பிரபல நடன இயக்குநர்கள் ரகுராம் மற்றும் கிரிஜா ரகுராமின் மகள் சுஜா ரகுராம் மனோஜ், தனது தந்தையிடம் நடனம் மற்றும் இயக்குநர் பயிற்சி பெற்றவர். பல்வேறு இந்திய மொழிப்படங்களில் நடித்துள்ளார். 

கமல்ஹாசன், பிரபுதேவா, கலா மாஸ்டர், பிருந்தா மாஸ்டர் மற்றும் பல்வேறு பிரபல இயக்குநர்களுடனும் பணியாற்றி உள்ளார். 

தொழிலதிபர் மனோஜ் வேணுகோபாலை மணந்த பின்னர் அமெரிக்காவுக்குச் சென்ற சுஜா, அங்கு ஹாலிவுட் இயக்குநர்களான பென் & ஜூடி லெவின், பாயு பென்னட் மற்றும் டேனியல் லிர் ஆகியோருடன் பணிபுரிந்துள்ளார். 

தற்போது தனது குழந்தைகள் திரிஷுல் ஆர் மனோஜ் மற்றும் சனா மனோஜ் ஆகியோரை வைத்து தயாரித்து இயக்க உள்ள படத்தில் நடிகர்களாக அறிமுகப்படுத்த உள்ளார். 

இசையை மையமாக வைத்து எடுக்கப்பட உள்ள இத்திரைப்படத்திற்கு ‘டேக் இட் ஈசி’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இதன் மூலம் ஹாலிவுட்டில் இயக்குநராக அறிமுகமாகிறார் சுஜா.

நட்பைப் பற்றிப் பேசும் இத்திரைப்படத்தில், சாம் சிஎஸ் இசையமைத்து பென்னி தயாள் மற்றும் சனா மனோஜ் பாடியுள்ள ஒரு சிறப்புப் பாடல் இடம் பெறுகிறது. 

திரிஷுல் ஆர் மனோஜ், சனா மனோஜ் மற்றும் நிகில் மகேஷ் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

திரைப்படத்துறையில் நுழைவதன் மூலம், கே சுப்பிரமணியத்தின் புகழ் மிக்க பாரம்பரியத்தை அவரது கொள்ளு பேரக்குழந்தைகளும் தொடர்கிறார்கள்.