பிருத்விராஜ் நடிக்கும் தி கோட் லைஃப்

01 Dec 2023

உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்டு சர்வைவல் அட்வென்ச்சராக உருவாகியுள்ள மலையாள சூப்பர் ஸ்டார் பிருத்விராஜ் சுகுமாரன் நடிப்பில் ‘தி கோட் லைஃப் (The Goat Life)’ திரைப்படம் ஏப்ரல் 10, 2024 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. விஷுவல் ரொமான்ஸ் தயாரிப்பில், தேசிய விருது வென்ற பிளெஸ்ஸி இயக்கியுள்ள இப்படத்தில் ஹாலிவுட் நடிகர் ஜிம்மி ஜீன் லூயிஸ், அமலா பால், கே.ஆர்.கோகுல் மற்றும் பிரபல அரபு நடிகர்களான தலிப் அல் பலுஷி மற்றும் ரிக்காபி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசை மற்றும் ஒலி வடிவமைப்பை அகாடமி விருது வென்ற ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் ரசூல் பூக்குட்டி கையாண்டுள்ளனர்.

உலகெங்கிலும் உள்ள பல நாடுகளில் படமாக்கப்பட்ட இப்படம் மலையாளத் திரையுலகில் இதுவரை இல்லாத மிகப்பெரிய முயற்சியாகும். தரமான தயாரிப்பு, அழகியல் கூறுகள், கதைசொல்லல், மற்றும் நடிகர்களின் நடிப்புத் திறமை ஆகியவற்றை இந்தப் படம் தரமாக வெளிப்படுத்த இருக்கிறது. பிரமிக்க வைக்கும் காட்சியமைப்புகள், அசத்தலான நடிப்பு மற்றும் ஆன்மாவைத் தூண்டும் பின்னணி இசை ஆகியவற்றுடன் படம் பிரம்மாண்ட திரையரங்க அனுபவத்தைக் கொடுக்க உள்ளது.

மலையாள இலக்கிய உலகில் மிகவும் பிரபலமான மற்றும் விற்பனையில் சாதனைப் படைத்த நாவலான ‘ஆடுஜீவிதம்’ கதையை அடிப்படையாகக் கொண்டு இந்தத் திரைப்படம் உருவாகியுள்ளது. புகழ்பெற்ற எழுத்தாளர் பென்யாமின் எழுதிய இந்த நாவல் வெளிநாட்டு மொழிகள் உட்பட 12 வெவ்வேறு மொழிகளில், மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. தொண்ணூறுகளின் முற்பகுதியில் கேரளாவின் பசுமையான கடற்கரையிலிருந்து வெளிநாட்டில் அதிர்ஷ்டத்தைத் தேடி இடம்பெயர்ந்த  இளைஞன் நஜீப்பின் வாழ்க்கையின் உண்மைக் கதையைதான் இந்த நாவல் விளக்குகிறது.

உலகளாவிய பார்வையாளர்களுக்காக உருவாக்கப்பட்ட இந்த இந்தியப் படம் பற்றி இயக்குநர் பிளெஸ்ஸி பேசுகையில், “உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்கள் நிச்சயம் எதேனும் ஒரு புள்ளியில் இந்தப் படத்தின் கதையைத் தங்களோடு இணைத்துப் பார்ப்பார்கள். அப்படியான கதையை உண்மைத் தன்மை மாறாமல் சினிமாவாக்க வேண்டும் என்பதுதான் இந்தப் படத்தில் நான் சந்தித்த மிகப்பெரிய சவால். இந்த நாவல் சில உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டது. மேலும், ஒருவருக்கு நம்ப முடியாத ஒன்று நடந்ததை ஒவ்வொரு கணத்திலும் காட்டி பார்வையாளர்களை ஈர்க்க விரும்புகிறேன். புனைவு கதைகளை விட உண்மை ஒருபோதும் விசித்திரமாக இருந்ததில்லை. கதை சொல்லும்  உண்மைத் தன்மையின் பிரம்மாண்டம் திரையரங்குகளில் பார்வையாளர்கள் படம் பார்க்கும் போது தெரிய வரும். இந்த மாபெரும் படைப்பை உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களுக்குக் கொண்டு வருவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.

’தி கோட் லைஃப்’ திரைப்படம் திரையரங்குகளில் ஏப்ரல் 10, 2024 அன்று இந்தி, மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது” என்றார்.

விஷுவல் ரொமான்ஸ் பற்றி:

கேரளாவைத் தலைமையிடமாகக் கொண்ட ஒரு புகழ்பெற்ற இந்தியத் திரைப்படத் தயாரிப்பு நிறுவனம்தான் விஷுவல் ரொமான்ஸ். 7 ஆண்டுகள் என்ற குறுகிய காலத்திலேயே இந்த நிறுவனம் தொழில்துறையில் வலுவான ஒரு முத்திரையை பதித்துள்ளது. ’100 இயர்ஸ் ஆஃப் கிரிசோஸ்டம்’ தயாரிப்பின் மூலம் விஷுவல் ரொமான்ஸ் சினிமா உலகில் ஒரு மைல்கல்லை எட்டியுள்ளது. இந்தப் படம் 48 மணிநேரம் கொண்ட ஒரு ஆவணப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

பரவலாகப் பாராட்டைப் பெற்ற இந்தப் படம் கின்னஸ் புத்தகத்திலும் இடம் பெற்றது. சினிமா மீது விஷுவல் ரொமான்ஸூக்கு உள்ள அர்ப்பணிப்பை காட்டும் விதமாக இது அமைந்துள்ளது. இயக்குநர் திரு. பிளெஸ்ஸி ஐப் தாமஸால் இது நிறுவப்பட்டது. ஒரு தேசிய திரைப்பட விருது மற்றும் ஆறு கேரள மாநில திரைப்பட விருதுகள் உட்பட இந்திய சினிமாவில் பல விருதுகளை வென்ற ப்ளெஸ்ஸிக்கு இது மேலும் சிறப்புத் தருவதாக மாறியுள்ளது. திரு. பிளெஸ்ஸி ஐப் தாமஸின் திறமையான தலைமையின் கீழ், விஷுவல் ரொமான்ஸ் இந்திய சினிமாவில் பல சிறந்த கதைகளை வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறது.

 

Tags: prithvi raj, the goat life, release date

Share via:

Movies Released On July 27