யு டியூப் சேனல்களுக்கு தடை போட்டது கேரளா தியேட்டர் சங்கம்
10 Feb 2023
சமூக வலைத்தளங்கள் கடந்த சில வருடங்களில் எப்படி வளர்ச்சி அடைந்ததோ அது போலவே யு டியூப் வீடியோ தளமும் வளர்ச்சியடைந்துள்ளது. ஜனவரி 2023ம் ஆண்டு எடுக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் உலகத்திலேயே இந்தியாவில்தான் அதிகமான யூ டியூப் பார்வையாளர்கள் இருக்கிறார்கள் என கணக்கிடப்பட்டுள்ளது.
467 மில்லியன் யு டியுப் பார்வையாளர்களுடன் இந்தியா முதலிடத்தில் இருக்கிறது. அதோவது 46 கோடி பார்வையாளர்கள். இரண்டாவது இடத்தில் இருக்கும் அமெரிக்கா 24 கோடி பார்வையாளர்களை மட்டுமே பெற்றுள்ளது. சுமாராக இந்தியாவின் பார்வையளார்கள் அளவில் பாதி மட்டுமே.
அதிகமான யூ டியுப் சேனல்களைக் கொண்டுள்ள நாடாக இந்தியா இருக்கவும் வாய்ப்புண்டு. அதிலும் குறிப்பாக சினிமா விமர்சகர்கள் என பலரும் சேனல்களை ஆரம்பித்து நடத்தி வருகிறார்கள். புதிய படங்கள் வெளிவந்தால் முதல் நாள் முதல் காட்சியிலேயே தியேட்டர்களுக்குச் சென்று ‘ஆடியன்ஸ் ரிவியூ’ என்ற பெயரில் படம் பார்த்துவிட்டு வெளியில் வரும் ரசிகர்களின் கருத்துக்களைப் பதிவிடுவது ஒரு டிரென்டாகவே இருக்கிறது.
பல யு டியூப் சேனல்களில் அவர்களுக்குப் பிடித்தமான நடிகர்களைப் பற்றியும், விளம்பரம் கொடுத்த படங்களைப் பற்றியும் மட்டுமே பாசிட்டிவ்வாக போடுவதும் வழக்கமாக இருக்கிறது. பிடிக்காத ஹீரோக்கள், விளம்பரம் தராத படங்களைப் பற்றி தாறுமாறான கருத்துக்களைப் பதிவிடுவதால் சில சமயங்களில் அது படங்களின் வசூலைப் பாதிக்கிறது.
இதைக் கருத்தில் கொண்டு கேரள பிலிம் எக்சிபிட்டர்ஸ் ஐக்கிய அமைப்பு, தியேட்டர்களில் அப்படிப்பட்ட வீடியோக்களை எடுக்கத் தடை விதித்துள்ளது. மேலும் தியேட்டர்களில் வெளியான ஒரு படத்தை 42 நாட்களுக்குப் பிறகு மட்டுமே ஓடிடி தளங்களில் வெளியிட வேண்டும் என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
யு டியுப் விமர்சகர்களை ஒழுங்குபடுத்துவது குறித்து விரைவில் கேரள அரசை நாடவும் அவர்கள் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. மலையாளத் திரையுலகம் இப்படி ஒரு முடிவை எடுத்தால் அதைத் தொடர்ந்து மற்ற மொழி திரையுலகினரும் அதைத் தொடர வாய்ப்புள்ளது.
Tags: cinema, tamil cinema, malayalam cinema,