லைகா புரடக்சன்ஸ் சுபாஸ்கரன்  தயாரிப்பில், சுராஜ் இயக்கத்தில், நீண்ட இடைவெளிக்குப் பிறகு வடிவேலு நாயகனாக நடித்து வரும் படம் ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’.

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

தமிழ் சினிமாவில் மறக்க முடியாத காமெடி கூட்டணியைத் தந்த, நடிகர், இயக்குநர் பிரபுதேவாவும், வடிவேலுவும் இப்படத்தில் ஒரு பாடலில் இணைந்து பணியாற்றி வருகிறார்கள். 

இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் சென்னை, மைசூர் முதலான பகுதிகளில் நடந்தது. தற்போது சென்னை பிரசாத் ஸ்டூடியோவில் மிகப் பிரமாண்டமான செட் அமைக்கப்பட்டு, மும்பை நடனக் கலைஞர்கள் பங்கேற்க, ஒரு பாடல் கோலாகலமாக படமாக்கப்பட்டு வருகிறது. 

இப்பாடலுக்கு பிரபுதேவா நடனம் அமைக்கிறார். ‘வில்லு’ படத்தைத் தொடர்ந்து,  14 வருடங்களுக்குப் பிறகு பிரபுதேவா, வடிவேலு கூட்டணி இப்பாடலில் இணைந்து பணியாற்றுவது குறிப்பிடதக்கது.   

விரைவில் இப்படத்தின் முதல் பார்வை, இசை, டிரைலர் குறித்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாகுமென தயாரிப்புக் குழு தெரிவித்துள்ளது.