டிஜிட்டல் தரத்தில் வெளியாக உள்ள ‘உலகம் சுற்றும் வாலிபன்’

09 Mar 2021

எம்ஜிஆர் பிக்சர்ஸ் சார்பில் எம்ஜிஆர் தயாரித்து, இயக்கி, இரு வேடங்களில் நாயகனாக நடித்த படம் ‘உலகம் சுற்றும் வாலிபன்’.

1973ம் ஆண்டு வெளிவந்த இந்தப் படம் அக்காலத்தில் பல தடைகளைக் கடந்து வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. அதன் பிறகு இந்தப் படத்தை பல முறை ரி-ரிலீஸ் செய்து வெளியிட்டும் ஒவ்வொரு முறையும் பல ஊர்களில் அந்த சமயத்தில் வெளியாகும் புதிய படங்களுக்குப் போட்டியாக ஓரிரு வாரங்கள் வரை ஓடி சரித்திரம் படைத்திருக்கிறது.

விஞ்ஞானியான முருகன், மின்னலைப் பற்றி ஆராய்ச்சி செய்து, அதை ஆக்கபூர்வ பணிக்கு பயன்படுத்த நினைப்பார். அத்திட்டத்தின், 'பார்முலா'வை வில்லன் கூட்டம், அபகரிக்க முயற்சி செய்யும். வில்லன்களின் அந்த சதியை, விஞ்ஞானியின் தம்பியும், புலனாய்வுத் துறை அதிகாரியுமான ராஜூ எப்படி முறியடிக்கிறார் என்பதுதான் படத்தின் கதை.

முருகன், ராஜூ என இரண்டு கதாபாத்திரங்களையும் எம்.ஜி.ஆர்., ஏற்று நடித்திருப்பார். படத்தில் லதா, மஞ்சுளா, சந்திரகலா, தாய்லாந்து நடிகை மெட்டா ரூங்கரட் என, நான்கு கதாநாயகிகள். நாடு, நாடாக பயணிக்கும் சர்வதேச கதை, அதைத் திறமையாக கையாண்டு இருப்பார், இயக்குனர் எம்.ஜி.ஆர்.

எம்எஸ் விஸ்வநாதன் இசையில், கண்ணதாசன், வாலி, புலமைப்பித்தன் ஆகியோர், பாடல்களை எழுதினர். 'நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும், பன்சாயி, அவள் ஒரு நவசர, லில்லி மலருக்கு, பச்சைக்கிளி முத்துச்சரம், நிலவு ஒரு பெண்ணாகி, சிரித்து வாழ வேண்டும், தங்கத் தோணியிலே, உலகம், உலகம்...'’ உட்பட, அனைத்துப் பாடல்களும் சூப்பர் ஹிட் பாடல்களாக அமைந்தன. 

தமிழ் சினிமா உலகில் ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படைத்த சாதனைகள் பல உண்டு. 

இப்போது டிஜிட்டல் தொழில் நுட்பத்துடன் டால்பி அட்மாஸ் சவுண்டுடன் தியேட்டர்களில் கோடை விடுமுறையில் வெளியாக இருக்கிறது. 

ரிஷி மூவிஸ் சார்பில் சாய் நாகராஜன் வழங்க, உலகம் முழுவதும் சரோஜா பிலிம்ஸ் வெளியிட, தமிழகம் முழுவதும் 7 ஜி பிலிம்ஸ் மற்றும் சரோஜா பிலிம்ஸ் நிறுவனம் இணைந்து வெளியிடுகிறார்கள்.

Tags: mgr, manjula, latha, ms viswanathan, ulagam sutrum valiban

Share via: