பிரித்விராஜ் புரொடக்சன்ஸ் சார்பில் சுப்ரியா மேனன், மேஜிக் பிரேம்ஸ் சார்பில் லிஸ்டின் ஸ்டீபன் இருவரும் இணைந்து தயாரிக்க, ஷாஜி கைலாஸ் இயக்கத்தில், பிரித்விராஜ், விவேக் ஓபராய், சம்யுக்தா மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள மலையாளப் படம் ‘கடுவா’.

இப்படம் தமிழிலும் டப்பிங் ஆகி ஜுலை 8ம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது. 

நிகழ்ச்சியில் படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினர்களாக தமிழ் திரையுலகத்தைச் சேர்ந்த தயாரிப்பாளர் ஆர்.பி சவுத்ரி, விடிவி கணேஷ், நடிகர்கள் ஆர்யா, ஜீவா, தயாரிப்பாளரும் விநியோகஸ்தருமான கோபுரம் பிலிம்ஸ் அன்புச்செழியன், தெலுங்கு திரைப்படத் தயாரிப்பாளரும் விநியோகஸ்தருமான திருப்பதி பிரசாத் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் பேசிய பிரித்விராஜ், 

"மலையாளத் திரையுலகில்  தொடர்ந்து புதுப்புது கதையம்சங்களுடன் படங்கள் வெளியாகி வருகின்றன. அதே சமயம் மாஸ் ஆக்ஷன் படம் வெளியாகி நீண்ட நாட்கள் ஆகிவிட்டது. மலையாளத்தில் இப்படி ஒரு மாஸ் ஆக்சன் படம் உருவாகாதா என ரசிகர்களுக்கு மட்டுமல்ல எனக்கே கூட அந்த எண்ணம் இருந்தது. அதன் விளைவாகத்தான் இந்த ‘கடுவா’ திரைப்படம் உருவாகியுள்ளது.

இரண்டு வருடத்திற்கு  முன்பே இந்தப் படம் தொடங்கப்பட்டாலும் கொரோனா தாக்கம், வெள்ள பாதிப்பு என பலவிதமான இடர்ப்பாடுகளை கடந்துதான் இந்த இடத்திற்கு வந்துள்ளது. ரசிகர்கள் தியேட்டரில் விசில் அடித்து ரசித்துப் பார்க்கும் ஒரு படமாக இது நிச்சயம் இருக்கும்," என்றார்.

பல வருடங்களுக்கு முன் பிரபலமாக இருந்த, தற்போதும் உயிரோடு இருக்க கூடிய கடுவாகுன்னால் குருவச்சன் ஜோஸ் என்பவரைப் பற்றிய கதையாக உருவாகி இருக்கிறது.

பிரித்விராஜ் இயக்கிய முதல் படமான ‘லூசிபர்’ படத்தில் வில்லனாக நடித்த விவேக் ஓபராய் இந்தப் படத்தில் மீண்டும் பிரித்விராஜ் உடன் இணைந்து போலீஸ் அதிகாரியாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

கிட்டத்தட்ட பத்து வருடம் கழித்து இயக்குனர் ஷாஜி கைலாஷும் பிரித்விராஜும் இணைந்து உருவாகியுள்ள படம் என்பதால் ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது ‘கடுவா’ திரைப்படம்.