பிகில் - விமர்சனம்

25 Oct 2019
கதை தாதா அப்பா, கால்பந்து வீரர் மகன். இரண்டுமே விஜய். போட்டி தாதா அப்பாவைக் கொல்ல இந்திய அணிக்கு விளையாடத் தேர்வான மகன், கத்தியை எடுத்து உடனே அப்பாவைக் கொன்ற தாதாவைக் கொன்று அவரும் தாதாவாகிறார். ஏழு வருடங்களுக்குப் பிறகு தமிழ்நாடு பெண்கள் கால்பந்து அணிக்குக் கோச்சாக அவர் போக வேண்டிய சூழ்நிலை. அந்தப் பெண்கள் தாதா தங்களுக்குக் கோச்சா என எதிர்க்க, இன்னொரு புறம் கால்பந்து சங்கத் தலைவர் எதிர்க்க, மறுபக்கம் பழைய பகையும் சேர மகன் விஜய் அனைத்தையும் சமாளித்தாரா இல்லையா என்பதுதான் படத்தின் கதை. நடிப்பு அப்பா ராயப்பன், மகன் மைக்கேல் என இரண்டு கதாபாத்திரங்களில் விஜய். அப்பா ராயப்பன் கதாபாத்திரத்தில் காவி வேட்டி, கருப்பு சட்டை, நெற்றியில் சந்தனம் குங்குமம், கழுத்தில் சிலுவை செயின், வீட்டு பூஜை அறையில் இயேசு, அல்லா, இந்துக் கடவுள் இருக்க மூன்று மதத்து ரசிகர்களையும் கவர முயற்சிக்கிறார்கள். தோற்றத்தில் மட்டும்தான் வயதானவர் ஆக்ஷனில் இளைஞராக அதிரடி காட்டுகிறார். மகன் மைக்கேல் என்கிற பிகில். மைக்கேல் தாதா, பிகில் ஏழு வருடங்களுக்கு முன்பு இந்திய அணியில் இடம் பெற்ற கால்பந்து விளையாட்டு வீரர். பிகில் ஆக இளமைத் துள்ளலுடன் அப்பாவைக் கண்டால் பயந்து நடுங்கும் இளைஞராக இருக்கிறார். மைக்கேல் ஆக வழக்கமான விஜய். காமெடி, காதல், ஆக்ஷன், கோபம், நகைச்சுவை என கலந்துகட்டி அடிக்கிறார். விஜய்யின் காதலியாக நயன்தாரா அதிக வேலையில்லை. யோகிபாபு ஆங்காங்கே சிரிக்க வைக்கிறார். ஜாக்கி ஷெராப், டேனியல் பாலாஜி, ஐ.எம்.விஜயன் என மூன்று வில்லன்கள். ஆனால், மூவருமே ஸ்ட்ராங்கான வில்லன்கள் இல்லை. பெண்கள் கால்பந்து அணியின் கேப்டனாக அம்ரிதா, மற்ற வீராங்கனைகளாக கோபக்காரப் பெண்ணாக இந்துஜா, ஆசீட் வீச்சில் முகம் பாதிக்கப்பட்ட பெண்ணாக ரெபா மோனிக்கா, திருமணமாகி மீண்டும் அணிக்கு வந்த வர்ஷா கிடைத்த நேரத்தில் தங்களை கவனத்தில் கொள்ள வைக்கிறார்கள். இசை, மற்றவை ஏஆர் ரகுமான் இசையில் ‘சிங்கப்பெண்ணே, வெற்றித்தனம்’ பாடல்கள் மட்டுமே ரசிக்க வைக்கின்றன. பின்னணி இசையில் மிரட்டலாக எதுவுமில்லை. கடமைக்கு வாசித்தது போல வாசித்திருக்கிறார். ஒளிப்பதிவாளர் விஷ்ணுவுக்குத்தான் படத்தில் அதிக வேலை. கால்பந்தாட்டப் போட்டிகளை கூடவே ஓடி ஓடி எடுத்திருக்கிறார்.

பெண்கள் தங்களுக்கு வரும் தடைகளைத் தகர்த்தெறிந்து போராட வேண்டும் என்ற கருத்து.

-

பல படங்களில் பார்த்த பல காட்சிகள். ஏற்கெனவே சில படங்களில் வந்த கதைகள். புதிதாக, சுவாரசியமான காட்சிகள் எதுவும் இல்லாதது.

Share via: