பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் பி எஸ் மித்ரன் இயக்கத்தில் ஜி வி பிரகாஷ் இசையமைப்பில் கார்த்தி, ராஷி கண்ணா, ரெஜிஷா விஜயன் மற்றும் பலர் நடித்திருக்கும் படம் ‘சர்தார்’.

'விருமன், பொன்னியின் செல்வன்' படங்களைத் தொடர்ந்து கார்த்தி கதாநாயகனாக நடித்துள்ள 'சர்தார்' படம் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 21ம் தேதியன்று வெளியாகிறது. ‘இரும்புத் திரை, ஹீரோ’ படங்களுக்குப் பிறகு பிஎஸ் மித்ரன் இயக்கும் படம் இது.

படம் பற்றி இயக்குனர் மித்ரன் கூறுகையில்,

“சர்தார் என்றால் பெர்சிய மொழியில் படைத்தலைவன் என்று பொருள். 'சர்தார்' ஒரு ஸ்பை த்ரில்லர் கதை. நாடு விட்டு நாடு சென்று உறவு செய்பவர்களைத்தான் நமக்கு உளவாளிகள் எனத் தெரியும்.  ஆனால் நம்மைச் சுற்றியே அவ்வளவு உளவாளிகள் இருக்கிறார்கள்.

உளவு என்பது நாட்டின் ராணுவ ரகசியம் பற்றி தெரிந்து கொள்ளும் வேலை மட்டுமில்லை. நமக்குப் பக்கத்தில் இருக்கும் ஒரு டீக்கடை பையனிலிருந்து கூட அதை ஆரம்பிக்கலாம். சாதாரண இடத்திலிருந்து தொடங்கி மிகப் பெரிய இடம் நோக்கி சர்வதேச அளவிலும் உளவு என்பது போகிறது. இதில் உலக அரசியலும் இருக்கிறது. இது சாமானியனை எப்படி பாதிக்கிறது என்பதுதான் இந்த ‘சர்தார்’. 

பாரதியார் கவிதை போல... 'நீ என்பது யார் ? உடலா, உயிரா, செயலா' ?. நம் அடையாளம், செய்கிற செயல்தான். உளவாளிகளும் அப்படித்தான்.  அலெக்ஸாண்டர், ஹிட்லர் உட்பட பெரும்பாலானோரது வரலாற்றின் முக்கியமான சாதனைகளுக்குப் பின் முக்கிய காரணமாக இருப்பது உளவாளிகள் தான்.  

கார்த்தி, 'சிறுத்தை'யில் ரத்னவேல் பாண்டியனாக விரைப்பும், ஜாலியாக இரண்டிலும் வந்தார். இதில் ஜாலியான போலீஸ்காரன். அலப்பறையாக இருக்கும். வயதான அப்பாவாக கார்த்தி  கன கச்சிதம். இளமை, வயதானவர் இருவருக்கும் பெரிய அளவில்  வித்தியாசம் இருக்கும்.  மூணு மணி நேர மேக்கப் போட்டு டயலாக் பேசி நடிக்கவே கஷ்டம். இதில் கூடவே ஆக்ஷன் வேறு இருக்கும். அது ரொம்பவே கஷ்டம். இப்படி மெனக்கிட்டு கேரக்டருக்கு உயிர் கொடுத்துள்ளார் கார்த்தி. 

ராஷி கண்ணா, ரஜிஷா விஜயன் என இரண்டு பேருக்கும் முக்கிய கதாபாத்திரம். மற்றொரு முக்கிய கேரக்டரில்  லைலா நடிச்சிருக்காங்க,” என்கிறார். 

கார்த்தியின் படங்களிலேயே பெரும் பொருட்செலவில் தயாராகியுள்ள இந்தப் படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.லட்சுமண்குமார் தயாரித்திருக்கிறார்.