லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் மற்றும் பலர் நடிக்கும் ‘விக்ரம்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், கமல்ஹாசன் ஆகியோர் கலந்து கொண்டு பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தனர்.

அப்போது கமல்ஹாசன் பேசகையில்,

வித்தியாசமான படத்தைக் கொடுக்க முயற்சித்திருக்கிறோம். ‘16 வயதினிலே’ படத்தில் நடித்தபோது பாரதிராஜா புதிய இயக்குநர். அதைப் போல் இப்போது லோகேஷ் கனகராஜ் என்கிற புதியவரின் இயக்கத்தில் நடித்திருக்கிறேன். அன்றும் இன்றும் நான் இளைஞர்களுடன் பணியாற்றுகிறவன். 

எனது ரசிகர்களை நான்கு வருடங்கள் காக்க வைத்ததற்காக மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். விக்ரம் 5 மொழிகளில் வெளியாகிறது. அதற்காக  பல நகரங்களுக்குச் செல்லத் திட்டமிட்டிருக்கிறேன். அதற்கு முன் எம்மவர்களாகி உங்களிடம் வாழ்த்துகளைப் பெற்றுப் புறப்படவே நாம் முதலில் சந்தித்திருக்கிறோம்.

இப்படத்தில் விஜய்சேதுபதி, ஃபகத் ஃபாசில் நடித்திருக்கிறார்கள். அவர்கள் என்னுடைய ரசிகர்கள். படப்பிடிப்பின்போது என்னைப் பாராட்டிக்கொண்டே இருந்தார்கள்.

விக்ரம் படம் பெரிய விலைக்கு விற்றிருக்கிறது. விக்ரம் படத்தின் தலைப்பை லோகேஷ் கனகராஜ்தான் கேட்டு வாங்கினார். அன்றைய ‘விக்ரம்’ படத்தை ராஜசேகர் இயக்கினார். தற்போது, இந்த ‘விக்ரமை லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கிறார். இதை இரண்டாம் பாகம் என்று சொல்லிக் கொள்கிறார்கள். 

‘விக்ரம்’ படத்தின் 3ஆம் பாகத்தையும் லோகேஷ் கனகராஜ் இயக்குவார். அதை எப்போது தொடங்குவது என்பதை லோகேஷ் கனகராஜ்தான் சொல்ல வேண்டும்.

முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளன்று படத்தை வெளியிடுவது திட்டமிட்டது இல்லை. தானாகவே அமைந்த அழகான சம்பவம் அது. மே மாதத்தில் தான் படத்தை ரிலீஸ் செய்வதாக இருந்தது. ஆனால், தவிர்க்க முடியாத சில காரணங்களால் ஜூன் 3 ஆம் தேதி ரிலீஸ் செய்ய வேண்டியதாயிற்று. இருந்தாலும் அது எனக்கு மகிழ்ச்சி தான். கலைஞரை பற்றி பேச எனக்கு ஆயிரம் உள்ளது.

‘இந்தியன் 2’ படம் கண்டிப்பாக இருக்கிறது. அதற்கான பேச்சு வார்த்தைகள் நடந்துகொண்டிருக்கின்றன”

பத்தல பத்தல பாடலில் இடம்பெற்ற ஒன்றியம் என்பதற்கும் திருடன் கையில் சாவி என்பதற்கும் படத்தில் விடை இருக்கிறது, படம் பார்க்கும்போது உங்களுக்குப் புரியும்,” என்றார்.

இப்படத்தின் பிஆர்ஓ-வான டயமண்ட் பாபுவிற்கு இது 600வது படம். எனவே, அவரை வாழ்த்தி அவருக்கு மாலை அணிவித்து சிறப்பித்தார் கமல்ஹாசன்.