தனுஷ், மாரி செல்வராஜ் கூட்டணி முதல் முறையாக இணைந்த ‘கர்ணன்’ படத்திற்கு நல்லதொரு வரவேற்பு கிடைத்தது. படமும் 50 கோடிக்கும் அதிகமான வசூலைக் குவித்ததாக திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தக் கூட்டணி இப்போது மீண்டும் இணைய உள்ளது. இது பற்றிய அறிவிப்பை இன்று தனுஷ் டிவிட்டர் மூலம் வெளியிட்டார்.

‘கர்ணன்’ படத்தின் பிளாக் பஸ்டர் வெற்றிக்குப் பிறகு நானும், மாரி செல்வராஜும் மீண்டும் இணையப் போகிறோம் என்று அறிவிப்பதில் மகிழ்ச்சி. படத்தின் முன் தயாரிப்புப் பணிகள் நடந்து வருகிறது, படப்பிடிப்பு அடுத்த வருடம் ஆரம்பமாகும்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

அதை ரிடிவீட் செய்துள்ள மாரி செல்வராஜ், “என் கர்ணனுக்கு நன்றியும், ப்ரியமும், எப்போதும்” என்று பதிலளித்துள்ளார்.

தனுஷ் தற்போது கார்த்திக் நரேன் இயக்கத்தில் ஒரு படம், செல்வராகவனுடன் ‘நானே வருவேன்’ ஆகிய படங்களில் அடுத்தடுத்து நடிக்க உள்ளார். இப்படங்களுக்குப் பிறகு மாரி செல்வராஜ் இயக்க உள்ள படம் ஆரம்பமாகலாம்.

மாரி செல்வராஜ், ‘கர்ணன்’ படத்திற்குப் பிறகு துருவ் விக்ரம் நடிக்கும் படத்தை இயக்கப் போகிறார்.