பேச்சுவார்த்தை தொடக்கம்: அக்.10-ல் வெளிவருமா ‘கங்குவா’?

23 Aug 2024

அக்டோபர் 10-ம் தேதி ’கங்குவா’ படத்தினை வெளியிடலாமா என்ற பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளது.

சிவா இயக்கத்தில் சூர்யா, பாபி தியோல், திஷா பதானி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கங்குவா’. ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் அக்டோபர் 10-ம் தேதி வெளியாகவுள்ளது. இதற்கான விளம்பரப்படுத்தும் பணிகளும் தொடங்கப்பட்டுள்ளன. இதே தேதியில் ரஜினி நடித்துள்ள ‘வேட்டையன்’ படமும் வெளியாகும் என்று லைகா நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த இரண்டு படங்களுமே ஒரே தேதியில் வெளியானால், வசூல் ரீதியாக இரண்டு படங்களுக்குமே பெரும் நஷ்டம் ஏற்படும் என்று வர்த்தக நிபுணர்கள் கூறி வருகிறார்கள். ஏனென்றால், தமிழ்நாட்டில் பெரிய அளவில் வசூல் பாதிப்பு இல்லை என்றாலும், குறிப்பாக ஆந்திரா மற்றும் வெளிநாட்டில் வசூல் பாதிப்பு பெரியளவில் இருக்கும் என்று கூறப்படுகிறது.

ஆனால், இரண்டு படங்களுக்குமே இந்த தேதியினை விட்டால் வேறு நல்ல தேதி இல்லை என்பதால் அக்டோபர் 10-ம் தேதி வெளியீடு என்ற முனைப்பில் இரண்டு இந்றுவனங்களுமே இருக்கிறது. தற்போது இந்த இரண்டு படங்களின் விநியோகஸ்தர்கள் தயாரிப்பு நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார்கள்.

இதில் ‘கங்குவா’ படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா முதலில் அக்டோபர் 10-ம் தேதி வெளியீடு என்று உறுதியாக இருந்தாலும் இப்போது அந்த உறுதியில் இருந்து கொஞ்சம் தளர்ந்து இருக்கிறார். இதனால் இன்னும் இரண்டு நாட்களில் ‘கங்குவா’ அக்டோபர் 10-ம் தேதி வெளியாகுமா என்பது உறுதியாக தெரிந்துவிடும்.

ஒரே வேளை அக்டோபர் 10-ம் தேதி ‘கங்குவா’ வெளியாகாத பட்சத்தில், தீபாவளிக்கு வெளியாகும் என்று கூறப்படுகிறது. 

Tags: kanguva, suriya

Share via: