தமிழ் சினிமாவின் நம்பர் 1 நகைச்சுவை நடிகரான வடிவேலு கடந்த சில வருடங்களாக அதிகப் படங்களில் நடிக்காமல் ஒதுங்கி இருந்தார்.

ஷங்கர் தயாரிப்பில், வடிவேலு நடிப்பதாக இருந்த ‘இம்சை அரசன் 24ம் புலிகேசி’ படத்தில் ஏற்பட்ட பிரச்சினையால் வடிவேலு மீது ஷங்கர் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்த காரணத்தால் அவருக்கு படங்களில் நடிக்க தடை விதிக்கப்பட்டதாக சொல்லப்பட்டது.

ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு அந்த புகார் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு பிரச்சினை முடிவுக்கு வந்தது.

அதையடுத்து சுராஜ் இயக்கத்தில் வடிவேலு கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தை அறிவித்தார்கள். அந்தப் படத்திற்கு ‘நாய் சேகர்’ என தலைப்பு வைக்க திட்டமிட்டிருந்தார்கள். சுராஜ் இயக்கத்தில் சுந்தர் சி கதாநாயகனாக நடித்த ‘தலைநகரம்’ படத்தில் வடிவேலுவின் கதாபாத்திரப் பெயர் தான் ‘நாய் சேகர்’.

ஆனால், அந்தப் பெயரை சதீஷ் கதாநாயகனாக நடிக்கும் ஒரு புதிய படத்திற்கு வைத்தார்கள். அதன்பிறகு டைட்டிலுக்கான பஞ்சாயத்து நடைபெற்றது.

இந்நிலையில் நேற்று சுராஜ், வடிவேலு படத்திற்கு ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ என்ற படத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. லைக்கா தயாரிப்பில் சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைக்கிறார். 

படத்தின் முதல் பார்வை போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

‘நாய் சேகர்’ என்ற பெயர் வடிவேலுவைத் தவிர வேறு யாருக்கும் நிச்சயம் பொருத்தமாக இருக்காது என்பதே உண்மை.