நடனக் கலைஞர்களைப் பற்றிய ‘யாதுமாகி நின்றாய்’...
28 Feb 2017
‘சார்லி சாப்ளின்’ படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் காயத்ரி ரகுராம். தொடர்ந்து “ஸ்டைல், பரசுராம், விசில், விகடன்” ஆகிய படங்களில் நாயகியாக நடித்தார்.
திடீரென நடிப்பை விட்டுவிட்டு அமெரிக்கா சென்றுவிட்டார். அங்கிருந்து திரும்பி வந்ததும் நடன இயக்குனராக தன் பணியை ஆரம்பித்தார்.
மறைந்த பிரபல நடன இயக்குனர் ரகுராமின் இளைய மகள் காயத்ரி ரகுராம். இவருடைய அம்மா கிரிஜாவும் நடன இயக்குனராக இருந்தவர்தான்.
பல ஹிட் பாடல்களுக்கு நடனம் அமைத்தவர் ‘யாதுமாகி நின்றாய்’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.
‘யாதுமாகி நின்றாய்’ படம் எந்த மாதிரியான படம் என்பது பற்றி அவர் கூறுகையில்,
“நான் இயக்குனர் ஆகணும்கறது எங்க அப்பாவோட ஆசை. எங்க அப்பாவுக்குப் பிடிச்ச கதையைத்தான் படமாக்கியிருக்கிறேன். இந்தப் படம் நடனக் கலைஞர்கள் பற்றிய படம்.
திரைத்துறையில் பணியாற்றும் நடனக் கலைஞர்களின் வாழ்க்கையில் நடைபெற்ற சில உண்மைச் சம்பவங்களை வைத்து எடுக்கப்பட்ட படம் இது.
பெண்களின் வாழ்க்கையில் ஆரம்பம் முதல் அவர்களின் வாழ்க்கையில் ஒவ்வொறு கட்டத்தையும் அவர்கள் எப்படி வாழவேண்டும் என்ற ஒரு சமூகக் கருத்தை கூறும் வகையில் இப்படத்தை இயக்கியுள்ளேன்.
இந்தப் படத்தோட இசையை உண்டர் பார் வாங்கியிருக்கிறாங்க. தனுஷ் சார் கிட்ட, இந்தப் படத்துக்காக ஒரு பாட்டு பாடணும்னு கேட்டேன். நட்புக்காக ஒரு பாடலைப் பாடிக் கொடுத்திருக்காரு . ‘புடவை நிலவே...’ என்னும் பாடலை நடிகர் தனுஷ் அவர்கள் பாடியுள்ளார்.
இது ஒரு சிறிய பட்ஜெட் படம். அதே சமயத்துல நல்ல கருத்தும் சொல்லியிருக்கிறேன்,” என்கிறார் காயத்ரி ரகுராம்.
விரைவில் இப்படம் திரைக்கு வர உள்ளது.