முஃபாசா: தி லயன் கிங் படத்தில் நிறைய எமோஷன்ஸ் இருக்கு - நடிகர் அர்ஜூன் தாஸ்

17 Dec 2024

கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான ஆக்ஷன் பிளாக்பஸ்டர் திரைப்படமான 'தி லயன் கிங்' வெற்றியைத் தொடர்ந்து ’முஃபாசா: தி லயன் கிங்’ டிசம்பர் 20, 2024 அன்று வெளியாகிறது. தமிழில் முஃபாசா கதாபாத்திரத்திற்கு நடிகர்கள் அர்ஜுன் தாஸ், டாக்காவுக்கு அசோக் செல்வன், ரோபோ சங்கர் மற்றும் சிங்கம் புலி முறையே பும்பா மற்றும் டிமோன், ரஃபிக்கியின் இளைய பதிப்பிற்கு நடிகர் விடிவி கணேஷ் மற்றும் கிரோஸின் குரலாக நடிகர் எம். நாசர் ஆகியோர் குரல் கொடுத்திருக்கின்றனர். இதன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு இன்று நடைபெற்றது.

நடிகர் நாசர், “நடிகனாகவும் டப்பிங் கலைஞராகவும் பல படங்கள் பணிபுரிந்து விட்டேன். சிவாஜி சார், அமிதாப் பச்சன் சார், ராஜா அண்ணன் இவர்கள் குரல் எல்லாம் எனக்கு ரொம்பப் பிடிக்கும். இதில் சிவாஜி சார் குரல் எனக்கு ஆதர்சம். உங்களுக்கு எத்தனை வயதானாலும் உங்களுக்குள் ஒரு குழந்தை எப்போதும் இருக்கும். அதனால், இது குழந்தைகளுக்கான படம் மட்டும் கிடையாது. அனைவரும் இதை பார்க்கலாம். தொன்மையான புராணக்கதைகள், வரலாற்றுக்கதைகள் எல்லாம் நம்மிடம் உள்ளது. அதையும் நல்ல தரத்தில் இன்னும் மெருகூட்டி படமாக்க வேண்டும்”.

நடிகர் சிங்கம்புலி, “’தி லயன் கிங்’ படத்தில் டப்பிங் வாய்ப்பு எனக்குக் கிடைத்த கிஃப்ட். இந்தப் படத்தில் ஒவ்வொரு கேரக்டரும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். இதில் எனக்கு டீமோன் கதாபாத்திரம் கிடைத்திருப்பதில் மகிழ்ச்சி”.

நடிகர் அர்ஜூன்தாஸ், “இந்தப் படத்தில் எல்லா கதாபாத்திரங்களுக்கும் நிறைய எமோஷன் இருக்கும். அதனால், மற்ற படங்களுக்கு டப் செய்வது போல அல்லாமல், கவனமாக செய்தேன். உங்களுக்குப் பிடிக்கும் என நினைக்கிறேன். நானும் முஃபாசாவின் மிகப்பெரிய ரசிகன். இந்தப் படத்தில் எனக்கு வாய்ப்பு கிடைத்திருப்பது எனக்கான வட்டம் முழுமையாகி விட்டதாக நினைக்கிறேன்” என்றார்.

நடிகர் அசோக்செல்வன், “இதுபோன்று விலங்குகளுக்கு நான் டப்பிங் பேசுவது இதுதான் முதல்முறை. இந்த அனுபவம் புதியதாக இருந்தது. நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டேன்” என்றார்.

நடிகர் ரோபோ ஷங்கர், “இந்த வாய்ப்பு எனக்குக் கிடைத்திருப்பது மகிழ்ச்சி! உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும் எனவும் நம்புகிறேன்”.

நடிகர் விடிவி கணேஷ், “ரஃபிக்கின் இளைய வெர்ஷனுக்கு நான் குரல் கொடுத்திருக்கிறேன். கேட்டுவிட்டு சொல்லுங்கள்!”.

Tags: mufasa the lion king, arjun das, nasser, vtv ganesh, robo shankar, ashok selvan, singam puli

Share via: