அதென்னமோ தெரியாது, தங்கப்பதக்கம் படத்தில் வரும் தத்திச்செல்லும் முத்துக்கண்ணன்சிரிப்பு.. பாடல்.

காஞ்சிபுரம் கிருஷ்ணா டாக்கீஸ்ல ரிலீஸ். அப்போ பார்த்ததிலிருந்து வாணி ஜெயராம் குரல் மேல் அப்படியொரு காதல்.

படத்தில் பாடும் கே.ஆர்.விஜயாவோடு வாணியும் நம்முள் ஊடுறுவினார்.. கொஞ்சநஞ்சமல்ல வெறித்தனமாக. பாடலில் வரும் ''காவல் தலைவன் ஞானத்தமிழன் எந்தன் துணைவன் இன்பக்குமரன்.. என்ற வரிகளை வாணி பாடும்போது, அதிலும் இரண்டாவது முறை இந்த வரிகளை இழுக்கும்போது என்ன கெமிஸ்ட்ரியோ ?

1974லிருந்து பாடல் உருகவைத்துக்கொண்டிருக்கிறது. ஒருவேளை நடை உடை பாவனை அனைத்திலும கே.ஆர் விஜயா மாதிரியே இந்த பள்ளிக்கூட டீச்சரின் தாக்கமா? 

இல்லை தோழிக்கும் இந்த சேம் வாய்ஸ் இருந்ததால் குடைந்துகொண்டே வந்த தாக்கமா? என்ன இம்சையோ போடா வெங்கடேசா...

அடுத்து எங்கம்மா சபதம். 

"அன்பு மேகமே இங்கு ஓடி வா பாடல்.." மேலே சொன்ன இரண்டு பாடல்களையும் விவித பாரதியில் கேட்கும்போதெல்லாம். மனசு காற்றில் பறக்கும்.

சரி வாணி மேட்டருக்கு வருவோம்.

இசைஞானியின் துள்ளல் இசை, பி.ஜெயச்சந்திரன் ஹம்மிங் கம் அழகான ஜதி, பரதம் தெரிந்த கியூட் ரேவதியின் நடனம், எல்லாவற்றிற்கு மேலாக ஒளிப்பதிவாளர் பிஎஸ். லோக்நாத்தின் கேமாரா, எவ்வளவு இடங்கள், எவ்வளவு கோணங்கள், எவ்வளவு ரம்மியங்கள். அற்புதமான காட்சிகளை கேமராவில் அடக்க மனுஷன் மிருகம் மாதிரி வேலைபார்த்திருப்பார்.  கே.பாலசந்தரின் புன்னகை மன்னன் படத்தின், கவிதை கேளுங்கள், கருவில் பிறந்தது ராகம் என்ற பாடலில்தான் இவ்வளவும். 

இத்தனை ஆச்சர்ய அம்சங்களையும் தன் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு அத்தனைக்கும் உயிர் வரச்செய்து பாடியிருப்பார் வாணி ஜெயராம். 

ஒரு மழைக்காலத்தில் காஞ்சிபுரம் சங்கம் தியேட்டரில வெளியான புன்னகை மன்னன் படம்.
எல்லா பாடல்களுமே குளுகுளுவென இருந்த நிலையில், பாத்திரத்தின் ரோஷத்தன்மையால் உண்டான இந்த பாடல் தியேட்டரையே கொஞ்சம் அனலில் தள்ளியது. 

வைராக்கியத்தில் ஆடும் ரேவதியைவிட பல மடங்கு அதிகமாய் வாணி ஜெயராமின் குரல் நின்ற இடத்திலிருந்ததே அவ்வளவு அனாயசமாக சுழன்று சுழன்று அடிக்கும். இன்றைக்கும் ஒரு முறை அந்த பாடலை பாருங்கள், ஆயிரம் வியப்புகள் மேலோங்கும்..

இந்த பாடல் மட்டுமல்ல பின்னனி பாடகி வாணி ஜெயராம் பாடிய பெரும்பாலான பாடல்கள் இப்படி வியப்பின் குறியீடுகளாவே இருக்கும்.

பாடலை உருக உருக கேட்கவைப்பதிலும் பாடும் பாத்திரங்களுக்குள் உட்புகுவதிலும் வாணிக்கு உள்ள திறமை, மிகவும் வியப்பானது..

எம்எஸ்வி இசையமைத்த தீர்க்க சுமங்கலி படத்தில் மல்லிகை என் மன்னன் மயங்கும் பாடல், தமிழகத்தின் பட்டிதொட்டியெல்லாம் ஹிட் அடித்த பாடல். சினிமாவை வெறுக்கும் சாஸ்த்ரீய சங்கீத கோஷ்ட்டிகள்கூட மெய்சிலிர்த்துப்போய் கேட்ட காதல் சரசப் பாடல், 

கூடத்துடிக்கும் ஆணின் முன்பு, வெட்கங்களையும் விலகல்களையும் வேண்டுமளவுக்கு காட்டிவிட்டு, இந்தா எடுத்துக்கோ என்று சரணடையும் பெண்மையை,
" என் தேவனே உன் தேவி நான், இவ்வேளையில் உன் தேவை என்னவோ…?" என்று வாணி ஜெயராமின் குரல் கேட்கும் அந்த நளினம், அழகு.. பெண்மை, தன் தன்மையை ஆணுக்கு ஊற்ற புனலாக மாறிய தருணம்.. வாணி வாணிதான்..

அவர் வாயில் பாடல் வரிகள் பாடலாவதைவிட பரசவத்தில் பறக்கவைத்த விதமே அதிகம்.. 

எம்எஸ்வி இசையில் ரஜினியின் பொல்லாதவன் படத்தில், அதோ வாராண்டி வாராண்டி வில்லேந்தி ஒருத்தன் பாடலில், 
மேகங்கள் இல்லாத வானில்லையே 
நீயின்றி எப்போதும் நானில்லையே 
என்று பாடிவிட்டு அடுத்து 
ஒன்னோடு ஒன்னாக, கண்ணோடு கண்ணாக என்று லைட்டாக உதறியபடி ஒரு ஸ்டைலில் பாடுவார். ஒருமுறைதான் வார்த்தைகளை உச்சரிப்பார். 
ஆனால் இருமுறை வருவதுபோல் லைட்டா பிரிந்து பிரிந்து வருவதுபோல கேட்கும். அது என்ன மேஜிக்கோ? ஒட்டு மொத்த பாடலையும் திரும்ப திரும்ப கேட்கவைத்து இம்சை பண்ணும்.

இளமை ஊஞ்சலாடுகிறது படத்தின்  ‘’ஒரே நாள் உனை நான் நிலாவில் பார்த்தது..’’ பாடல்.. 
"…நிலம் நான்…மழை நீ தயக்கம் என்ன ?
அந்த பாட்டையெல்லாம் வாணியின் நாவில் விழுந்த ஒவ்வொரு வார்த்தையும் என்னென்ன சுகத்தை கண்டன என்பதை விவரிக்க தனி புத்தகமே எழுதலாம்.

1975 ஆண்டு ரஜினி சினிமாவில் அறிமுகமான அபூர்வ ராகங்கள் படத்தில், வாணி ஜெயராம் குரல் ஆட்சி செய்ய மெல்லிசை மன்னர் ராகங்களுக்காகவே கோட்டை கட்டித்தந்திருப்பார். 

ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல், கேள்வியின் நாயகனே போன்ற பாடல்கள், அந்தக்காலத்தின் இசைத்தட்டுகளாக சுழன்று சுழன்று ரெக்கார் பிளேயரின் ஊசிகளையே சுலபத்தில் காலி செய்திருக்கும்.

எனக்காக நீ அழலாம் இயற்கையில் நடக்கும்
நீ எனக்காக உணவு உண்ண எப்படி நடக்கும்
நமக்காக பூமியிலே கடமைகள் உண்டு. 
அதை நமக்காக நம் கையால் செய்வது நன்று 
- கவிஞர் கண்ணதாசன் வரிகள் வாணி ஜெயராம் குரலில் நம் காதில் பாயும்போது.. மெய்சிலிக்காத தருணங்கள் உண்டா.  
இந்திய சினிமாவுக்கு கிடைத்த அரிய பொக்கிஷங்களில் டாப் லிஸ்ட்டில் வருவார் வாணி ஜெயராம். வங்கி ஊழியராய் வாழ்க்கையை தொடங்கிய அவரின் ஆரம்பம் வெகு
சுவாரஸ்யமானது.

மார்ச்,1969.. மும்பையில் முதன் முறையாக ஒரு இளம் பெண் இசைக்கச்சேரி செய்கிறார்..அந்த நிகழ்ச்சிக்கு எதேச்சையாக வருகிறார் வசந்த் தேசாய்..1940களிலும் 50களிலும் பட்டையை கிளப்பிய இசைமேதை.. 

1959ல் கூன்ஜ் உதி ஷெனாய் என்றொரு படம்.. நம்மூர் தில்லானா மோகனாம்பாள் படத்தில் சிவாஜி எப்படி என்பிஎன் சேதுராமன் சகோதரர்களின் நாதஸ்வர இசையை திரையில் தத்ரூபமாக காட்டி இசைக்கலைஞராக வியக்க வைத்தாரோ அதேபோல் ஷெனாய் வாத்திய கலைஞராக  ஜுப்ளி ஸ்டார் ராஜேந்திரகுமார் நடித்திருப்பார்..மன்னிக்கவும் வாழ்ந்து காட்டியிருப்பார்.. 

ஏனெனில் படத்திற்காக ஷெனாய் வாசித்தது புகழ்பெற்ற உஸ்தாத் பிஸ்மில்லா கான்.. பாரத ரத்னா பட்டியலில் இடம்பிடிக்கும் அளவுக்கு இந்தியாவின் அப்படியொரு இசைப்பொக்கிஷம் பிஸ்மில்லா கான்.. இப்படியெல்லாம் பல வரலாறு கொண்ட கூன்ஜ் உதி ஷெனாய் படத்துக்கு இசையமைத்தவர்தான் வசந்த் தேசாய்.. 

எம்ஜிஆர் தனது திரையுல மானசீக குருக்களில் ஒருவராய் பெரிதும் போற்றிய நடிகர் இயக்குர் தயாரிப்பாளர் கதாசிரியர் என பன்முகம் கொண்ட ஜாம்பவான் வி. சாந்தாராமுக்கு பெரும் புகழை தேடித்தந்த படங்களெல்லாம் இந்த வசந்த் தேசாய்தான் இசை..

இப்படிப்பட்டவர்தான் அன்றைய இளம் பெண்ணின் கச்சேரியை கேட்க நேரிட்டது.. மனுஷன் ஆடிப்போய்விட்டார். 
குரலா இது என்று வியந்து வியந்து. தான் இசையமைத்த Guddi படத்தில் பாட உடனே வாய்ப்பு கொடுத்தார்.. அதுவும் எப்படி? படத்தில் இடம் பெற்ற அத்தனை பாடல்களையும் பாடும் அளவுக்கு.

1971 Guddi படம் வெளியானது.. போலேரே பப்பிஹரா என்று கதாநாயகி பாடும் ஒரு பாட்டு..திரையில் பாடியவர் ஜெயா பாதுரி என்ற பெண்.. கதாநாயகியாக அறிமுகம்.. பின்னாளில் அமிதாப்பச்சனை மணந்து ஜெயா பச்சனாக மாறியவர்.
போலேரே பப்பிஹரா பாடல் அப்படியொரு ஹிட்டு.. படத்தையும் சேர்த்தே அந்த பாடல் அப்படியே மேலே தூக்கிக்கொண்டுபோய் வசூலை வாரிக்குவித்தது.. 

இந்த படத்தைதான் நமது இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் ஜெய்சங்கர் கமல், ஜெயசித்ரா ஆகியோரை வைத்து ‘சினிமா பைத்தியம்’ என தமிழில் ரீமேக் செய்தார்

முதல் படத்திலேயே இப்படி சாதனை படைத்த அந்த குரலுக்கு சொந்தக்காரர் வேறு யாருமல்ல, நம்ம இசைமேதை பின்னணி பாடகி வாணி ஜெயராம் அவர்கள்தான்.. 

லதா மங்கேஷ்கர், ஆஷா போன்ஸ்லே என்ற சகோதரிகள் குரல் வளத்தால் சாம்ராஜ்யம் நடத்திவந்த இந்திய திரையுலகை வாணி ஜெயராமின் குரலும் இணையாக தாலாட்ட ஆரம்பித்தது..

இந்தி திரையுலகில் புகழ்பெற்ற முன்னணி இசையமைப்பாளர்கள் அத்தனை பேரின் இசையிலும் வாணி ஜெயராம் குரல் ஒலிக்கத்தவறவேயில்லை..

 முகமது ரஃபி, கிஷோர் குமார் உட்பட அத்தனை பின்னணி ஜாம்பவான்களின் குரலோடும் வாணியின் குரல் சேர்ந்து அதகளம் செய்தது. சாஸ்திரிய சங்கீத கச்சேரிகளுக்காக அடிக்கடி சென்னை வந்துபோக வேண்டியிருந்ததால் 1974ல் சென்னைக்கே இடம் பெயர்ந்தார் வாணி.

இங்கே சுசீலாவும் எஸ்.ஜானகியும் கொடிகட்டிப்பறந்த நேரம்.. எம்எஸ்வி விஸ்வநாதன் புண்ணியத்தில் தமிழிலும் வாணி வெற்றிக்கொடி ஏற்ற ஆரம்பித்தார்..

மற்றவர்கள் எளிதில் பின்பற்றி பாடமுடியாத அளவுக்கு குரல்வளமும், ஏற்ற இறக்கங்களை காட்டுவதில் அசாத்திய திறமையும் வாய்ப்பது என்பது அபூர்வ ரகம்..

இன்றைக்கும் மேடைகச்சேரிகளில் பாடுபவர்கள், இப்படிப்பட்ட அபூர்வ ராக குரலை எட்டிப்பிடிக்க கடுமையாக போராடவேண்டி வரும். முகபாவனைகளை எப்படியெல்லாமோ கஷ்டப்பட்டு மாற்றி மாற்றி மாற்றினால்தான் வாணியின் பாடலை கொஞ்சமாவது தேற்ற முடியும்... நாம் கீழே சாம்பிளுக்காக போடும் பாடல்களெல்லாம் இப்படிப்பட்ட ரகத்தை சேர்ந்தவைதான்

பாடலை கேட்கும்போது இனிமையாக இருக்கும்.. அதே பாடலை இன்னொருவர் பாட கேட்கும்போதுதான் வாணி ஜெயராமின் தனித்துவமே தெரியும்.. அந்த அபூர்வ ராகம்தான் பாடகி வாணி ஜெயராம்..

சங்கர் கணேஷ் இசையில் பாலைவனச்சோலை படத்தின் மேகமே மேகமே பால் நிலா காயது என்ற பாட்டில், எனக்கொரு மலர்மாலை நீங்க வாங்க வேண்டும்..அது எதற்கோ? என்று கேட்டு நிறுத்துவார். கேட்டு உருகாத உள்ளம் ஏது?
என் கல்யாண வைபோகம் உன்னோடுதான்.. (அழகே உன்னை ஆராதிக்கிறேன்), அமுதோ தமிழில் எழுதும் ( மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்)  என் உள்ளில் எங்கோ ஏங்கும் ஜீவன் (ரோசாப்பு ரவிக்கைக்காரி)
அடுக்கிக்கொண்டே போகலாம் அந்த இனிமையின் பட்டியலை..

ஹிந்தி, உருது, மராத்தி, குஜராத்தி, ஒரியா, போஜ்புரி, பெங்காலி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் தமிழ் என நாட்டின் அத்தனை மொழிகளிலும் இசையருவியை பாயவிட்ட அற்புதமான குரலரசி.. 

இருந்தும் தமிழ்சினிமா பிற்காலத்தில் அவரை அனுராதா போன்ற கவர்ச்சி நடிகைகளின் காபரே டான்சுக்கு மட்டுமே பெருமளவு பயன்படுத்தியது காலத்தின் கொடுமை.

பாடலை விளக்கும்போது புரிந்துகொள்வதில் அப்படியொரு கச்சித ஆற்றல் கொண்டவர் என்பதால் இசைஞானி வாணி ஜெயராமை, செல்லமாக அழைப்பது, ‘கம்ப்யூட்டர்’ என்றே.

சமீபத்தில்தான் இந்திய அரசு அவருக்கு ‘பத்மபூஷண்’ பட்டத்தை அறிவித்தது. அதை வாங்குவதற்குள் மறைந்துவிட்டார்.

மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகப்புத்தகப் பதிவிலிருந்து...

https://www.facebook.com/Ezumalai.venkatesan.16