ட்ரிப்ர் என்டர்டெயின்மென்ட் சார்பில் மதுசூதனன் தயாரிக்க, துவாரக் ராஜா இயக்கத்தில், இளம் நட்சத்திரங்களின் நடிப்பில், குடும்ப உறவுகளின் பின்னணியில் ஒரு புதுமையான கேங்ஸ்டர் ஆக்சன் படமாக உருவாகியுள்ள படம் ‘பரோல்’.  

ஆர்எஸ் கார்த்திக், லிங்கா, கல்பிகா, மோனிஷா முரளி, வினோதினி வைத்தியநாதன், ஜானகி சுரேஷ், மேக் மணி, சிவம், டென்னிஸ் இம்மானுவேல் மற்றும் பல நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.

சமீபத்தில் இப்படத்தின் டிரைலரை விஜய் சேதுபதி வெளியிட்டார். மேலும் டிரைலருக்கான பின்னணி குரலையும் கொடுத்திருந்தார்.

படம் குறித்து இயக்குநர் துவாரக் ராஜா கூறுகையில்,

“பரோல்‘ படத்தின் டிரைலருக்கு கிடைத்து வரும் வரவேற்பு மிகப் பெரும் மகிழ்ச்சியைத் தந்துள்ளது. இப்படம் எங்கள் குழுவினரின் பெரும் கனவு. ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு கதை இருக்கும். ஆனால் ஒரு குடும்பத்திற்குப் பின்னால் உள்ள சொல்லப்படாத, சொல்லமுடியாத ஒரு கதை தான் இது.  

தாய் இறந்த காரணத்தினால் தனக்குப் பிடிக்காத அண்ணனை பரோலில் எடுக்கிறான் தம்பி. அவனுக்கும் அவன் அண்ணனுக்குள் உள்ள பிரச்சனையும், அதைச் சுற்றி நடக்கும் பரபரப்பான சம்பவங்களுமே இப்படம். இது குடும்பப் பின்னணியில் நடக்கும் எமோஷனல் கதை. ஆனால் வலுவான ஆக்சனும் பரப்பான திரைக்கதையும் உள்ளது. மிக அழுத்தமான ஒரு ஆக்சன் படமாகவும் அனைத்து தரப்பு ரசிகர்களையும் மகிழ்விக்கும் படமாகவும் இருக்கும். 

இப்படத்திற்கு குரல் தந்த மக்கள் செல்வன் விஜய் சேதுபதிக்கு நன்றி. டிரைலரில் மட்டுமல்ல படத்திலும் அவர் வாய்ஸ் ஓவர் தந்துள்ளார்.  படத்தை முடித்தவுடனே அவரிடம் காட்டினேன், படம் அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. அப்போது நீங்கள் படத்தின் ஆரம்பத்தில் குரல் தந்தால் நன்றாக இருக்குமென்றேன். உடனடியாக ஒப்புக்கொண்டு அவரின் கடின வேலைகளுக்கிடையில் செய்து தந்தார். அவருக்கு பெரிய நன்றிகள். 

இப்படத்தின் நடிகர்களும் தொழில் நுட்பக் கலைஞர்களும் மிகப் பெரிய தூணாக இருந்து உழைத்துள்ளார்கள், அவர்களுக்கும் இந்நேரத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இப்படம் கண்டிப்பாக அனைவரையும் திருப்திப்படுத்தும் புதுமையான படமாகவும், தமிழ் சினிமாவில் ஒரு அழுத்தமான படைப்பாகவும் இருக்கும்,” என்றார்.