முற்றிய மோதல்: படத்தை இணையத்தில் வெளியிட்ட இயக்குநர்
15 May 2024
டோவினோ தாமஸ் உடன் ஏற்பட்ட மோதலால், படத்தினை இணையத்தில் வெளியிட்டுள்ளார் இயக்குநர் சனல் குமார் சசிதரன்.
சனல் குமார் சசிதரன் இயக்கத்தில் டோவினோ தாமஸ் நடித்துள்ள படம் ‘வழக்கு / தி க்யூரல்’. இந்தப் படம் சுமார் 2 வருடங்களாக தயாரிப்பில் இருக்கிறது. மேலும், பல்வேறு திரைப்பட விழாக்களிலும் திரையிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் தயாரிப்பு, உருவாக்கம் என அனைத்திலும் டோவினோ தாமஸ் – சனல் குமார் சசிதரன் இருவருக்கும் மோதல் ஏற்பட்டது.
தற்போது இந்த மோதல் விஸ்வரூபம் எடுத்துள்ளது. தனது பார்வைக்காக மட்டுமே, தனது விமியோ தளத்தில் ‘வழக்கு’ படத்தினை வைத்திருந்தார் சனல் குமார் சசிதரன். அதனை அனைவரும் பார்ப்பது போல் மாற்றி, தனது சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இது மலையாள திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக சில தினங்களுக்கு முன்பு டோவினோ தாமஸ் விளக்கம் அளித்திருந்தார். அதில் இயக்குநரால் மட்டுமே ஓடிடியில் கூட படத்தை வெளியிட முடியவில்லை. சனல் குமார் சசிதரனின் முந்தைய படங்கள் போல இந்தப் படம் திரைப்பட விழாக்களில் வரவேற்பினை பெறவில்லை என்று பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Tags: tovino thomas, vazhakku, malayalam