74ஆவது பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் ’புஷ்பா 2 – தி ரூல்’

17 Feb 2024

 

ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் 'புஷ்பா 2-தி ரூல்' படத்தின் ரிலீஸ் தேதி சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இப்படம் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் ஆகஸ்ட் 15, 2024 அன்று வெளியாகிறது. சுதந்திர தினம் மற்றும் ரக்ஷாபந்தன் விடுமுறை நாட்களின் நீட்டிக்கப்பட்ட வாரயிறுதியுடன் கூடிய இந்த வெளியீட்டுத் தேதி, பாக்ஸ் ஆபிஸ் வசூலையும் அதிகரிக்க சரியான வாய்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த உற்சாகமான செய்தியோடு இப்போது நடைபெற்று வரக்கூடிய 74ஆவது பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் ‘புஷ்பா- தி ரைஸ்’ படம் திரையிடப்பட்டுள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக நடிகர் அல்லு அர்ஜூன் பெர்லின் சென்றுள்ளார். சர்வதே பார்வையாளர்களிடமும் இந்தப் படம் பெரும் வரவேற்பைப் பெற்றது படக்குழுவினரிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அல்லு அர்ஜுன் சமீபத்தில் 69வது தேசிய விருதுகளில் புஷ்பாவாக நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான விருதை வென்றார். அல்லு அர்ஜுன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து கொண்ட 'புஷ்பா 2' படப்பிடிப்பின் காட்சிகளால் ரசிகர்களின் உற்சாகம் மேலும் அதிகரித்தது. இந்தியா முழுவதும் உள்ள திரையரங்குகளில் 'புஷ்பா 2' வெளியீடு குறித்து ரசிகர்கள் மட்டுமல்லாது, வர்த்தக வட்டாரத்திலும் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.

கொரோனா காலக்கட்டத்திற்குப் பிறகு திரையரங்குகளுக்கு அதிக பார்வையாளர்களை வரவழைத்து திருப்புமுனை ஏற்படுத்திய திரைப்படம் 'புஷ்பா'. படத்தின் வசனங்கள், கதைக்களம், அடிமையாக்கும் இசை என அனைத்து வகையான பார்வையாளர்களையும் இதன் முதல் பாகம் ஈர்த்தது. அல்லு அர்ஜுனின் புஷ்பராஜ் கதாபாத்திரம் இந்திய சினிமா வரலாற்றில் மிகவும் விரும்பத்தக்க கதாபாத்திரங்களில் ஒன்றாக மாறியுள்ளது. மேஸ்ட்ரோ இயக்குநர் சுகுமார் உருவாக்கிய இந்த புஷ்பாவின் உலகம் அதன் இரண்டாம் பாகத்தில் இன்னும் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது.

'புஷ்பா2-தி ரூல்' உலகம் முழுவதும் பல மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் மேஸ்ட்ரோ சுகுமார் இயக்கத்தில் ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன், ரஷ்மிகா மந்தனா மற்றும் ஃபஹத் பாசில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தேசிய விருது பெற்ற தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

 

Tags: pushpa 2 the rule, allu arjun

Share via: