நேசிப்பாயா, இளைஞர்களுக்கான ஒரு படம் - விஷ்ணுவர்தன்

09 Nov 2024

விஜய் நடித்த ‘மாஸ்டர்’ படத்தைத் தயாரித்த, எக்ஸ்.பி பிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனம் சார்பில் டாக்டர்.எஸ்.சேவியர் பிரிட்டோ தயாரிப்பில், சினேகா பிரிட்டோ இணைத் தயாரிப்பில், விஷ்ணுவர்தன் இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில், ஆகாஷ் முரளி, அதிதி சங்கர், குஷ்பு, கல்கி கொச்சலின், பிரபு, சரத்குமார் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘நேசிப்பாயா’.

 

’அறிந்தும் அறியாமலும்’, ‘பட்டியல், பில்லா, ஆரம்பம்’ உள்ளிட்ட தமிழ்ப் படங்களையும், ‘ஷெர்ஷா’ ஹிந்திப் படத்தையும் இயக்கிய விஷ்ணுவர்தன், ஒரு இடைவெளிக்குப் பிறகு இப்படம் மூலம் தமிழுக்கு மீண்டும் வந்துள்ளார். 

 

மறைந்த நடிகர் முரளியின் இளைய மகனும், நடிகர் அதர்வாவின் தம்பியுமான ஆகாஷ் முரளி இந்தப் படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். 

 

‘மாஸ்டர்’ படத் தயாரிப்பாளரான சேவியர் பிரிட்டோவின் மகள் சினேகா பிரிட்டோவைக் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்  ஆகாஷ் முரளி. .

 

‘நேசிப்பாயா’ படம் குறித்து இயக்குநர் விஷ்ணுவர்தன், நடிகர் ஆகாஷ் முரளி, இணை தயாரிப்பாளர் சினேகா பிரிட்டோ ஆகியோர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

 

அப்போது பேசிய விஷ்ணுவர்தன்,

 

“தமிழ்ப்படம் இயக்கி ஐந்து வருடங்கள் ஆகிவிட்டது. எங்கு சென்றாலும், எந்த மாதிரியான படம் இயக்கினாலும் தமிழ்ப் படம் என்றால் மட்டுமே முழு திருப்தியாக இருக்கிறது, அந்த வகையில் நான் இப்போது ‘நேசிப்பாயா’ படம் மூலம் திருப்தியாக இருக்கிறேன்.

 

‘ஷெர்ஷா’ படத்தின் டப்பிங் பணிகளில் நான் பிஸியாக இருந்த போது, என்னை ஆகாஷ் மும்பையில் சந்தித்தார். அப்போது அவரை வைத்து படம் இயக்கும் ஐடியா என்னிடம் இல்லை, நட்பு ரீதியாக என்னை அவர் சந்தித்தார், மதிய உணவு சாப்பிட்டு விட்டு ஒரு மணி நேரம் பேசினோம். அந்த சந்திப்பை தொடர்ந்து அடிக்கடி அவரை சந்திக்க முடிந்தது, அப்போது அவரை எனக்கு ரொம்ப பிடித்துவிட்டது. ஒருவரை வைத்து படம் இயக்கப் போகிறோம் என்பதை தாண்டி, அவருடன் பழகும் போது அவரை நமக்கு பிடித்துவிடும் அல்லவா அதுபோல் தான் எனக்கு ஆகாஷுடன் பழக பழக அவரை பிடித்துவிட்டது. ஒரு கட்டத்தில் இவருக்காக ஒரு படம் பண்ணலாமே என்று எனக்கே தோன்றியது. அப்படி தான் ‘நேசிப்பாயா’ உருவானது.

 

இது முழுக்க முழுக்க காதல் கதை என்றாலும் காதலை மையமாக வைத்துக்கொண்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தக் கூடிய ஒரு திரைக்கதையோடு நல்ல ட்ராமாவாக இருக்கும். தற்போதைய காலகட்டத்தில் ரசிகர்கள் மிக தெளிவாக இருக்கிறார்கள், அவர்களை எண்டர்டெயின்மெண்ட் செய்யவில்லை என்றால், அடுத்ததை நோக்கி எளிதில் நகர்ந்துச் சென்றுவிடுவார்கள். அதனால், காதல் என்பதை ஒரு களமாக வைத்துக்கொண்டு, இளைஞர்களுக்கான ஒரு படமாக மட்டும் இன்றி சினிமா ரசிகர்களுக்கான விறுவிறுப்பான படத்தை கொடுத்திருக்கிறேன்.

 

இந்த கதை ஆகாஷ் முரளிக்காக எழுதப்பட்டது அல்ல, இப்படி ஒரு கரு என்னிடம் இருந்தது. வாய்ப்பு கிடைத்தால் இதை படமாகப் பண்ணலாம் என்று நினைத்தேன், ஆகாஷுக்காக படம் பண்ண முடிவான போது, ஏன் இந்தக் கதையை பண்ணக்கூடாது என்று தோன்றியது. அதனால் தான் இந்தக் கதையை தேர்வு செய்தேன். 

 

இதற்கு ஆகாஷ் முரளி மிக சரியாக இருந்ததோடு, அவரை எப்படி வேண்டுமானாலும் மாற்றம் செய்யலாம், அதனால் அவருடன் பணியாற்றுவது எனக்கு ஆர்வமாக இருந்தது. ஆறடி உயரம், கணீர் குரல் என்று அவரை பார்க்கும் போது ரொம்ப பர்சனாலிட்டியாக இருப்பார், அதுவே ஒரு நடிகருக்கான முதல் தகுதியாகும். ஆனால், அவருடன் பழக பழகத் தான் தெரிந்தது அவர் குழந்தை போன்றவர் என்று, அது இந்தக் கதைக்கு ரொம்பவே பொருத்தமாக இருந்தது. ஆனால், எதிர்காலத்தில் அவரை முரட்டுத்தனமான கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க வேண்டும் என்ற ஆசை எனக்கு இருக்கிறது. அதற்கான கதை அமைந்தால் நிச்சயம் மீண்டும் ஆகாஷுடன் இணைவேன்.

