‘விடுதலை’ படத்தில் கதையின் நாயகன், பெருமைப்படும் சூரி
24 Mar 2023
தமிழ் சினிமாவில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து ‘வெண்ணிலா கபடி குழு’ படத்தில் ‘பரோட்டா சூரி’ எனப் பெயர் வாங்கி பின்னர் பல படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்து முன்னணி காமெடி நடிகராக வலம் வந்தவர் சூரி.
தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் இந்த மாதம் 31ம் தேதி வெளியாக உள்ள ‘விடுதலை’ படத்தில் கதையின் நாயகனாக நடித்துள்ளார். அப்படம் பற்றி அவர் பேசுகையில்,
“சினிமாவில் நடிக்க ஆரம்பித்து காமெடி நடிகராக கொஞ்சம் வளர்ந்த பின் இயக்குனர் வெற்றிமாறன் படத்தில் சிறு கதாபாத்திரத்திலாவது நடிக்க வேண்டும் என ஆசைப்பட்டேன். அவரைச் சந்தித்து வாய்ப்பும் கேட்டேன். இந்த ‘விடுதலை’ படத்திற்கு முன்பாக வேறு கதைகளைப் படமாக்கத்தான் இருந்தார். கொரானோ காரணமாக அவை மாறிப்போனது. கடைசியில்தான் ‘விடுதலை’ கதையைப் படமாக்கலாம் என முடிவு செய்தார்.
‘விடுதலை’ படத்தில் குமரேசன் என்ற போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். இந்தக் கதாபாத்திரத்திற்கு கொஞ்சம் அப்பாவித்தனமாக முகம் தேவைப்பட்டதால் இயக்குனர் வெற்றிமாறன் என்னைத் தேர்வு செய்துள்ளார். இந்தக் கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக உடற்பயிற்சி செய்து பிட்னஸ் ஆக வைத்துக் கொண்டடேன். படப்பிடிப்பு ஆரம்பமாகி சில நாட்கள் நடித்த போது எனக்குள் இருந்த காமெடி நடிகர் சூரி கொஞ்சம் எட்டிப் பார்த்தான். ஆனால், இயக்குனர் வெற்றிமாறன் அந்த சூரி தேவையில்லை என்று என்னையும், என் நடிப்பையும் மாற்றினார்.
படத்தில் உள்ள ஒவ்வொரு காட்சியும் என்னை வேறொரு நடிகனாக நிச்சயம் காட்டும். இயக்குனர் வெற்றிமாறன் என்ன சொன்னாரோ அதை அப்படியே செய்து காட்டினேன். என்னாலும் இப்படி நடிக்க முடியும் என்பதை எனக்கும் காட்டினார் இயக்குனர் வெற்றிமாறன்.
படத்தில் விஜய் சேதுபதிக்கும், எனக்கும் சமமான விதத்தில்தான் காட்சிகள் இருக்கிறது.
இளையராஜா சார் இசையில் நான் நடிப்பது எனக்கு மிகவும் பெருமை. இப்படத்திற்கான பாடல் பதிவின் போது நானும் அமர்ந்திருந்தேன். முதல் முறையாக ஒரு நடிகர் முன்பு பாடல் பதிவு செய்தது அதுதான் முதல் முறை என இளையராஜா சார் சொன்னார். இதற்கு முன்பு அவர் இப்படி செய்ததே இல்லையாம். அவரது பாடல் பதிவைப் பார்க்கும் பாக்கியம் எனக்கும் கிடைத்தது.
இப்படத்திற்காக 150 நாட்கள் வரை படப்பிடிப்பு நடத்தினோம். அடர்ந்த காட்டுக்குள் படப்பிடிப்பு நடந்தது. இரண்டு வண்டிகள் மாறி, பின்னர் நடந்துதான் படப்பிடிப்பு தளத்தை அடைய முடியும். திடீர் திடீரென மழை பெய்யும். ஏதாவது ஒரு தடங்கல் வரும். 500 பேர் வரை படக்குழுவில் இருந்தார்கள். இதனால்தான் இந்தப் படப்பிடிப்புக்கான நாட்களும், பட்ஜெட்டும் அதிகமானது. அதையெல்லாம் சமாளித்து தயாரிப்பாளர் எல்ரெட் குமார் இந்தப் படத்தைத் தயாரித்தார்.
இந்தப் படத்தில் நடிப்பதற்காக பல படங்களின் வாய்ப்புகளை இழந்தேன். இருந்தாலும் சில முக்கிய படங்களைத் தவிர்க்காமல் நடித்தேன். இந்தப் படத்தில் கதையின் நாயகனாக நடித்தாலும் மற்ற படங்களில் காமெடி நடிகராகவும் நடிக்க வெற்றிமாறன் அனுமதி வழங்கினார். நான் கதையின் நாயகனாக நடிப்பது தெரிந்து ரஜினிகாந்த், சூர்யா, கார்த்தி, சிவகார்த்திகேயன், ஆர்யா உள்ளிட்ட பலரும் வாழ்த்தினார்கள். அடுத்தும் நாயகனாக நடிக்க வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது.
சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ‘கூழாங்கல்’ படத்தை இயக்கிய வினோத்ராஜ் இயக்கத்தில் ‘கொட்டுக்காளி’ படத்தில் நடித்துள்ளேன். ராம் இயக்கத்தில் ‘ஏழு கடல் ஏழு மலை’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். அடுத்து விக்ரம் சுகுமாரன் இயக்க உள்ள படத்திலும் நாயகனாக நடிக்கப் போகிறேன்,” என்றார்.
Tags: viduthalai, vetrimaaran, ilaiyaraaja, soori, vijay sethupathi, prakash raj