தியேட்டர்கள் திறக்க அனுமதி, திரையுலகினர் மகிழ்ச்சி

31 Oct 2020

இந்தியாவில் கொரானோ தொற்று பரவிய மார்ச் மாத மத்தியில் தியேட்டர்கள் மூடப்பட்டன. தொற்றின் தாக்கம் அதிகமிருந்ததால் தியேட்டர்களைத் திறக்க ஆறு மாதங்களுக்கும் மேலாக அரசுகள் அனுமதி வழங்கவில்லை.

அக்டோபர் 15 முதல் இந்தியாவில் சில மாநிலங்களைத் தவிர, மற்ற மாநிலங்களில் 50 சதவீத இருக்கைகள் மற்றும் கட்டுப்பாடுகளுடன் தியேட்டர்கள் திறக்க அனுமதி வழங்கப்பட்டது.

ஆனால், தமிழ்நாடு அரசு அக்டோபர் 15ம் தேதியன்று தியேட்டர்களைத் திறக்க அனுமதி தரவில்லை. தீபாவளிக்கு முன்னதாக தியேட்டர்களைத் திறக்க எப்படியாவது அனுமதி வாங்கவிட வேண்டும் என தியேட்டர்காரர்கள் அரசை அணுகி வந்தனர். அக்டோபர் 18ம் தேதி சுகாதாரக் குழு கூட்டத்திற்குப் பிறகே அது பற்றி அரசு முடிவெடுக்கும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

சுகாதாரக் குழு கூட்டத்திற்குப் பின்னர் வெளியான செய்திகளில் நவம்பர் மாதத்திலும் தியேட்டர்களைத் திறக்க அனுமதி கிடைக்காது என்றே தகவல் பரவியது.

இந்நிலையில் சற்று முன் மாநில அரசு அறிவித்த நவம்பர் மாதத் தளர்வுகளில் நவம்பர் 10 முதல் தியேட்டர்களைத் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 50 சதவீத இருக்கைகளுடன் தியேட்டர்களை திறக்கலாம் என்று தெரிவித்துள்ளார்கள். மற்ற கட்டுப்பாடுகள் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்த சில நாட்களில் வெளியாகும்.

தியேட்டர்களைத் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதை அடுத்து தமிழ்த் திரையுலகினர் பலரும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். நவம்பர் 14ம் தேதி தீபாவளி வருவதால் அன்று முதலோ அதற்கு முன்னதாக தியேட்டர்களைத் திறக்கும் நவம்பர் 10ம் தேதி முதலோ அல்லது வெள்ளிக்கிழமையான நவம்பர் 13  முதலோ சில புதிய படங்கள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இருப்பினும், கொரானோ பயத்தை மீறி மக்கள் எப்படி தியேட்டர்களுக்கு வருவார்கள் என்பது தியேட்டர்களைத் திறந்த பிறகுதான் தெரியும்.

Tags: tamil cinema, tamilnadu, theaters

Share via: