யுவன்சங்கர் ராஜாவின் ஒய்எஸ்ஆர் பிலிம்ஸ் தயாரிப்பில், சீனு ராமசாமி இயக்கத்தில், விஜய் சேதுபதி, காயத்ரி மற்றும் பலர் நடித்துள்ள படம் மாமனிதன். 

இளையராஜா, யுவன்சங்கர் ராஜா முதன் முறையாக இணைந்து இப்படத்திற்கு இசையமைத்துள்ளனர். 

இப்படத்தை ஸ்டுடியோ 9 சார்பில் ஆர்கே சுரேஷ் ஜூன் 24ஆம் தேதி தமிழகம் முழுவதும் வெளியிடுகிறார். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. நிகழ்வில் இயக்குனர் சீனு ராமசாமி, விஜய் சேதுபதி, காயத்ரி, ஆர்கே சுரேஷ் கலந்து கொண்டனர். 

நிகழ்ச்சியில் ஆர்கே சுரேஷ் பேசுகையில்,

வாழ்வியலைப் பற்றி படமாக எடுக்கும் இயக்குனர்கள் குறைவாக உள்ளனர். அவர்களில் ஒருவர் சீனுராமசாமி. தர்மதுரையின் சாயலில் இல்லாமல் ஒரு புது அனுபவமாக இந்தப் படம் இருக்கும். எல்லோருடைய வாழ்கையிலும் அவர்கள் ரிலேட் செய்துகொள்ளும் படமாக இப்படம் இருக்கும். இந்த படத்தைத் தயாரித்ததற்கு யுவன் சாருக்கு நன்றி கூறிக் கொள்கிறேன். இந்த கதை மூன்று இடங்களில் நடக்கும், தேனியில் ஆரம்பித்து, கேரளா சென்று, காசியில் முடிவடைவது போல் கதை அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் எனக்கு ஒரு பெரிய அதிர்வை ஏற்படுத்தியது. விஜய் சேதுபதி இந்தப் படத்தில் சிறப்பான பங்களிப்பைக் கொடுத்துள்ளார். இந்தப் படம் அவருக்கு பெரிய வெற்றியைக் கொடுக்கும். காயத்ரிக்கு இந்த படம் முக்கியமானதாக இருக்கும். அவர் மூன்று வெவ்வேறு வகையான சூழ்நிலையில் தன் நடிப்பை வெளிப்படுத்த வேண்டியது போல கதையமைப்பு இருக்கும். அதை அவர் சிறப்பாகச் செய்துள்ளார். இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியை ஈட்டும் என நான் உறுதியாய் நம்புகிறேன். 

நடிகை காயத்ரி பேசுகையில்,

கிராமம் என்று நமக்குள் இருக்கும் பார்வையை, வேறு கோணத்தில் காட்டுபவர் சீனுராமசாமி சார். இந்தப் படம் ஒரு காதல் கதை. இந்தப் படத்தில் 40 வருட வாழ்க்கைக் கதை இருக்கிறது. அதற்கான உழைப்பைக் கொடுத்துள்ளோம். இந்தப் படம் நிஜ வாழ்கையை பிரதிபலிக்கும் விதமாக வந்துள்ளது. அதற்குக் காரணம் இயக்குனர் சீனுராமசாமி. இந்த படத்தில் யுவன் சார், இளையராஜா சார் இணைந்து இசையமைப்பது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்தப் படத்தில் பணியாற்றியது என் பாக்கியம் நன்றி. 


விஜய் சேதுபதி பேசுகையில்,

நீங்க நடித்தால் நானும், அப்பாவும் மியூசிக் பண்றோம் என யுவன் ஒரு நாள் சொன்னார். அப்படி துவங்கிய படம் தான் மாமனிதன். மிகப்பெரிய விஷயத்தை எளிமையா சொல்லக் கூடிய இயக்குநர் சீனு ராமசாமி. அப்படித்தான் இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறார். நான் நடிகனாக ஆசைப்பட்ட காலத்தில் குரு சோமசுந்தரம் போல் நடிக்க வேண்டும் என ஏக்கம் இருக்கும். அப்படிபட்ட ஒரு நடிகர் குரு சோமசுந்தரம்.  அவருடன் நடித்தது மகிழ்ச்சி. இந்தப் படத்தை குறுகிய காலத்த்தில் எடுத்து முடிக்க இயக்குநரும், ஒளிப்பதிவாளரும் தான் காரணம். மூன்று இடங்களில் நடக்க கூடிய  கதையை இவ்வளவு சீக்கிரம் எடுத்து முடிக்க இவர்களுடைய  அர்ப்பணிப்பு தான் காரணம். பலர் நடிக்க ஒத்துகொள்ளாத கதாபாத்திரத்தை காயத்ரி ஏற்றுகொண்டு நடித்துள்ளார். அவருடைய திறமைகள் இன்னும் வெளிக்கொண்டு வரப்படவில்லை. இந்தப் படம் நம்முடைய கதையைக் கூறுவது போல் இருக்கும். யுவன் சங்கர் ராஜாவும், இளையராஜாவும் இணைந்து என் படத்திற்கு இசையமைக்கப் போகிறார்கள் என்ற வாய்ப்பு எனக்கு வந்தபோது, சீனுராமசாமி தான் இந்தப் படத்தை இயக்க வேண்டும் என்று நான் நினைத்தேன். இந்தப் படம் ஒரு பெரிய அனுபவமாக இருக்கும். 

இயக்குனர் சீனுராமசாமி பேசுகையில்,

இந்தத் திரைப்படம் மூலமாக உலகமே விஜய் சேதுபதியை திரும்பிப் பார்க்க வேண்டும் என்று நான் விருப்பபடுகிறேன். முதலில் இந்தப் படத்தில் கார்த்திக் ராஜா- யுவன் சங்கர் ராஜா - இளையராஜா இசையமைப்பதாக இருந்தது. பின்னர் கார்த்திக் ராஜா ஒரு சில காரணத்தால் விலகிவிட்டார். இந்தக் கதை பலரால் நிராகரிக்கப்பட்டது. அப்போது தான் விஜய் சேதுபதி என்னை அழைத்தார். பின்னர் இந்தப் படம் ஆரம்பமானது. இந்த படத்தை யுவன் சங்கர் ராஜா தயாரிக்க முடிவெடுத்த போது, நான் அவர்களுக்கு இது ஒரு முக்கியமான படமாக இருக்க வேண்டும் என்று நினைத்தேன். இந்தப் படம் இளையராஜா அவர்கள் வாழ்ந்த இடத்தில் படமாக்க விரும்பினேன். அவர் வாழ்ந்த தேனி பண்ணைபுரத்தில் இந்த படத்தின் பல காட்சிகள் படமாக்கப்பட்டது. நடிகர்களுக்குள் இருக்கும் இயல்புணர்ச்சியை வெளிக் கொண்டுவருவதே என்னுடைய பணியாக இருந்தது. நான் பல நடிகைகளுக்கு கதை சொன்னேன். பலருக்கு இரண்டாம் பாதியில் விருப்பம் இல்லை. அப்போது காயத்ரி இந்த திரைப்படத்தில் நடிக்க ஆர்வம் காட்டி நடித்துக் கொடுத்தார். இந்த படத்திற்கு கண்டிப்பாக காயத்ரிக்கு தேசியவிருது கிடைக்கும்.  இந்த படத்தை ஜீவா மற்றும் இளையராஜாவிற்கு அர்ப்பணித்து இருக்கிறேன். நம்மைச் சுற்றியுள்ள மாமனிதர்களை அடையாளப்படுத்தும் படம் தான் இது. இந்தப் படத்தை நீங்கள் அனைவரும் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். இந்த படத்தை பார்க்கும் மக்கள் அவர்களது கருத்தைப் பதிவு செய்ய வேண்டும்.