தியேட்டர்களில் 100 சதவீத அனுமதி ரத்து - தமிழ்நாடு அரசு
08 Jan 2021
கொரானோ தளர்வுகளுக்குப் பிறகு தமிழ்நாட்டில் தியேட்டர்களை கடந்த வருடம் நவம்பர் 10ம் தேதி முதல் 50 சதவீத இருக்கைகளுடன் திறந்து கொள்ள மாநில அரசு அனுமதி வழங்கியது.
அதை 100 சதவீதமாக மாற்ற வேண்டும் என திரையுலகத்தைச் சேர்ந்த பல சங்கங்கள் கோரிக்கை வைத்தன. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு அவர்களின் கோரிக்கையை ஏற்று 100 சதவீத இருக்கைகளுக்கு அரசு அனுமதி வழங்கியது.
ஆனால், அது மத்திய அரசின் கொரானோ வழிகாட்டு நெறிமுறைகளின் படி தவறானது என மாநில அரசுக்கு மத்திய அரசு சுட்டிக் காட்டியது. மேலும், சென்னை, மதுரை உயர்நீதிமன்றங்களில் மாநில அரசின் அனுமதியை எதிர்த்து வழக்கும் தொடரப்பட்டது. அதை விசாரித்த இரண்டு நீதிமன்றங்களும் 50 சதவீதத்தை மட்டுமே வரும் ஜனவரி 11ம் தேதி வரை தொடர வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது. மாநில அரசு இது குறித்து சரியான முடிவெடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தது.
இதையடுத்து தமிழக அரசு சார்பில் சற்று முன்னர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் 100 சதவீத அனுமதியை ரத்து செய்து மறு உத்தரவு வரும் வரை 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி என தெரிவித்துள்ளது.
உயர்நீதிமன்ற உத்தரவுப்படி கூடுதல் காட்சிகளை திரையிட்டுக் கொள்ள திரையரங்குகளுக்கு அனுமதி வழங்கப்படுவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி கிடைக்கலாம் என்ற சூழலில்தான் ‘மாஸ்டர், ஈஸ்வரன்’ ஆகிய படங்களின் வெளியீடு பொங்கலுக்கு அறிவிக்கப்பட்டது. இப்போது மீண்டும் 50 சதவீதம் மட்டுமே அனுமதி என்பதால் அவர்கள் தங்கள் வெளியீட்டை மாற்றிக் கொள்வார்களா அல்லது தொடர்வார்களா என்ற பரபரப்பு திரையுலகில் ஏற்பட்டுள்ளது.
Tags: master, eeswaran, tn govt, tamilnadu government, theaters permission