போலீஸ் ஆக வேண்டும் என்ற ஒரு குறிக்கோளுடன் இருப்பவர் விதார்த். அவரது தந்தைக்கு விபத்து ஏற்படுவது போலவும், அதைத் தடுப்பதற்குள் அந்த விபத்து நடந்துவிடுவதாகவும் அவருக்கு கனவு வருகிறது. ஆனால், அது விபத்து கிடையாது, ஒரு கொலை முயற்சி என்று தெரிய வர, அதைப் பற்றி கனவிலேயே தேடிச் செல்கிறார். அதற்கான விடையயை அவர் கண்டுபிடித்தாரா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

விதார்த்துக்கு இது 25வது படம். அதனாலேயே ஒரு சிறப்பான கதையைத் தேர்ந்தெடுத்து நடித்திருக்கிறார். அவரது கதாபாத்திரத்தில் மிகவும் பொருத்தமாக நடித்து பெயர் வாங்குகிறார். 

பல படங்களில் சிறு வேடங்களில் நடித்த தன்யா இந்தப் படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கிறார். குணச்சித்திரக் கதாபாத்திரத்தில் மாரிமுத்து எப்போதுமே இயல்பாக நடித்து கவர்ந்துவிடுவார். இந்தப் படத்திலும் அப்படியே.

த்ரில்லர் வகைப் படங்களில் சாம் சிஎஸ் பின்னணி இசை பிரமாதமாக இருக்கும். இந்தப் படத்திற்கும் தனி கவனத்துடன் இசையமைத்திருக்கிறார்.

‘டைம் லூப்’ மாதிரியான படம்தான், ஆனால், அதைக் கனவு என்று காட்டி வித்தியாசப்படுத்தியிருக்கிறார் இயக்குனர் சீனிவாசன்.

கிளைமாக்சில் மட்டும் கொஞ்சம் சறுக்கியிருக்கிறார்கள். அதையும் சில சினிமாத்தனமான காட்சிகளையும் தவிர்த்திருந்தால் ‘கார்பன்’ இன்னும் அதிகமாகப் பேசப்பட்டிருக்கும்.