா) தங்கள் பாத்திரங்களில் நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
மேத்யூ வர்கீஸ் எம்.எல்.ஏ பரூக் யாசினாக அழுத்தமான நடிப்பை அளிக்க, பாலா, எஸ். கே. பாபு உள்ளிட்டவர்களும் படத்தில் நடித்துள்ளார்கள்.
காரைக்காலின் இயல்பான சூழல் ஒளிப்பதிவில் ஆர். ஜே. ரவீன் திறமையாகக் காட்டியுள்ளார். ரகு ஸ்ரவண் குமாரின் இசை, ஒரு கிரைம் திரில்லருக்குத் தேவையான சுறுசுறுப்பை வழங்குகிறது. பாடல்கள் கேட்கும் வகையில் அமைந்துள்ளன, பின்னணி இசை திகிலான தருணங்களை உயர்த்துகிறது.
கதையின் முக்கிய பகுதிகள் பரபரப்பைத் தூண்டுகின்றன. விசாரணை நடக்கும் இடங்களில் மட்டுமே கதை சுழலினாலும், காட்சிகளில் சோர்வு காணாமல் எடிட்டிங் செய்யப்பட்டுள்ளது.
போலீஸ் சந்தேகங்களுக்குப் பின்னால் மறைந்துள்ள உண்மைகள் தெரிய வரும் போது, கதை எதார்த்தமான முடிவுக்குச் செல்கிறது. இதன் உச்சக்கட்ட திருப்பங்கள், ரசிகர்களை கவரும் முக்கிய அம்சமாக விளங்குகின்றன.
லாரா ஒரு விறுவிறுப்பான கிரைம் திரில்லர். பரபரப்பான திரைக்கதை, இரகசியங்களைத் தோண்டும் நேர்த்தியான திரைக்கதையுடன், இது ரசிகர்களை திருப்திப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
Tags: lara