ரத்தம், நிச்சயம் புதிதாக இருக்கும் - இயக்குனர் சிஎஸ் அமுதன்
17 Sep 2023
இன்பினிட்டி பிலிம் வென்சர்ஸ் சார்பாக கமல் போரா, ஜி.தனஞ்செயன், பிரதீப்.பி, பங்கஜ் போரா தயாரிக்க, சி.எஸ்.அமுதன் இயக்கத்தில், விஜய் ஆண்டனி, நந்திதா, ரம்யா நம்பீசன் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘ரத்தம்’.
மீடியா, அரசியல் இரண்டும் கலந்த ஒரு பரபரப்பான த்ரில்லர் படமாக இப்படம் இருக்கும் என்கிறார் படத்தின் இயக்குனர் அமுதன்.
“விஜய் ஆண்டனியும், நானும் ஒரே கல்லூரியில் படித்தவர்கள். நான் ’தமிழ்ப் படம்’ படத்தை முடித்த போது, அவர் ‘நான்’ படத்தில் நடித்திருந்தார். அப்போதே இருவரும் சேர்ந்து ஒரு படம் பண்ணலாம் என்று பேசினோம், ஆனால், எங்களால் பண்ண முடியவில்லை. ஒரு நாள் ஏன், எனக்கு படம் பண்ண மாட்டீங்களா என்று விஜய் ஆண்டனியிடம் கேட்ட போது, அவர் கதை கூட சொல்ல வேண்டாம், வாங்க படம் பண்ணலாம் என்று அழைத்தார், அப்படித் தான் இந்த படம் தொடங்கியது.
நான் அவரிடம் கதை சொன்னேன் அவருக்கு பிடித்திருந்ததால் உடனே படப்பிடிப்பைத் தொடங்கினோம். படத்தைப் பற்றி சொல்ல வேண்டுமானால், இப்படி ஒரு படம் பண்ணுவதற்கு தைரியம் வேண்டும். காரணம், படத்தின் டிரைலர் உள்ளிட்ட விளம்பரத்திற்காக பயன்படுத்தக் கூடிய விஷயங்களில் படத்தின் பேசு பொருளை எங்களால் சொல்ல முடியவில்லை. அது தான் படத்தின் சஸ்பென்ஸ் என்பதால் எங்கேயும் அதை எங்களால் சொல்ல முடியாத நிலை. அப்படிப்பட்ட கதையில் நடிக்க வேண்டும் என்றால் ஹீரோவுக்கு தைரியம் வேண்டும்.
பொதுவாக க்ரைம் திரில்லர் படத்தில் கொலையாளி யார் என்பது தான் முக்கியமான அம்சமாக இருக்கும். ஆனால், நாங்கள் கொலை செய்வது யார் என்பதை டிரைலரிலேயே காட்டி விட்டோம். அப்படி இருந்தும், அதன் பின்னணியில் ஒரு மர்மம் இருக்கிறது, அது என்ன என்பது தான் ரசிகர்களை சஸ்பென்ஸுடன் பயணிக்க வைக்கும். அதேபோல், இந்த படத்தை இந்த வகையிலான படம், அப்படிப்பட்ட படம் என்று ஒரு வட்டத்திற்குள் சுருக்க முடியாது.
இந்த படத்தின் திரைக்கதையை சொன்ன போது விஜய் ஆண்டனி, தன்னிடம் ‘ரத்தம்’ என்ற தலைப்பு இருக்கிறது, உங்கள் கதைக்கு சரியாக இருந்தால் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்றார். நான் ‘வன்மம்’ என்ற தலைப்பை யோசித்து வைத்திருந்தேன். ஆனால், ரத்தம், வன்மம் இரண்டுக்குமே நெருக்கம் அதிகம் என்பதாலும், வன்மத்தை விட ரத்தம் பொருத்தமாக இருந்ததால் அந்தத் தலைப்பை படத்திற்கு வைத்தோம். அதே சமயம், வன்மத்தைக் காட்டி ரசிகர்களை திரையரங்கிற்கு வரவைக்கும் எண்ணம் எங்களுக்கு இல்லை. நாங்கள் சொல்ல வேண்டிய விஷயத்திற்கு எந்த அளவுக்கு தேவையோ அதை மட்டுமே காட்சியாக வைத்திருக்கிரோமே தவிர, ரசிகர்களை இழுப்பதற்காக தேவையில்லாத வன்முறை, செக்ஸ் காட்சிகளை படத்தில் வைக்கவில்லை.
கதை முழுவதுமே ஊடகத்துறையை சுற்றித்தான் நடக்கும். ஹீரோவே ஒரு பத்திரிகையில் ஆசிரியராக பணியாற்றுகிறார். அவர் என்ன கண்டுபிடிக்கிறார் என்பதைத்தான் திரைக்கதையில் சொல்லியிருக்கிறோம். ஆனால், இதற்கு மேல் படம் பற்றி எதுவுமே சொல்ல முடியாது. காரணம், திரையரங்கில் பார்க்கும்போது உங்களுக்கு புது அனுபவம் கிடைக்கும், அந்த அனுபவத்தை சிதைத்து விட கூடாது என்பதால் தான் இங்கு எதுவும் சொல்ல முடியவில்லை. அதேபோல் இதற்கு முன் வெளியான க்ரைம் திரில்லர் படங்களின் சாயல் ஒரு சதவீதம் கூட இதில் இருக்காது. க்ரைம் திரில்லர் ஜானர் படங்களில் இப்படி ஒரு படத்தை இதுவரை நீங்கள் பார்த்திருக்க மாட்டீர்கள் என்று தைரியமாக சொல்ல முடியும்,” என்றார்.
விஜய் ஆண்டனி படம் பற்றிப் பேசுகையில்,
“இயக்குநர் சி.எஸ்.அமுதன் என்னிடம் கதை சொன்ன போது ரொம்ப புதிதாக இருந்தது. க்ரைம் திரில்லர் ஜானர் படங்கள் பல வந்திருக்கிறது, நானும் சில படங்களில் நடித்திருக்கிறேன். ஆனால், அமுதன் சொன்ன விசயம் புதிதாக இருந்ததோடு, தற்போது உலகம் முழுவதும் நடக்க கூடிய ஒன்று தான் என்பதால் இந்த படத்தில் நடிக்க சம்மதித்தேன். இந்த படத்தில் ரம்யா நம்பீசன், மஹிமா நம்பியார், நந்திதா சுவேதா என மூன்று ஹீரோயின்கள் இருக்கிறார்கள். ஆனால் மூன்று பேருமே எனக்கு ஜோடியில்லை. ஏன் என்று இயக்குநரிடம் கேட்டால், அப்படிப்பட்ட கதை என்று சொல்லிவிட்டார்,” என்றார்.
Tags: ratham, cs amudhan, vijay antony, mahima nambiar, nanditha, ramya nambeesan