ஆஹா ஓடிடி தளத்தில் ‘குத்துக்குப் பத்து’ இணைய தொடர்

06 May 2022

‘டெம்பிள் மங்கீஸ்’ என்ற இணையதள குழுவினர் உருவாக்கியிருக்கும் 'குத்துக்கு பத்து' என்ற புதிய வலைத்தளத் தொடரின் முதல் பார்வை மற்றும் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. 

இந்தத் தொடரைப் பிரபலப்படுத்துவதற்காக குழுவினர், ‘நோ பேச்சு.. ஒன்லி பஞ்ச்சு’ என்ற வித்தியாசமான உத்தியை கையாண்டு, அனைவரின் கவனத்தையும் கவர்ந்து வருகிறார்கள்.  

திரைப்பட இயக்குநர் விஜய் வரதராஜ் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய வலைத்தளத் தொடர் 'குத்துக்கு பத்து'. 

இந்தத் தொடரில் ‘டெம்பிள் மங்கீஸ்’ குழுவினருடன்  'ஆடுகளம்' நரேன், போஸ் வெங்கட், ஷா ரா, 'பிக்பாஸ்' புகழ் சம்யுக்தா, 'நவம்பர் ஸ்டோரீஸ்' புகழ் ஜானி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஜெகதீஷ் ரவிச்சந்திரன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் தொடருக்கு பாலமுரளி பாலு இசையமைத்திருக்கிறார். சந்தோஷ் செந்தில் படத்தொகுப்பை கவனிக்க, மதன் குமார்  கலை இயக்குநராகப் பணியாற்றி இருக்கிறார். 

டார்க் காமெடி ஜானரில் தயாராகியிருக்கும் இந்தத் தொடரை  டி கம்பெனி என்ற பட நிறுவனத்தின் மூலம் தயாரிப்பாளர் ஏ.கே.வி. துரை  தயாரித்திருக்கிறார்.

‘குத்துக்குப் பத்து’ குறித்து இயக்குநர் விஜய் வரதராஜ் கூறுகையில்,

''காதல் விவகாரம் ஒன்றில் மத்தியஸ்தம் செய்ய விரும்பி காதலர்களுக்கு இடையே பேச்சுவார்த்தை நடத்தும் போது நண்பன் மீது அடி விழுகிறது. இதன்பிறகு நடைபெறும் களேபரங்களும், சம்பவங்களும் தான் இதன் திரைக்கதை. ஒரே நாளில் நடைபெறும் வகையில் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த வலைதளத் தொடர் 'ஆஹா' ஒரிஜினல் படைப்பாக வெளியாவதில் எங்கள் குழுவினருக்கு மிக்க மகிழ்ச்சி,'' என்றார்.

ஆஹா ஒரிஜினல்ஸ் வணிகப்பிரிவு தலைவர் சிதம்பரம் கூறுகையில்,

“டெம்பிள் மங்கீஸ் போன்ற உள்ளுர் திறமையாளர்களுடன், ஆஹா இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சியளிக்கிறது. இவர்களைப் போலவே நக்கலைட்ஸ் குழுவினருடனும் இணைந்து ‘அம்முச்சி 2’ என்ற வலைதளத் தொடரை தயாரித்து வழங்குவதில் மகிழ்ச்சியடைகிறோம். மேலும் தொடர்ந்து தமிழின் பிரத்யேக இளம் திறமையாளர்களுடன் ஆஹா இணைந்து பணியாற்றவும் திட்டமிட்டிருக்கிறோம். அத்துடன் பார்வையாளர்களின் இதயங்களை வருடும் கதைகளை வழங்குவதற்கான எங்களின் தேடலும் தொடர்கிறது,” என்றார்.

Tags: aha, kuthukku pathu, temple monkeys

Share via:

Movies Released On March 15