‘ரோபோ’வில் நடிக்காதது ஏன்? – கமல் விளக்கம்

29 Jun 2024

‘ரோபோ’வில் நடிக்காதது ஏன் என்று கமல் அளித்த பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார்.

ஷங்கர் – ரஜினி இணைப்பில் வெளியாகி மாபெரும் வரவேற்பினைப் பெற்ற படம் ‘எந்திரன்’. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வெளியிட்டது. இந்தப் படம் முதலில் கமலை வைத்து தான் தொடங்கப்பட்டது. இதற்கான போட்டோ ஷுட் எல்லாம் நடைபெற்று, பின்பு கைவிடப்பட்டது. இந்தக் கதையினை தான் பின்பு ரஜினியை வைத்து ‘எந்திரன்’ என்ற பெயரில் உருவாக்கினார் ஷங்கர்.

தற்போது ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘இந்தியன் 2’. இதனை விளம்பரப்படுத்த அளித்த பேட்டியில் கமல், ‘ரோபோ’வில் நடிக்காதது ஏன் என்று குறிப்பிட்டுள்ளார். அதில் கமல் கூறியிருப்பதாவது:

“ரோபோ ஒரு ஆங்கில நாவல். நான், ஷங்கர், எழுத்தாளர் சுஜாதா மூவரும் வெவ்வேறு யோசனைகள் பற்றி பேசினோம். ரோபோவை படமாக செய்ய வேண்டும் என்று சுஜாதா நினைத்தார். நானும், ஷங்கரும் சோதனைக்கு முயன்றோம். ஆனால், அப்போதைய திரைத்துறை அதற்கு ஆர்வம் காட்டவில்லை.

எனது தேதிகள், நேரம், சந்தை மதிப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் அதற்கு காரணமாக கூறினார்கள். அதனால் நானும் அந்தச் சமயத்தில் ஆர்வம் காட்டவில்லை. அந்தக் கதையினை நண்பர் ஷங்கர் சரியான நேரத்தில் எடுத்து பெரிய வெற்றியாக மாற்றினார். ஒரு யோசனையை யார் வேண்டுமானாலும் சரியான நேரத்தில் தேர்ந்தெடுத்து பயனடையலாம்”

இவ்வாறு கமல் தெரிவித்துள்ளார்.

மேலும், ‘2.0’ படத்தில் வில்லனாக நடிக்க மறுத்தது ஏன் என்ற கேள்விக்கு “இன்னும் சில காலம் நாயகனாகவே இருக்க விரும்புகிறே என ஷங்கரிடம் கூறினேன்” என கமல் பதிலளித்துள்ளார்.

Tags: kamal haasan, robo, shankar

Share via: