’டாக்சிக்’ வெளியீட்டில் மாற்றம்
27 Jul 2024
‘டாக்சிக்’ வெளியீட்டில் மாற்றம் இருக்கும் என கூறப்படுகிறது.
‘கே.ஜி.எஃப் 2’ படத்துக்குப் பிறகு ‘டாக்சிக்’ படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் யஷ். கீது மோகன்தாஸ் இயக்கி வரும் இந்தப் படத்தினை கே.வி.என் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறது. இதில் நயன்தாரா, கைரா அத்வானி, ஹியூமா குரோஷி உள்ளிட்ட பலர் யஷுடன் நடித்து வருகிறார்கள்.
இந்தப் படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பின் போது, 2025-ம் ஆண்டு ஏப்ரல் 10-ம் தேதி அனைத்து மொழியிலும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், இப்போது அதற்கு வாய்ப்பில்லை எனத் தெரிகிறது. ஏனென்றால் இன்னும் 100 நாட்கள் வரை படப்பிடிப்புக்கு பாக்கி இருக்கிறது. அதனை முடித்து இறுதிகட்டப் பணிகள் முடிக்கவும் தாமதமாகும் எனவும் கூறப்படுகிறது.
இதனால், 2025-ம் ஆண்டு ஏப்ரல் 10-ம் தேதி வெளியீட்டுக்கு சாத்தியமில்லை என்கிறார்கள். புதிய வெளியீட்டு தேதி படத்தின் அடுத்த அறிவிப்பில் இருக்கும் எனவும் கூறப்படுகிறது. ’டாக்சிக்’ படத்தினை முடித்துவிட்டு, இந்தியில் உருவாகும் ‘ராமாயணம்’ படத்தில் கவனம் செலுத்தவுள்ளார் யஷ். இதில் ராவணனாக நடிப்பது மட்டுமன்றி, தயாரிப்பாளராகவும் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags: toxic, yash