வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் ஐசரி கே கணேஷ் தயாரிப்பில், கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், ஏஆர் ரகுமான் இசையமைப்பில், சிம்பு, சித்தி இத்னானி மற்றும் பலர் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த படம் ‘வெந்து தணிந்தது காடு’. இப்படம் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றதை அடுத்து படக்குழுவினர் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியை நடத்தினர்.

நிகழ்ச்சியில் நடிகர் நீரஜ் மாதவ் பேசுகையில்,

இது எனது முதல் தமிழ்ப் படம். சென்னையில் தான் எனது படிப்பை முடித்தேன். தமிழ்ப் படம் பண்ண வேண்டும் என்ற என் ஆசை இந்தப் படத்தில் நிறைவேறியுள்ளது. கௌதம் மேனன் சாரின் ரசிகனாக இருந்த எனக்கு, அவருடன் பணிபுரியும் வாய்ப்பு இந்தப் படத்தின் மூலமாக எனக்குக் கிடைத்தது. பல ஆண்டுகளுக்கு முன்னாடி சிலம்பரசன் அண்ணா ஒரு பேட்டியில் என்னை பாராட்டினார். இன்று அவருடன் நடித்துள்ளது மகிழ்ச்சி. ரகுமான் சாரின் இசையில் பாடியது எனக்கு மகிழ்ச்சி. படத்திற்கு நேர்மறையான விமர்சனம் வருவது மகிழ்ச்சியாக இருக்கிறது.

தயாரிப்பாளர் ஐசரி கே கணேஷ் பேசுகையில்,

படம் தமிழ்நாட்டைத் தாண்டி, பல இடங்களில் பெரிய வெற்றியைப் பதிவு செய்துள்ளது. இந்தத் திரைப்படத்தை எடுத்ததில் எங்கள் நிறுவனம் பெருமை அடைகிறது.  நடிகர் சிம்பு இந்தப் படத்தின் முத்து கதாபாத்திரமாக வாழ்ந்துள்ளார். இந்தப் படம் முழுவதிலும் அவருடைய நடிப்பு பெரிய தாக்கத்தை உருவாக்கியது. இந்தப் படத்திற்காக அவர் கண்டிப்பாக தேசிய விருது வாங்குவார், அதற்கு வேல்ஸ் நிறுவனம் உறுதுணையாக இருக்கும். இந்தப் படத்திற்காக அவர் கடின உழைப்பைக் கொடுத்துள்ளார். இயக்குனர் கௌதம் அவருடைய பாணியில் இல்லாமல், வேறு ஒரு பாணியில் இப்படத்தை இயக்கியுள்ளார். படத்தை வெற்றிப் படமாக அவர் மாற்றியுள்ளார். படத்தின் கூடுதல் சிறப்பு ஏ ஆர் ரகுமான் சார் தான். அவருக்கு எனது நன்றிகள். ஒளிப்பதிவாளர், எடிட்டர் மற்றும் அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.  படத்தின் இரண்டாம் பாகத்திற்கான பணிகள் நடைபெற்றுவருகிறது. படத்தை மக்களிடம் கொண்டு சேர்த்த ரெட் ஜெயண்ட் நிறுவனத்திற்கு நன்றி. வெந்து தணிந்தது காடு பாகம் 2  விரைவில் தயாராகும்.

இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் பேசுகையில்,

இந்தத் திரைப்படத்திற்கு நல்ல விமர்சனங்கள் வந்தது, அதன் மூலம் நிறைய இடங்களுக்கு படம் சென்றது. அது போல எதிர்மறையாக வந்த விமர்சனங்களுக்கும் நன்றி.  ஒரு திரைப்படம் செய்வது மிகவும் கடினமான விஷயமாக இருக்கும். அதற்குள் பல சிக்கல்களும் இருக்கிறது. அதைக் கடந்து தான்  இந்தத் திரைப்படம் உருவாகியுள்ளது. உங்களால் இந்தப் படம் பல இடங்களுக்கு சென்றது, அதற்கு உங்களுக்கு நன்றியை கூறிகொள்கிறேன். எனக்கு உறுதுணையாக இருந்த தயாரிப்பாளர் ஐசரி கணேஷுக்கு நன்றி. எனக்கு முழு சுதந்திரம் கொடுத்தார். நான் ஒரு கதையைக் கொண்டு வரும் போது, அதை என்னை நம்பி எப்பொழுதும் ஒத்துகொள்ளும் சிம்புவிற்கு நன்றி.  சிம்பு மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இதுபோன்ற ஒரு படத்தை எடுக்க எனக்கு உதவிகரமாக இருந்த சிம்புவிற்கும், தயாரிப்பாளருக்கும் நன்றி. படத்தின் வெற்றிக்கு ஏஆர் ரகுமான் அவர்கள் பெரும் பங்காற்றினார். அவருடைய மல்லிப் பூ பாடலை இப்போது அனைவரும் பாராட்டிக் கொண்டு இருக்கின்றனர் என்பது மகிழ்ச்சி.

சிலம்பரசன் பேசுகையில்,

என் படம் எந்த பிரச்சனையும் இல்லாமல் வெளியானது, இது தான் முதல் முறை. எனக்கே ஆச்சரியமாக இருந்தது. படம் இவ்வளவு வசூல் குவிக்கும் என நான் நினைக்கவில்லை. படத்தின் வெற்றி மிகப் பெரிய மகிழ்ச்சியைத் தந்துள்ளது. என்னை மாற்றிக்கொண்டு நடிக்க வேண்டும் என நினைத்தேன். முதலில் காதல் கதை தான் செய்வதாக இருந்தது. இந்தக் கதையைக் கேட்டவுடன் இதைச் செய்யலாம் என்றேன். இப்படம் தந்த கௌதம் மேனனுக்கு நன்றி. இவ்வளவு பெரிய படமாக மாற்றிய ஐசரி சாருக்கு நன்றி. இந்தப் படத்தில் ஒல்லியாக மாறி நடித்துள்ளேன். அதனால் சிலரால் என் உடம்பை கேலி செய்ய முடியவில்லை. ஒருவரின் உருவத்தை கேலி செய்யாதீர்கள். நான் பரவாயில்லை, ஆனால் அது பலருக்கு  வலியைத் தரும். இனி அடுத்தடுத்து நல்ல படங்களில் நடிப்பேன். வெந்து தணிந்தது காடு இரண்டாம் பாகத்தை ரசிகர்கள் இன்னும் ரசிக்கும்படி நல்ல ஆக்சனோடு எழுதுங்கள். இப்படத்தில் உழைத்த அனைவருக்கும்  நன்றி.