விஜய் டிவியில் ‘களத்து வீடு’ - மண் மணம் மாறாத தொடர்
30 Oct 2015
விஜய் டிவியில் வரும் நவம்பர் 2ம் தேதி திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ள புத்தம் புதிய தொடர் ‘களத்து வீடு’.
சமீப காலமாக பல வித்தியாசமான தொடர்களை ஒளிபரப்பி பெண்கள் மனதிலும், நேயர்கள் மத்தியிலும் தொடர்கள் மூலமும் தனக்கென ஒரு தனி இடத்தை விஜய் டிவி பிடித்து வருகிறது.
அந்த விதத்தில் ஒளிபரப்பாக உள்ள புதிய தொடர்தான் ‘களத்து வீடு’.
மதுரை மாவட்டம், மதிப்பனூர் கிராமம். வைகை ஆற்றின் பாச(ன)த்தால் வயல் வெளிகளும், தோப்புகளுமாய் அழகு நிறைந்தது. வாக்கப்பட்டு தீர்த்துவிடப்பட்ட பெண், புருசன் வீட்டுக்குப் போகாதது போல, வைகை செல்லாத பகுதிகளில் சீமைக் கருவேலையும், கற்றாழையும், வறண்ட கரடுகளும் கொண்ட பாலைப் பகுதிகளும் உண்டு.
தன் தாயைப் போல தன் கிராமத்தை ஆழமாக நேசித்து தன் மண்ணில் இருந்து கிளம்பி, பாமர மக்களின் யதார்த்த வாழ்வியலை வெள்ளித் திரையில் கொண்டு வந்த இயக்குனர் பாரதிராஜா மேல், மதிப்பனூரைச் சேர்ந்த ஜீவாவுக்கு கொள்ளைப் பிரியம்.
தானும் அவரைப் போலவே மிகப் பெரிய இயக்குனர் ஆக வேண்டும் என்ற லட்சியத்தோடு, நாடகம் நடத்துகிறேன் என்று, தன் கையில் இருக்கும் கேமரா, உடன் இருக்கும் நண்பர்களோடு திரியும் ஜீவாவுக்கு, சினிமாக் காதலைப் போன்று தன் தந்தையின் நண்பர் மகள் மீனா மீது நிஜக் காதலும் உண்டு.
ஊர்ப் பெரியவர் செவங்காளையின் கடைசி மகன் ஜீவா. பொறுப்பில்லாமல் நடந்து கொள்கிறான் என திட்டும், வசவும் தினம் வாங்குபவர் இவர். செவங்காளை – பட்டத்தி தம்பதியருக்கு ஜீவாவோடு சேர்த்து 3 ஆண் பிள்ளைகள், 2 பெண் பிள்ளைகள்.
அதே ஊரில் வாழ்ந்து வரும் புதுப் பணக்காரன் பொன்ராசு. செவங்காளைக்கு, ஊரார் தரும் உயரிய மரியாதை தனக்குக் கிடைப்பதில்லையே என்ற ஆதங்கமும் ஆத்திரமும், செவங்காளை குடும்பத்தின் மேல் தீராப்பகையும் உண்டு.
கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வந்த ஜீவாவின் சகோதர, சகோதரிகள் பல காரணங்களால் குடும்பத்தை விட்டு வெளியேற, ஜீவா மட்டும் தந்தையுடன் இருக்கிறான். பின் தந்தையுடன் ஏற்படும் முரணில் அவனும் வீட்டை விட்டு வெளியேறி சென்னை செல்கிறான்.
பல வருடங்களுக்குப் பிறகு தந்தையின் மரணத் தருவாயில் வீட்டுக்கு வருகிறான் ஜீவா. பொன்ராசுவால் சொத்துகள் பறிக்கப்பட்ட நிலையில், ஊரின் ஒதுக்குப் புறத்தில் தன் தந்தை செவங்காளை தனியாக இருப்பதைப் பார்த்து வேதனை அடைகிறான்.
தன் கிராமத்திலேயே இருந்து, தன் சகோதர சகோதரிகளை ஒன்று சேர்த்து, பொன்ராவிடமிருந்து இழந்த சொத்துகளை மீட்க நினைக்கிறான் ஜீவா.
தன் சகோதர சகோதரிகளை ஒன்று சேர்த்தானா, பொன்ராசுவிடமிருந்து சொத்துகளை மீட்டானா, கிராமத்தில் விட்டுச் சென்ற தன் காதலி மீனாவைக் கைப்பிடித்தானா, சினிமாவில் இயக்குனர் ஆகி தன் லட்சியத்தை அடைந்தானா, என்பதை நகரம் சார்ந்தும் மண் மணம் மாறாமலும் சொல்ல வருவதே ‘களத்து வீடு’ படத்தின் கதை.
அருளரசன் இயக்கத்தில் சாய் சீனிவாஸ் ஒளிப்பதிவில் சங்கரபாண்டியன், பாண்டியன், தேவிப்ரியா, சிவன் சீனிவாசன், அனிலா, மாணிக்கம், ராஜேஷ், காயத்ரி, ஹேமா, மனோகரன், பாலன், ஜீத்து, பெருமாயி, ரீமா, சம்பத், சாந்தி, ஜெயப்பிரகாஷ், பிரபு கண்ணன் மற்றும் பலர் நடிக்கும் தொடர் இது.
விஜய் டிவியில் நவம்பர் 2ம் தேதி முதல் திங்கள், முதல் வெள்ளி வரை மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது ‘களத்து வீடு’ – ஒரு கிராமத்தின் கதை..