ஆங்கிலப் படத்தைத் தழுவி எடுக்கப்படும் ‘மர்டர் லைவ்’

20 Sep 2022

எம்.ஏ. முருகேஷ் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'மர்டர் லைவ்'. 

வினய் ராய் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக கன்னட நடிகை ஷர்மிளா மாண்ட்ரே நடித்திருக்கிறார். இவர்களுடன் ஹாலிவுட் நடிகை நவோமி வில்லோ அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். 

பிரசாந்த் டி. மிஸாலே ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஹிதேஷ் மஞ்சுநாத் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை மதன் கவனிக்க, கிராபிக்ஸ் காட்சிகளை இங்கிலாந்தைச் சேர்ந்த டி கிரியேட்டிவ் எனும் நிறுவனம் மேற்கொண்டுள்ளது. சைக்கோ கிரைம் திரில்லர் வகையிலான இந்தத் திரைப்படத்தை டாட் காம் எண்டர்டெய்ன்ட் லிமிடெட் நிறுவனம் பிரமாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறது.

படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், 

''ஹாலிவுட்டில் வெளியான 'ப்ளைன்ட் டேட்', 'ஸ்கை ஹை', 'டெர்மினல் எக்ஸ்போசர்', 'கிளிட்ச்', 'இன் தி கோல்ட் நைட்' ஆகிய படங்களை எழுதி, இயக்கி, தயாரித்த தயாரிப்பாளர் நிக்கோ மாஸ்டோராகிஸ் இயக்கத்தில் வெளியான 'டாட் காம் ஃபார் மர்டர்' என்ற ஆங்கிலப் படத்தை தழுவி இந்த 'மர்டர் லைவ்' திரைப்படம் தயாராகி இருக்கிறது. 

புத்திசாலித்தனத்துடன் கூடிய கிரைம் திரில்லர் ஜானரில் உருவாகி இருக்கும் இதன் திரைக்கதை புதுமையாகவும், ஸ்டைலிஷாகவும் இருக்கும்.

ஒரு சைக்கோ கொலையாளிக்கும், நான்கு பெண்களுக்கும் இடையே நிகழும் சம்பவங்கள் தான் படத்தின் பரபரப்பான திரைக்கதை.

இந்தத் திரைப்படம் முழுவதும் இங்கிலாந்தில் படமாக்கப்பட்டது. நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி முழு படப்பிடிப்பும் நடைபெற்றது. இப்படத்தின் நாயகன் உலகில் அனைத்து இடங்களிலும் இருக்கும் கணினி மூலமாகவோ இணையதளம் மூலமாகவோ ஊடுருவி, அதிர்ச்சியூட்டும் சம்பவங்களை அரங்கேற்றுவார். ஆக்சன் காட்சிகளும், பார்வையாளர்களால் எளிதில் யூகிக்க முடியாத சுவாரஸ்யமான திருப்பங்களும் ரசிகர்களை வியக்க வைக்கும்,'' என்றார்.

படப்பிடிப்பு நிறைவடைந்து இறுதிக் கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படத்தின் முதல் பார்வை தற்போது வெளியிடப்பட்டிருக்கிறது. விரைவில் சிங்கிள் ட்ராக் மற்றும் டீசர் வெளியாக உள்ளது.

Tags: murder live, vinay rai, ma murugesh

Share via: