இளைஞர்களின் வாழ்க்கையைப் பேசும், ‘நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே’

29 Feb 2024

பூர்வா புரொடக்ஷன்ஸ் சார்பில் இசையமைப்பாளர் பிரதீப் குமார் தயாரிப்பில், பிரசாத் ராமர் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே’.

சித்தார்த் நடித்த ‘எனக்குள் ஒருவன்’ படத்தை இயக்கிய பிரசாத் ராமர் இயக்கியுள்ள படம் இது. இப்படத்தில் புதுமுகம் செந்தூர்பாண்டியன் கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக ப்ரீத்தி நடித்துள்ளார்.

இன்றைய இளைஞர்களைப் பற்றிய படமாக உருவாகியுள்ள இப்படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. மார்ச் 8ம் தேதி இப்படம் தியேட்டர்களில் வெளியாகிறது.

படம் பற்றி இயக்குனர் பிரசாத் ராமர் பேசுகையில்,

“படம் ‘ஏ’ சான்றிதழ் என்றாலும் படத்தில் ஆபாசமான காட்சிகள் எதுவும் இல்லை. இன்றைய இளைஞர்கள் எப்படி இருக்கிறார்கள். அவர்கள் மீதான பார்வை எப்படி இருக்கிறது என்பதுதான் இப்படத்தின் கதை.

படத்தில் முத்தக் காட்சி கூட இருக்கிறது. அதற்கும் தணிக்கைக் குழுவினர் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இருந்தாலும் படத்தில் உள்ள சில காட்சிகளுக்காக ‘ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளார்கள். அப்படிப்பட்ட காட்சிகள் குறித்து படத்தில் நடித்துள்ள ஒவ்வொருவருக்கும் சொல்லிவிட்டுத்தான் அவற்றைப் படமாக்கினோம்.

மதுரையிலிருந்து தஞ்சை, புதுக்கோட்டை, கும்பகோணம் வழியாக மாயவரத்தை அடைகிறார்கள் இரண்டு இளைஞர்கள். பூம்புகார் செல்வதற்கு முன்பு அவர்களுடன் அந்தப் பயணத்தில் ஒரு பெண்ணும் இணைகிறாள். அந்த இளைஞர்களின் நோக்கம் ஒன்றாக இருக்க, அந்த பெண்னின் எதிர்பார்ப்பு வேறாக இருக்கிறது. இறுதியில் இருவரது எண்ணங்கள் மற்றும் புரிதல் எப்படி இருக்கிறது, அவர்கள் மீதான சமூகத்தின் புரிதல் எப்படி இருக்கிறது, என்பதை பற்றித் தான் படம் பேசுகிறது.

இந்த படத்தில் எந்தவித மெசஜையும் சொல்லவில்லை, இது சரி, அது தவறு என்று அறிவுரையும் சொல்லவில்லை, எந்த ஒரு தீர்வையும் சொல்லவில்லை. இப்படிப்பட்ட விசயங்களை இளைஞர்கள் எப்படி பார்க்கிறார்கள், என்பதை பற்றி மட்டுமே பேசியிருக்கிறோம், அதை திரையில் பார்க்கும் போது பார்வையாளர்களுக்கு பல கேள்விகள் எழும்.

 இந்த படத்தை வழக்கமான சினிமா பாணியில் எடுக்காமல் நிஜ வாழ்க்கை பயணமாக இருக்க வேண்டும் என்று நினைத்து எடுத்திருக்கிறோம். அதற்காக வழக்கமான திரைப்படப் பாணியில் இருந்து பல  விசயங்களை தவிர்த்திருக்கிறோம். அதேபோல், மதுரை உள்ளிட்ட பகுதிகளை காட்டும் போது வழக்கமாக காட்டப்படும் லொக்கேஷன்களை காட்டாமல், இதுவரை திரைப்படங்களில் பார்க்காத மதுரை பகுதிகளில் காட்சிகளை படமாக்கினோம். அப்பகுதிகளில் இருப்பவர்கள் படத்துடன் தங்களை தொடர்புபடுத்திக் கொள்வதற்காக தான் அப்படி காட்டியிருக்கிறோம்.. தஞ்சை, புதுக்கோட்டை, கும்பகோணம் என்று அனைத்து பகுதிகளையும் இப்படித்தான் கையாண்டிருக்கிறோம்,” என்றார்.

தயாரிப்பாளர் பிரதீப் குமார் பேசுகையில்,

“எனக்குள் ஒருவன்’ படத்தின் போதே இயக்குநர் பிரசாத் ராமரைத் தெரியும். அன்று முதல் நாங்கள் நண்பர்களாக பழகி வருகிறோம். எனக்கு தயாரிப்பாளர் ஆக வேண்டும் என்ற எண்ணம் கிடையாது. ஒரு முறை அவர் இந்தக் கதையை என்னிடம் சொன்ன போது, புதிதாகவும், பொழுதுபோக்கு அம்சம் நிறைந்த ஜாலியான கதையாகவும் இருந்தது, அதனால் உடனே ஆரம்பித்து விடலாம் என்று சொன்னேன், பிறகு தான் தெரிந்தது நான் தான் தயாரிப்பாளர் என்று. நான் மட்டும் தயாரிக்கவில்லை, எனக்காக என் குடும்பமே ஒன்று சேர்ந்து இந்த படத்தைத் தயாரித்திருக்கிறார்கள். படம் நன்றாக வந்திருக்கிறது. படத்தை பார்த்தவர்கள் அனைவரும் நட்சத்திரங்கள் பற்றி பேசுகிறார்கள், அவர்களை கையாண்ட விதம் பற்றி பேசுகிறார்கள், படம் அனைவருக்கும் பிடித்திருக்கிறது. நிச்சயம் ரசிகர்களுக்கும் பிடிக்கும் என்று நம்புகிறோம்.” என்றார்.

Tags: Nalla Perai Vaanga Vendum Pillaigale

Share via: