ரஜினிகாந்தை முந்திய கமல்ஹாசன்

08 May 2020

தமிழக அரசியலில் ஜெயலலிதா, கலைஞர் மறைவுக்குப் பிறகு அரசியல் ஆசையில் உள்ளே நுழைந்துள்ளவர்கள் கமல்ஹாசன், ரஜினிகாந்த்.

கமல்ஹாசன், மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் 2018 பிப்ரவரியில் அரசியல் கட்சி ஆரம்பித்து கடந்த வருடம் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலிலும் போட்டியில் இறங்கினார்.

ஆனால், ரஜினிகாந்த் அரசியல் கட்சி ஆரம்பிப்பேன் என்று சொன்னாரே தவிர அதற்கான ஆரம்ப கட்ட வேலைகளைக் கூட இன்னும் ஆரம்பிக்கவில்லை.

சினிமாவில் ரஜினிகாந்த்திற்கு இருக்கும் வரவேற்பும், வசூலும் கமல்ஹாசனுக்கு இல்லை என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

அதே சமயம் அரசியல் என்று வரும் போது ரஜினிகாந்தை விட கமல்ஹாசன் மீது மக்களுக்கு ஓரளவிற்கு நம்பிக்கை துளிர் விட ஆரம்பித்திருக்கிறது.

டிவிட்டர் சமூக வலைத்தளத்தில் ரஜினிகாந்த் நுழைந்த அன்றே அதிக பாலோயர்களைப் பெற்று சாதனை புரிந்தார். ஆனால், எப்போதோ ஒரு முறை மட்டுமே டிவிட்டர் பக்கம் வருவார் ரஜினிகாந்த்.

கமல்ஹாசன் அப்படியில்லை, டிவிட்டர் தளத்தில் தான் அரசியல் செய்து கொண்டிருக்கிறார் என்று விமர்சிக்கப்படும் அளவிற்கு டிவிட்டரைப் பயன்படுத்தினார்.

கொரானோ ஊரடங்கு இருக்கும் சமயத்தில், தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளை நேற்றுத் திறந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் சார்பிலும் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. நீதிமன்ற உத்தரவுகளை கடைபிடிக்கவில்லை என நீதிமன்றமும் டாஸ்மாக் கடைகளைத் திறக்க தடை விதித்து, ஆன்லைனில் மட்டும் அதன் வியாபாரத்தை செய்யச் சொல்லி உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் டிவிட்டர் தளத்தில் ரஜினிகாந்தை விடவும் கமல்ஹாசன் அதிக பாலோயர்களைப் பெற்று ரஜினியை முந்தியுள்ளார்.

ரஜினிகாந்திற்கு 57 லட்சம் பாலோயர்களும், கமல்ஹாசனுக்கு 60 லட்சம் பாலோயர்களும் தற்போது உள்ளனர்.

கமல்ஹாசனின் டாஸ்மாக்கிற்கு எதிரான இன்றைய நீதிமன்ற வெற்றி அவருக்கு ஒரு வரவேற்பைப் பெற்றுக் கொடுத்துள்ளது.

Tags: rajinikanth, kamalhaasan, twitter

Share via: