தாமதமாகிறது ‘விடுதலை 2’ வெளியீடு

09 Jul 2024

தீபாவளி வெளியீட்டில் இருந்து ‘விடுதலை 2’ பின்வாங்கும் என்பது உறுதியாகி இருக்கிறது.

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி, பவானி ஸ்ரீ, மஞ்சு வாரியர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘விடுதலை 2’. முதல் பாகத்துக்கு கிடைத்த வரவேற்பினால், இரண்டாம் பாகத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. எல்ரெட் குமார் தயாரித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்னும் முடியவே இல்லை.

இதனிடையே, தீபாவளிக்கு வெளியிடலாம் என்று படக்குழு திட்டமிட்டு விநியோகஸ்தர்களிடமும் தெரிவித்தது. இதற்கு இப்போது வாய்ப்பில்லை என்கிறார்கள். ஏனென்றால் இன்னும் 40 நாட்கள் படப்பிடிப்பு இருக்கிறதாம். ‘விடுதலை’ படத்தின் முதல் காட்சிக்காக ரயில் செட் போட்ட இடத்தில், இப்போது 2-ம் பாகத்துக்காக பெரிய கிராமத்து செட் போடப்பட்டு வருகிறது.

அந்த கிராமத்து செட்டில் தான் இறுதிகட்டப் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது. அங்கு சுமார் 40 நாட்கள் நடைபெறும் என்கிறார்கள். இதில் விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர் உள்ளிட்டோர் சம்பந்தப்பட்ட காட்சிகளை காட்சிப்படுத்த உள்ளார்கள். இன்னும் அரங்கம் அமைக்கும் பணிகளே முடியவடையவில்லை என்பதால், படப்பிடிப்பு எப்போது என்பதே தெரியவில்லை.

ஆனால், இதுவரை எடுக்கப்பட்ட காட்சிகளின் எடிட்டிங் பணிகளை முடித்து வைத்துவிட்டார் வெற்றிமாறன். தற்போது எடுக்கும் காட்சிகளை அதோடு இணைத்து இறுதிகட்டப் பணிகள் துவங்கும் என்கிறார்கள். இவை எல்லாம் முடித்து தீபாவளி வெளியீடு சாத்தியமில்லை என்பது மட்டும் உறுதி.

Tags: viduthalai 2 , vetrimaaran

Share via: