எட்செட்ரா என்டர்டெயின்மென்ட் மற்றும் மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கார்ப்பரேஷன் தயாரிப்பில் ஜமீல் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘மஹா’. 

ஹன்சிகா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்தப் படத்தில் சிம்பு 40 நிமிடங்கள் வரும் அளவில் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருக்கிறார்.

கொரானோ காலகட்டத்தில் இப்படத்தின் படப்பிடிப்பை கடுமையான கட்டுப்பாடுகளுடன் படக்குழுவினர் நடத்தி முடித்துள்ளனர். ஊரடங்கு அறிவிப்பதற்கு முன்பாக கிளைமாக்ஸ் காட்சியை மூன்றே நாட்களில் எடுத்து முடிக்க வேண்டிய நிலை.

படத்தில் வில்லனாக நடித்த மலையாள நடிகர் சுஜித் சங்கரும் உடனடியாக வேறு படப்பிடிப்பில் கலந்து கொள்ள வேண்டி இருந்ததாம். எனவே, தொடர்ச்சியாக 22 மணி நேரம் கிளைமாக்ஸ் காட்சியைப் படமாக்கி இருக்கிறார்கள்.

அந்த ஆக்ஷன் கிளைமாக்ஸ் காட்சியில் துளியும் அசராமல் நடித்துக் கொடுத்தாராம் ஹன்சிகா. அவரது ஈடுபாட்டைக் கண்டு படக்குழுவும், தயாரிப்பாளர்களும் நன்றி தெரிவித்துள்ளார்கள்.

ஹன்சிகாவின் 50வது படமான இப்படம் ஜுலை 22ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.