 

நாயகியாக நடித்திருக்கும் அதிதி ஷங்கர், சினிமாத்தனம் இல்லாத ஒரு பெண்ணாக இருப்பார், அதனால் தான் அவரை நாயகியாக தேர்வு செய்தேன். மேக்கப் இல்லாமல் அவர் மிகவும் அழகாக இருப்பார், அவருடைய உடல்மொழி, நடிப்பு என அனைத்தும் ஒரு நடிகையாக அல்லாமல் எளிமையான பெண் போல் இருக்கும், அந்த விசயம் படத்திற்கு நன்றாக இருக்கும் என்பதால் அவரை நாயகியாக நடிக்க வைத்தேன்.

 

'நேசிப்பாயா' கதை தமிழ்நாட்டில் தொடங்கினாலும், 90 சதவீதம் கதை போர்ச்சுக்கல் நாட்டில் தான் நடக்கிறது. கதைப்படி மொழி தெரியாத ஒரு நாடு தேவை. போர்ச்சுக்கல் நாட்டை இதுவரை யாரும் திரைப்படங்களில் பெரிய அளவில் காட்டவில்லை, அதே சமயம் எங்கள் கதைக்கும் அந்த நாடு சரியாக இருந்ததால், அந்த நாட்டை தேர்வு செய்தோம். அதேபோல், ஒளிப்பதிவாளர், ஆக்‌ஷன் இயக்குநர் ஆகியோரது தேதிகள் எனக்கு மொத்தமாக தேவைப்பட்டது. ஆரம்பத்தில் ஓம்பிரகாஷ் தான் ஒளிப்பதிவு செய்தார், ஆனால் அவரது தேதிகள் மொத்தமாக கிடைக்காத சூழல் அமைந்ததால், பிரிட்டிஷ் ஒளிப்பதிவாளரான கேமரோன் பிரைசன், ஸ்டண்ட் இயக்குநர் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ஃபெட்ரிகோ கியூவா ஆகியோர் எங்களுக்கு பக்கத்தில் இருந்ததாலும், நான் எதிர்பார்த்தது போல் அவர்களுடைய தேதி மொத்தமாக கிடைத்ததாலும் தான் அவர்களை ஒப்பந்தம் செய்தேன். அவர்களுடைய பணிகள் நிச்சயம் பேசும் வகையில் இருக்கும்.

 

கல்கி கொச்சலின் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அந்த கதாபாத்திரத்தை எழுதும் போதே அவரை மனதில் வைத்து தான் எழுதினேன். சரத்குமார், பிரபு, குஷ்பு ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். 

 

அறிமுக நாயகன் ஆகாஷ் முரளி பேசுகையில், 

 

“நான் நடிக்க வேண்டும் என்பது நீண்ட நாள் திட்டம் தான். ஆனால், இடையில் கொரோனா பிரச்சனை வந்ததால் நடிக்க முடியாமல் போய்விட்டது. பிறகு திருமணம் நடந்தது. இதனால் தான் சற்று காலதாமதம் ஆனாது. விஷ்ணு சார் படத்தில் நடிக்க வேண்டும் என்பது எனக்கு ஆசை தான். ‘அறிந்தும் அறியாமலும்’ படம் போன்ற ஒரு படத்தின் மூலம் அறிமுகமாக வேண்டும் என்று ஆசைப்பட்டேன், ஆனால், என்னை வைத்து விஷ்ணு சார் படம் பண்ணுவாரா? என்பது கேள்விக்குறியாக இருந்தது, எனக்கும் அது தெரியும். இருந்தாலும் அவரை ஒரு முறை சந்தித்து சாதாரணமாக பேச வேண்டும் என்று முயற்சித்தேன். அப்படி தான் அவரை சந்தித்தேன், அப்போது என் ஆசையை அவரிடம் சாதாரணமாக சொன்னேன். அப்படி தான் எங்கள் நட்பு ஆரம்பித்து, இன்று நேசிப்பாயா படம் வரை வந்துள்ளது,” என்றார்.

 

ஆகாஷ் முரளியின் மனைவியும், இணை தயாரிப்பாளருமான சினேகா பிரிட்டோ பேசுகையில்,

 

“ஆகாஷின் நீண்ட நாள் கனவு தான் நடிப்பு, அது எனக்கு ஆரம்பத்திலேயே தெரியும். அதற்காக அவர் நடிப்புப் பயிற்சி உள்ளிட்டவைகளில் ஈடுபட்டு தன்னை தயார்படுத்திக் கொண்டார். வேறு ஒரு நிறுவனத்திற்காக அவர் படம் பண்ணுவதாக இருந்தது. ஆனால், அவரை பிடித்துப் போனதால் என் அப்பா நம்ம நிறுவனத்திலேயே பண்ணலாம் என்று சொல்லி ஆரம்பித்தோம். நான் ஆகாஷை வைத்து படம் இயக்குவது எதிர்காலத்தில் நடக்கலாம்,” என்றார்.

 

‘நேசிப்பாயா’ படத்தை டிசம்பர் மாதத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளார்கள்.

Tags: nesippaya, vishnuvaradhan, akash murali, aditi shankar, yuvan shankar raja

Share via: