அந்த நாள் – விமர்சனம்
14 Dec 2024
விவி கதிரேசன் இயக்கத்தில், ராபர்ட் சர்குணம் இசையமைப்பில், ஆர்யன் ஷாம், ஆத்ய பிரசாத், லிமா பாபு, இமான் அண்ணாச்சி, ராஜ்குமார் மற்றும் பலர் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள்.
திரைப்பட இயக்குனரான ஆர்யன் ஷாம், அடுத்த படத்திற்கான கதை விவாதத்திற்காக கடற்கரை அருகில் உள்ள ‘பஞ்சமி பங்களா’ என்ற இடத்திற்குச் செல்கிறார். இரண்டு பெண் உதவியாளர்கள், ஒரு ஆண் உதவியாளர், சமையல்காரர், டிரைவர் ஆகியோர் அங்கு சென்று தங்குகிறார்கள். ஆனால், இரவு நேரத்தில் அந்த பங்களாவில் மர்மமான சில சம்பவங்கள் நடக்கிறது. அது என்ன என்பதைக் கண்டுபிடிக்க அனைவரும் முயற்சிக்கிறார்கள். அதைக் கண்டுபிடித்தார்களா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
திகில் படம் என்றாலே இப்படியான பங்களா தான் படத்தின் கதைக்களமாக இருக்கும். இந்தப் படத்திலும் அப்படித்தான். ஆனாலும், அந்த பங்களாவைக் காட்டிய விதத்திலேயே நமக்கு திகில் ஊட்டியிருக்கிறார்கள். அடுத்து என்ன நடக்கும் என்ற சஸ்பென்ஸ் ஒரு பக்கம் தொடர, கிளைமாக்சில் நாம் எதிர்பார்க்காத ஒரு டிவிஸ்ட்டை வைத்து படத்தை முடித்திருக்கிறார்கள்.
அறிமுக நாயகன் ஆர்யன் ஷாம், சினிமா இயக்குனர் கதாபாத்திரத்தில் பொருத்தமாகவே நடித்திருக்கிறார். மற்றவர்கள் பயந்தாலும், அதைப் பற்றிக் கவலைப்படாமல் அந்த வீட்டைச் சுற்றி நடக்கும் மர்மத்தைக் கண்டுபிடிக்க முயல்கிறார். மிகவும் ஸ்மார்ட்டாக இருக்கிறார். தொடர்ந்து முயற்சித்தால் தமிழ் சினிமாவில் ஒரு நல்ல இடத்தைப் பிடிக்கலாம்.
படத்தில் நாயகனுக்கு ஜோடி என்று யாருமில்லை. அவருடைய உதவியாளர்களாக ஆத்ய பிரசாத், லிமா பாபு நடித்திருக்கிறார்கள். வீட்டின் சமையல்காரராக இமான் அண்ணாச்சி, டிரைவராக ராஜ்குமார், மற்றொரு உதவியாளராக கிஷோர் ராஜ்குமார் நடித்திருக்கிறார்கள்.
ராபர்ட் சர்குணத்தின் பின்னணி இசை திகிலான காட்சிகளை மேலும் திகிலாக்குகிறது. அந்த பஞ்சமி பங்களாவை பலவிதங்களில் காட்டி நம்மை பயமுறுத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் சதிஷ் கதிர்வேல்.
நரபலி என்றால் என்ன என்பது இந்தக் கால சினிமா ரசிகர்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை. படத்தின் ஆரம்பத்தில் அப்படி ஒன்றைக் காட்டி அறிமுகப்படுத்திவிட்டு, கடைசியில் இன்னும் அதிகமாகவே பயமுறுத்துகிறார்கள். ஒன்றரை மணி நேரப் படம் என்பதால் படம் நகர்வது தெரியவில்லை. மேக்கிங்கில் மட்டும் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.
Tags: antha naal, aryan shyam