அசோக் வீரப்பன் இயக்கத்தில், வைபவ், அனகா, ஜோஜு ஜார்ஜ், ஆந்தகுடி இளையராஜா, ஆடுகளம் நரேன், தமிழரசன் மற்றும் பலர் நடித்துள்ள படம்.

வைபவ் பாரம்பரிய கூத்துக் கலைஞர் குடும்பத்தில் பிறந்தவர். அவருக்கும் அவரது நண்பரான ஆந்தகுடி இளையராஜாவுக்கும் கூத்தில் நடிப்பதை விட்டுவிட்டு வெளிநாடு சென்று வேலை பார்க்க வேண்டும் என்பது லட்சியம். அதற்கு பணம் சேர்க்க டிரைவர் வேலைக்குச் சேர்கிறார்கள். வேலைக்குச் சென்ற பிறகு அவர்கள் ஓட்டிச் சென்ற லாரியில் போதைப் பொருள் கடத்தியதாகக் கைது செய்யப்படுகிறார்கள். சிறைக்குச் செல்லும் வழியில் தப்பிக்கிறார்கள். அவர்களைப் பிடித்தே தீருவேன் என எஸ்பி தமிழரசன் கடும் கோபத்துடன் சுற்றி வருகிறார். அடுத்து என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

படத்தின் பெயரைப் பார்த்ததும் நகைச்சுவைப் படமாக இருக்குமோ என்று நினைக்கத் தோன்றும். ஆனால், இது ஒரு சீரியசான அரசியல் படம். பல அரசியல் பன்ச் வசனங்களும் படத்தில் உண்டு. தலைப்பை மட்டும் வேறு வைத்திருந்தால் இந்தப் படத்திற்கான வரவேற்பு வேறு மாதிரி இருந்திருக்கும்.

வைபவவ், அனகா இருவரும் பொருத்தமான ஜோடியாகத் தெரிகிறார்கள். இருவருக்குமான காதல் காட்சிகள் வழக்கமாக இல்லாமல் வேறு மாதிரியாக அமைந்துள்ளது. எந்த கேரக்டர் கொடுத்தாலும் அதில் எப்படியாவது நடித்துவிட வேண்டும் எனத் துடிப்பவர் வைபவ். ஈழத் தமிழ் அகதியாக அனகா. அக்கதாபாத்திரத்திற்கு அற்புதமாக உயிர் கொடுத்திருக்கிறார். அவரது கோபமும், அழுகை நம்மையும் கலங்க வைக்கும்.

சூப்பர் சிங்கரில் பாடிய ஆந்தகுடி இளையராஜா இயல்பான ஒரு நண்பனாக அறிமுகமாகி இருக்கிறார். போதைப் பொருள் தடுப்பு எஸ்பி ஆக தமிழரசன், அரசியல்வாதியாக ஆடுகளம் நரேன் இருவரும் அக்கதாபாத்திரங்களாக மாறியிருக்கிறார்கள்.

சந்தோஷ் நாராயணன் பின்னணி இசையும், தினேஷ் புருஷோத்தமனின் ஒளிப்பதிவும் குறிப்பிட வேண்டியவை. குறிப்பாக கடலோரப் பகுதிகளில் புகுந்து விளையாடியிருக்கிறது தினேஷின் கேமரா.

ஒரே படத்தில் பல விஷயங்களைச் சொல்ல முயன்றது மட்டும் கொஞ்சம் இடிக்கிறது. மற்றபடி ஒரு பரபரப்பான க்ரைம் படமாகப் பார்த்து ரசிக்கலாம்.