தீபாவளி வெளியீட்டில் ‘விடாமுயற்சி’ உறுதி

23 Jun 2024

அஜித் நடித்து வரும் ‘விடாமுயற்சி’ திரைப்படம் தீபாவளிக்கு வெளியிடுவதில் உறுதியாக இருக்கிறது.

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித், அர்ஜுன், த்ரிஷா, ஆரவ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் ‘விடாமுயற்சி’. லைகா நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைப்பாளராக பணிபுரிந்து வருகிறார். இதன் படப்பிடிப்பு முழுவதும் அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்று வருகிறது.

சரியான திட்டமிடல் இல்லாமல் பலமுறை இதன் படப்பிடிப்பு தடைப்பட்டது. இதனால் நடிகர்களின் தேதிகளும் வீணானது. இதன் காரணமாக ‘குட் பேட் அக்லி’ படத்தில் கவனம் செலுத்த தொடங்கினார் அஜித். தற்போது ஜூன் 24-ம் தேதி முதல் இறுதிகட்ட படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் தொடங்குகிறது.

இதனை ஒரே கட்டமாக முடித்துவிட்டு தான், சென்னை திரும்புகிறது படக்குழு. முதலில் தீபாவளி வெளியீட்டிற்கு திட்டமிட்டது படக்குழு. ஆனால், படப்பிடிப்பு தாமதத்தினால் வெளியீட்டில் மாற்றம் இருக்கும் என கருதப்பட்டது.

‘விடாமுயற்சி’ படக்குழுவினரோ படத்தின் முதல் பாதியை முழுமையாக முடித்து டப்பிங், பின்னணி இசை இல்லாமல் தயார் செய்து விட்டார்கள். இரண்டாம் பாதிக்கு மட்டுமே படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதனால், தீபாவளி வெளியீட்டில் எந்தவொரு மாற்றமும் இல்லை என்கிறது தயாரிப்பு தரப்பு.

தீபாவளிக்கு ‘விடாமுயற்சி’ அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் பட்சத்தில், இன்னொரு பெரிய படம் வெளியாக வாய்ப்பில்லை. இதர சிறு படங்கள் மட்டும் வெளியாகும்.

Tags: vidamuyarchi, ajith kumar

Share via: