‘கங்குவா’ 2-ம் பாகம் திட்டங்கள்: ஞானவேல்ராஜா விளக்கம்

10 Jul 2024

‘கங்குவா’ 2-ம் பாகத்துக்கான திட்டம் குறித்து ஞானவேல்ராஜா விளக்கம் அளித்துள்ளார்.

சிவா இயக்கத்தில் சூர்யா, திஷா பதானி, பாபி தியோல் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கங்குவா’. ஞானவேல்ராஜா தயாரித்துள்ள இந்தப் படம் அக்டோபர் 10-ம் தேதி வெளியாகவுள்ளது. இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

இதனிடையே, தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா அளித்துள்ள பேட்டியில் ‘கங்குவா’ 2-ம் பாகத்துக்கான திட்டங்கள் குறித்து பேசியிருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

“’கங்குவா’ படம் தொடங்கப்பட்ட போதே இரண்டு பாகம் என முடிவு செய்துவிட்டோம். அதற்கான கதையும் தயாராகிவிட்டது. ரசிகர்களை உற்சாகப்படுத்தும் சில விஷயங்கள் முதல் பாகத்தில் இருக்கிறது. அது 2-ம் பாகத்துக்கு பெரிய எதிர்பார்ப்பினை உருவாக்கும்.

முதல் பாகத்தின் படப்பிடிப்பு 185 நாட்கள் நடைபெற்றது. 2-ம் பாகத்துக்கான படப்பிடிப்பு அடுத்த ஆண்டு இறுதி அல்லது 2026-ம் ஆண்டு தொடக்கத்தில் தொடங்கவுள்ளோம். 2027-ம் ஆண்டு பொங்கல் அல்லது கோடை விடுமுறைக்கு ‘கங்குவா’ 2-ம் பாகம் வெளியாகும்”

இவ்வாறு ஞானவேல்ராஜா தெரிவித்துள்ளார்.

Tags: kanguva, suriya

Share via: