1980களில் புகழ் பெற்று விளங்கிய நாடகமான ‘வள்ளி திருமணம்’ நாடகத்தை பின்புலமாகக் கொண்டு காமெடி ஆக்‌ஷன் த்ரில்லர் திரைப்படமாக “வள்ளி மயில்” திரைப்படம் உருவாகி வருகிறது.

வெண்ணிலா கபடிகுழு, நான் மகான் அல்ல, ஆதலால் காதல் செய்வீர், ஜீவா போன்ற பல வித்தியாசமான படைப்புகளால் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்ற சுசீந்திரன் இயக்கத்தில், விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கும் படம் இது.

இந்தக் கூட்டணி முதல் முறையாக இணைவதால் ரசிகர்களிடம் இப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆதலால் காதல் செய்வீர், மாவீரன் கிட்டு, வில் அம்பு போன்ற படங்களைத் தயாரித்த தாய் சரவணன், அவரது நல்லுசாமி பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் இப்படத்தைத் தயாரிக்கிறார்.

திண்டுக்கல் மாநகரில் 1980 காலகட்ட பின்னணியை கண் முன் கொண்டு வரும் வகையில், 1 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு,  இப்படத்தின் காட்சிகள் படமாக்கப்பட்டது.

மிகுந்த பொருட் செலவில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தற்போது இனிதே  நிறைவடைந்துள்ளது.

விரைவில் இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் துவங்கவுள்ளது. இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பிற்காக, பழமையான சென்னையை கட்டமைக்க,  பிரம்மாண்டமான செட் அமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

சென்னையைத் தொடர்ந்து டெல்லியில் மிக முக்கியமான காட்சிகள் படமாக்கப்பட உள்ளது.

இப்படத்தில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்க, ஃபரியா அப்துல்லா கதாநாயகியாக நடிக்கிறார். சத்யராஜ், பாரதிராஜா, புஷ்பா படப்புகழ் சுனில், தம்பி ராமையா, ரெடின் கிங்ஸ்லி, GP முத்து ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். ஒளிப்பதிவு -  விஜய் சக்ரவர்த்தி, எடிட்டர் - ஆண்டனி, ஆர்ட் டைரக்டர் - உதயகுமார், மக்கள் தொடர்பு - சதீஷ், பப்ளிசிட்டி டிசைன்ஸ் - ட்யூனி ஜான் ஆகியோர் குழுவில் பணியாற்றுகின்றனர்.

படத்தின் முதல் பார்வை,  டீஸர் குறித்த விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.