என் அம்மாவை கவனித்தேன், படத்தில் நடித்தேன் - ஐஸ்வர்யா ராஜேஷ்!

25 Jan 2023

இயக்குநர் ஆர்.கண்ணன் இயக்கத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் "தி கிரேட் இந்தியன் கிச்சன்" படத்தை துர்காராம் சௌத்ரி மற்றும் நீல் சௌத்ரி தயாரித்துள்ளார்கள். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது.

நடிகை சுஹாசினி மணி ரத்னம் பேசும்போது,

இந்த விழாவிற்கு கண்ணன் அழைக்கும்போது, அவர் அழைத்து எப்படி வராமல் இருப்பேன் என்று ஒப்புக் கொண்டேன். இப்போது இருக்கும் புது இயக்குநர்கள் அனைவரும் இவரிடம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன். ஒரு காட்சியை 12 நாட்கள் படப்பிடிப்பு எடுக்கும்போது, ஒரு படத்தையே 12 நாட்களிலேயே எடுத்து விடுகிறார்.

சென்னையில் நல்ல ரசனையான நிகழ்ச்சி நடந்தால் நிச்சயம் போய் பாருங்கள். அப்போது தான் நாம் வளர முடியும். எனக்கு திறமை இருக்கிறது என்று நினைக்காமல் எல்லாவற்றையும் போய் பாருங்கள், கற்றுக் கொள்ளுங்கள். மெட்ராஸ் டாக்கீஸ்  குழுவில் நகைச்சுவை வேண்டுமென்றால் கண்ணனை கூப்பிடுங்கள் என்று தான் கூறுவோம். அந்த அளவு நகைச்சுவை உணர்வு கொண்டவர். அப்படிபட்ட அவர் இந்த சீரியசான படத்தையும் அருமையாக எடுத்துள்ளார். 

ஐஸ்வர்யாவை நான் பார்த்துக்கொண்டே இருக்கிறேன். நான், ரேவதி போன்றோர்கள் நீண்ட காலமாக திறமையானவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க மறுக்கிறார்கள் என்று வருத்தப்பட்டுக் கொண்டிருந்த வேளையில், ஐஸ்வர்யாவை பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது.

தெலுங்கில் நான் முன்னணி நடிகையாக இருந்ததற்கு இயக்குநர் தான் காரணம். அந்த காலத்திலேயே பெண்களை புரிந்து கொண்ட இயக்குநர்கள் கே.பாலசந்தர் சாரும் தான்.

கேரளாவில் விருது குழுவில் இடம் பெற்ற 9 பேர்களில் நான் ஒருவள் தான் பெண். அவர்களிடம் சண்டையிட்டு இதுதான் சிறந்த படம் என்று பார்க்க வைத்தேன்.

இந்த படம் நிச்சயம் எல்லோரிடமும் மாற்றம் கொண்டு வரும். படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள் என்றார்.

படத்தின் இயக்குநர் ஆர்.கண்ணன் பேசும்போது,

12 படங்கள் இயக்கியிருக்கிறேன் என்றால் அதற்கு உங்களுடைய ஆதரவு தான் காரணம். சுஹாசினி மேடம் பேச்சு எளிமையாக, தெளிவாக இருந்தது. கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் சுஹாசினி மேடம் தான் என்னை உதவி இயக்குநராக மணி சாரிடம் சேர்த்துவிட்டார்.

இன்று வேகமாக இயக்குகிறேன் என்றால், மணி சாரிடம் கற்றுக் கொண்டது தான் காரணம். காலை 6.30 மணிக்கெல்லாம் முதல் ஷாட் எடுத்து விடும் பழக்கம் கொண்டவர் மணி சார் . மிலிட்டரி வீரர் போல உழைப்போம். அன்று கற்று கொண்டது.. இன்று வேகமாக நல்ல படங்களை எடுக்க முடிகிறது. 

எல்லா அம்சங்களும் இல்லாமல் இறுக்கமாக இருக்கும் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்புக் கொண்ட ஐஸ்வர்யா ராஜேஷுக்கு நன்றி. மலையாளத்தில் நிமிஷா சிறப்பாக நடித்திருந்தார். அதை ஐஸ்வர்யா ராஜேஷ் சரியாகப் புரிந்துகொண்டு சிறப்பாக நடித்திருந்தார். நல்ல படங்கள் ஐஸ்வர்யாவிடம் செல்வதற்கு அவருடைய ஈடுபாடு தான். ஒளிப்பதிவாளர் பாலு சார் பிறர் கேட்காமலேயே உதவி செய்வார். திறமைகள் நிறைய உடைய அற்புதமான மனிதர். 20 வருடங்கள் கழித்தும் அவர் முன்னணி ஒளிப்பதிவாளராக இருப்பார். எது வேண்டுமோ அதை சண்டைப் போட்டு வாங்கிக் கொள்வார். 

ஜீவிதா, ஹிருதயாவிற்கு நன்றி. ஒரு முக்கியமான காட்சியில் சிறப்பாக நடித்திருக்கிறார் கலைராணி. போஸ்டர் நந்தகுமார் சார் கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். அவரின் நடிப்பைப் பார்த்து என் மனைவிக்கு அவரை அடிக்கும் அளவிற்கு கோவம் வந்தது.
நான் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களில் ஜான்சன் சாரும் ஒருவர்.

இப்படத்தின் இசைத்தட்டை ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் சுஹாசினி மேடம் வெளியிட எனது மனைவி மது கண்ணன் பெற்றுக் கொள்வார். எனது மனைவி உண்மையாகவே தி கிரேட் இந்தியன் கிச்சன் தான் என்றார்.

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பேசும்போது,
இந்த நிகழ்ச்சிக்கு வருகைப் புரிந்த சுஹாசினி மேடமிற்கு நன்றி. இயக்குநர் கண்ணன் ஒரு படத்தை மறுஉருவாக்கம் செய்ய வேண்டும் என்று கேட்கும்போது, முதலில் தயங்கினேன். படம் பாருங்கள் என்று கூறியதும் பார்த்தேன். மறுஉருவாக்கம் என்றாலே ஒப்பீடு வரும். அதேபோல், எனக்கும் ஒப்பீடும், குழப்பமும் இருந்தது. 2, 3 நாட்கள் என் அம்மாவை கவனித்தேன். சமையலறைக்கு செல்வார், வேலை பார்ப்பார் திரும்ப வருவார். இதையே தொடர்ந்து செய்துக் கொண்டிருந்தார். ஆனால், இத்தனை ஆண்டுகளாக நான் இதை கவனித்ததே இல்லை. அன்று தான் இந்த படத்தில் நடிக்க வேண்டும் என்று முடிவு செய்தேன்.

மேலும், கிராமத்தில் இருக்கும் பெண்களின் முழு வாழ்க்கையும் சமையலறையிலேயே கழிந்து விடுகிறது. அதற்காகவே இப்படத்தில் நடிக்க வேண்டும் என்று நினைத்தேன்.

இந்த வாய்ப்பை கொடுத்த இயக்குநர் கண்ணன் சாருக்கு நன்றி. நிமிஷாவின் நடிப்பை 50 சதவிகிதம் நடித்திருந்தாலே நான் சந்தோஷப்படுவேன். என்னை அழகாக காட்டியிருந்ததற்கு நன்றி. எனக்கு ஜோடியாக நடித்த ராகுல் ஒரு இயக்குநர். இந்த படத்தில் நடிக்கும் போது நான் இதுபோன்ற ஆள் இல்லை என்று கூறினார்.

இதுபோன்ற சிறந்த படத்திற்கு அனைவரும் ஆதரவு தர வேண்டும் என்றார்.

Tags: the great indina kitchen , r kannan, suhasini, aishwarya rajesh , ஐஸ்வர்யா ராஜேஷ், ஆர் கண்ணன்

Share via: