கைதி - விமர்சனம்

25 Oct 2019
கதை பத்து வருடங்கள் சிறையிலிருந்து விடுதலை ஆகி இதுவரை பார்க்காத மகளைப் பார்க்கச் செல்கிறார் கார்த்தி. போகும் வழியில் ஒரு போலீசிடம் சிக்கி, கைதி ஆக கைவிலங்குடன் ஜீப்பில் இருக்கிறார். அந்த சமயத்தில் ஐஜி வீட்டிற்கு விருந்துக்கு வந்த மற்ற போலீஸ் அதிகாரிகளில் நரேன் மற்றும் அவரது குழுவைச் சேர்ந்த நால்வரைக் கொல்ல போதைப் பொருள் கடத்தல்  கும்பல் களம் இறங்குகிறது. அதிலிருந்து தப்பிக்கிறார் நரேன். மற்ற போலீஸ் அதிகாரிகளைக் காப்பாற்றி அவர்களை மருத்துவமனையில் சேர்க்க கைதி கார்த்தியை லாரி ஒன்றை ஓட்ட வைக்கிறார். அதோடு, கமிஷனர் அலுவலகத்தில் உள்ள பல கோடி ரூபாய் போதைப் பொருளைக் காப்பாற்றும் வேலையிலும் இறங்குகிறார். நரேனுக்கு உதவி செய்து அவரையும், அவரது போலீஸ் டீமையும் கார்த்தி எப்படி காப்பாற்றுகிறார் என்பதுதான் படத்தின் கதை. நடிப்பு இந்தக் காலத்தில் உடன் நடிக்க ஜோடி இல்லாமல், டூயட் பாட பாடல்கள் இல்லாமல் ஒரு படத்தில் நடிக்க எந்த ஹீரோ சம்மதிப்பார். கார்த்தி அந்த ரிஸ்க்கையும் எடுத்து வெற்றியும் பெற்றிருக்கிறார். அவருடைய கதாபாத்திரமும் சரி, நடிப்பும் சரி அவரை ஒரு தனித்துவமான நடிகர் எனப் பாராட்ட வைக்கின்றன. ‘பருத்தி வீரன்’ படத்திற்குப் பிறகு அடுத்து பல வருடங்களுக்குப் பேசப்படக் கூடிய ‘டெல்லி’ கதாபாத்திரத்தில் நடிப்பில் ஆளுமை செய்திருக்கிறார் கார்த்தி. வாக்கு கொடுத்த பிறகு அதைக் காப்பாத்தாம போக மாட்டேன் எனப் பேசி கைதிக்குள்ளும் ஈரம் இருக்கும் என புரிய வைக்கிறார். இப்படி ஒரு படத்தில் நடித்ததற்கு கங்கிராட்ஸ் கார்த்தி. நான்கு பேர் கொண்ட டீமை வழி நடத்தி 900 கிலோ போதைப் பொருளைக் கைப்பற்றி அதை கடத்தல் காரர்களிடமிருந்து காப்பாற்ற வேண்டும். விருந்தில் உடன் இருந்த 40, 50 போலீசின் உயிரையும் காப்பாற்ற வேண்டும். வலது கை வேறு அடிபட்டு கட்டுடன் இருக்கும் சூழ்நிலை. உடல்ரீதியாக இயங்க முடியவில்லை என்றாலும் புத்தி ரீதியாக இயங்கியாக வேண்டும். கார்த்தி ஒரு பக்கம் அமைதி என்றால் இவர் மறுபக்கம் உணர்ச்சி வேகத்தில் பரபரப்பு கூட்டுகிறார். கார்த்தி ஓட்டும் லாரி, தேர் என்றால் அதில் நரேன் கிருஷ்ணர், கார்த்தி அர்ஜுனர். இவர்களுக்கு அனுமாராய் இருந்து உதவுவதில் தீனா என மகாபாரதமும், இராமாயணமும் இணைந்த ஒரு கலவையாய் நகர்கிறது படம். சினிமாவில் அறிமுகமான கொஞ்ச நாட்களிலேயே குணச்சித்திர நடிப்பில் இந்தப் படம் மூலம் நல்ல பெயரைப் பெறுவார் தீனா. கமிஷனல் அலுவலகத்தில் தனி ஒரு போலீஸ்காரராய் இருந்து கொண்டு 20, 30 ரவுடிகளை எதிர் கொள்கிறார் மரியம் ஜார்ஜ். அவருக்கு உதவியா ‘டிடி’ கேசில் வந்து சிக்கிய கல்லூரி மாணவர்கள். ஒருவர் உயிரையும் கொடுத்து கண்கலங்க வைக்கிறார். கார்த்தியின் மகளாய் பேபி மோனிகா. அப்பாவை முதன்முதலில் பார்க்கப் போகிறோம் என்ற தவிப்பைக் காட்டி கண்களில் கண்ணீர் வரவைக்கிறார். மெயின் வில்லனாக அர்ஜுன் தாஸ். கணீர் குரலிலேயே அழுத்தமான வில்லத்தனத்தைக் காட்டுகிறார். அவருக்கு அண்ணனாய் ஹரிஷ் உத்தமன், லாக்கப்பில் இருந்தாலும் மிரட்டுகிறார். அர்ஜுன் தாஸ் கூட்டணியில் ரமணா. லாரியில் இருந்தபடியே போட்டுக் கொடுக்கும் அந்த போலீஸ், அர்ஜுன் கூட்டணியில் இருக்கும் போலீஸ் ஆள், போலீசைக் காட்டிக் கொடுக்கும் நார்கோடிக்ஸ் அதிகாரி ஹரிஷ் பெரடி ஆகியோரும் பெயர் வாங்குகிறார்கள். இசை, மற்றவை சாம் சி.எஸ் பின்னணி இசையில் காட்சிகளின் கனமும், அழுத்தமும் இன்னும் கூடுகிறது. ஒரே இரவில் மட்டுமே நகரும் கதை. சாலை, காட்டுப் பகுதி, கமிஷனர் அலுவலகம் என சேஸ் செய்து ஒளிப்பதிவு செய்திருக்கிறார் சூர்யன் சத்யன். எந்த இடத்திலும் தொய்வேயில்லாத வகையில் பிலோமின் ராஜ் படத் தொகுப்பு.

+

தமிழ் சினிமாவில் இதுவரை பார்க்காத ஒரு கதை, காட்சிகள், நாயகன் கதாபாத்திரம்.

-

சில இடங்களில் சில லாஜிக் மீறல்கள்.  

Share via: