தமிழில் தெலுங்கு தயாரிப்பாளர்களின் ஆதிக்கம்

04 Apr 2024

தெலுங்கு தயாரிப்பாளர்கள் தொடர்ச்சியாக தமிழ் படங்களை தயாரிக்க தொடங்கவுள்ளனர்.

தற்போது தமிழ் சினிமாவில் தேக்க நிலை உருவாகி இருக்கிறது. பல்வேறு படங்களின் ஓடிடி, தொலைக்காட்சி, இந்தி உரிமைகள் என வாங்குவதற்கு ஆளில்லை. மேலும், படங்களை முன்வைத்து பைனான்ஸ் வழங்குவதை நிறுத்திவிட்டார்கள். இதனால் தமிழ் சினிமாவிற்குள் பணபுழக்கம் என்பது முற்றிலுமாக குறைந்துவிட்டது.

முன்னணி நடிகர்கள் படத்தின் பணிகள் மட்டுமே எந்தவொரு தடையுமின்றி நடைபெற்று வருகிறது. இந்த சூழலை பயன்படுத்தி பல்வேறு தெலுங்கு திரையுலக தயாரிப்பாளர்கள் தமிழில் படம் தயாரிக்க களமிறங்கி இருக்கிறார்கள்.

ஸ்ரீ வெங்கடேஸ்வர கிரியேஷன்ஸ், டிவிவி நிறுவனம், பீப்பீள் மீடியா பேக்டரி, மைத்ரி மூவி மேக்கர்ஸ் ஆகிய நிறுவனங்கள் தொடர்ச்சியாக தமிழில் படங்கள் தயாரிக்க முன்வந்துள்ளன. இதில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் மற்றும் பீப்பீள் மீடியா பேக்டரி நிறுவனத்துக்கு தனியாக தனுஷ் தேதிகள் கொடுத்திருக்கிறார்.

டிவிவி நிறுவனத்துக்கு விஜய், மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்துக்கு அஜித் ஆகியோர் தேதிகள் கொடுத்துவிட்டார்கள். இது போல் முன்னணி நடிகர்களின் படங்கள் மட்டுமன்றி, தொடர்ச்சியாக சிறு முதலீட்டு படங்களையும் தயாரிக்க இவர்கள் அனைவரும் முன்வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

முன்னணி தெலுங்கு தயாரிப்பாளர்கள் தமிழ் சினிமாவுக்கு வந்திருப்பது, எந்தமாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது வரும் காலத்தில் தெரியவரும்.

Tags: telugu producers, mythri movie makers, dvv entertainment

Share via: