ஒன்பது ரூபாய் நோட்டுக்காக நன்றி தெரிவித்த சத்யராஜ்

01 Dec 2022

ஒன்பது ரூபாய் நோட்டு படம் 15 வருடங்களுக்கு முன்பு நவம்பர் 30 ஆம் தேதி வெளியானது. அந்த படத்தைப் பற்றியும், அப்படத்தில் தன்னுடைய கதாபாத்திரத்தைப் பற்றியும் நடிகர் சத்யராஜ் கூறியதாவது :

வணக்கம். நவம்பர் 30, ஒன்பது ரூபாய் நோட்டு என்கிற அற்புதமான காவியம் வந்து 15 வருடங்கள் ஆகிறது. அதில் மாதவ படையாட்சி என்கிற கதாபாத்திரத்தில் நடிக்கவில்லை; வாழ்ந்திருக்கிறேன்! என்று சொல்லுவார்கள். அப்படி என்னை வாழ வைத்தது அன்பு தம்பி தங்கர் பச்சான். 

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் மற்றும் ஒளிப்பதிவு எல்லாமே அவர் தான் செய்திருந்தார். இது அவர் எழுதிய கதை அல்ல; அவருக்குள் ஊறிய கதை. மண் சார்ந்த கதை. அவர் கண் முன்பு நடந்த கதையை கூறுவது போல் இருக்கும். அதேபோல், படம் பார்த்தவர்களுக்கும் படம் பார்த்த உணர்வு இருக்காது. ஒரு நிகழ்ச்சியை ஓரமாக நின்று வேடிக்கை பார்த்தது போல இயக்கியிருப்பார். அற்புதமான பரத்வாஜின் இசை, வைரமுத்துவின் வைர வரிகள் என்று சொல்லிக் கொண்டே போகலாம். உடன் நடித்த அர்ச்சனா, நாசர், ரோகிணி அனைவரும் பிரமாதமாக நடித்திருப்பார்கள். இப்படியொரு கதாபாத்திரம் அமைந்தது என் வாழ்வில் எனக்கு கிடைத்த மிகப்பெரிய பாக்கியம்.

பொதுவாக நான் நடித்த பல படங்களை முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் பார்த்திருக்கிறார்கள். நிறைகுறைகளை மனம் திறந்து பாராட்டுவார். நிறைகளாக இருந்தாலும், குறைகளாக இருந்தாலும்.. அவர் கூறும்போது அதில் நகைச்சுவை கலந்திருக்கும். இது அவரை அறிந்த அனைவருக்கும் தெரியும். ஒன்பது ரூபாய் நோட்டு படத்தை அவருக்கு மட்டும் பிரத்யேகமாக காண்பித்தோம். படம் முடிந்தது சிறிது நேரம் அப்படியே உட்கார்ந்துவிட்டார். நான் அருகில் சென்று நின்றேன். அமைதியாக இருந்தார். என் கையைப் பிடித்துக் கொண்டார். அவரைப் பார்த்தால் கண்களில் கண்ணீர், உடனே நானும் அழுதுவிட்டேன். நீண்ட நேரம் அமைதியாகவே இருந்தார். பின்பு அருகில் வந்தார், கட்டிப்பிடித்துக் கொண்டார். என்ன?! என்னை இப்படி அழ வைத்துவிட்டாயே! என்றார். தங்கர் பச்சனைக் கட்டிப்பிடித்தார், பாராட்டினார்.

இப்படி ஒரு கலைஞனை நான் பார்த்ததே இல்லை. ஏனென்றால், அவருடைய சொல் வளம் அனைவரும் அறிந்த ஒன்று. அவர் என்ன கூறினாலும் அதில் அழகான நகைச்சுவை உணர்வு இருக்கும். அப்படிப்பட்ட கலைஞரை கலங்க வைத்த படம் ஒன்பது ரூபாய் நோட்டு.

15 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் என் தம்பி தங்கர் பச்சானுக்கு என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.


 

Tags: Onpathu rubai nottu , thangar batchan, sathyaraj

Share via: