நடிகராக அறிமுகமாகும் 'பால் டப்பா'

18 May 2025

விஜய் மில்டன் இயக்கும் இருமொழித் திரைப்படமான ப்ரொடக்‌ஷன் நம்பர் 5 படத்தில்  'பால் டப்பா' நடிகராக அறிமுகமாகிறார். 

இயக்குநர் மற்றும் ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன் இயக்கும் தமிழ்-தெலுங்கு இருமொழி திரைப்படம். ( தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள) ப்ரொடக்‌ஷன் நம்பர் 5.

எதார்த்தமான வாழ்க்கை சார்ந்த இந்த படைப்பில், ஏற்கனவே இருக்கும் முன்னணி நடிப்பு குழுவினருடன்,இசை உலகில் கவனம் பெற்று வரும் நட்சத்திரம் 'பால் டப்பா' – இந்த திரைப்படத்தின் வாயிலாக நடிகராக அறிமுகமாகிறார்.

சென்னை, தமிழ்நாட்டைச் சேர்ந்த அனிஷ், அவரின் மேடைப்பெயரான 'பால் டப்பா' வின் மூலம் அனைவரிடத்திலும் மிகவும் பரிச்சயமாக உள்ளார். இவர் ஒரு பன்முக கலைஞர் – ரேப்பர், பாடகர், பாடலாசிரியர் மற்றும் நடன இயக்குநர். 170CM, காத்து மேல, மற்றும் வைரலான கலாட்டா (ஆவேஷம் திரைப்படத்தில் இருந்து) போன்ற ஹிட் பாடல்களின் மூலம், இசை உலகில் தனக்கென தனித்துவமான அடையாளத்தை உருவாக்கியுள்ளார். அவரது தனிப்பட்ட பாணி, ஆழ்ந்த ஆற்றல் மற்றும் நேரடித் தன்மையுள்ள பாடல் வரிகள், அவருக்கு உண்மையான ரசிகர்களையும், பல தளங்களில் பரவலான கவனத்தையும் பெற்றுத் தந்துள்ளன.

குழந்தைப் பருவத்தில் குளிர்ந்த பாலை நேசித்ததைத் தலைப்பாக வைத்து, "பால் டப்பா" என்ற பெயரின் மூலம் தன் தனித்துவத்தை வெளிப்படுத்தியவர். இப்போது, அவரின் புதிய பயணமாக சினிமா உலகில் புதுமுகமாக, ப்ரொடக்‌ஷன் நம்பர் 5 என்ற படத்தில் முக்கியமான பாத்திரத்தில் நடிக்க உள்ளார் – இவரின் நடிப்பு இந்தப் படத்திற்கு தனித்துவமும், தாக்கமுமிக்கதுமானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இயக்குநர் விஜய் மில்டன் கூறும்போது, “பால் டப்பாவிடம் இருக்கும் இயல்பான, இளைஞர்களை உற்சாகப்படுத்தும் ஆற்றல் இந்தப் படத்தின் உணர்வுகளோடு பொருந்துகிறது. அவர் உண்மையாக வாழும் கலைஞர்; அந்த நேர்மையே இந்த கதாபாத்திரத்திற்கு தேவை,” என தெரிவித்துள்ளார்.

தெலுங்கு நடிகர் ராஜ் தருணை தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் செய்யும் இந்த திரைப்படம், ஆழமான கதையமைப்பும் வித்தியாசமான நடிப்புப் கொண்ட ஒரு சிறப்பான முயற்சியாக உருவாகி வருகிறது. விஜய் மில்டனின் கோலி சோடா பட தொடரின் எதார்த்தம் மற்றும் உணர்ச்சி பூர்வமான காட்சிகளுடன் தொடரும் இப்படம், ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

படக்குழு, அடுத்த வாரங்களில் மேலும் பல திறமையான நட்சத்திரங்களை அறிமுகப்படுத்தவுள்ளது. 

Tags: Vijay milton, pal dabba

Share via: