ஜோ - ஒரு அழகான காதல் கதை... நவம்பர் 24 முதல்...

11 Nov 2023

விஷன் சினிமா ஹவுஸ் நிறுவனம் சார்பில் டாக்டர்.அருளானநது தயாரிக்க, அறிமுக இயக்குநர் ஹரிஹரன் ராம்.எஸ் இயக்கத்தில், சித்து குமார் இசையில், ரியோ ராஜ், மாளவிகா மனோஜ், பவ்யா ட்ரிக்கா மற்றும் பலர் நடித்திருக்கும் படம் ‘ஜோ’.

படம் குறித்து இயக்குனர் ஹரிஹரன் ராம் பேசுகையில், 

 ”நான் ஹிப் ஹாப் ஆதியிடம் உதவி இயக்குநராக பணியாற்றியிருப்பதோடு, ரியோ அண்ணா நடித்த ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு’ படத்தில் இணை இயக்குநராக பணியாற்றியிருக்கிறேன். நாயகனின் 10 வருட வாழ்க்கைப் பயணம் தான் இந்தப் படத்தின் கதை. 17 வயது முதல் 25 வயது வரையிலான நாயகனின்  வாழ்க்கையை ரசிக்கும்படியான காதல் கதையாக கொடுத்திருக்கிறேன். இரண்டு நாயகிகள், இருவரும் ஒரே மனநிலையில் இருப்பவர்கள். அதாவது, இந்த உலகத்தில் தனது தந்தை மட்டுமே தங்களுக்கு பாதுகாப்பை அளிக்க முடியும், அவரைப் போல் இருக்கும் ஒரு ஆண் தான் தங்களது வாழ்க்கை துணையாக வர வேண்டும் என்று எண்ணுகிறவர்கள், இவர்கள் இருவருடைய வாழ்க்கையிலும் நாயகன் நுழைகிறார். முதல் நாயகியுடனான காதல் சில காரணங்களுக்காக தோல்வியில் முடிகிறது. இரண்டாவது நாயகிக்கு வேறு ஒரு கனவு, வேறு ஒரு ஆசை இருக்கிறது. அவரை காதலித்து திருமணம் செய்யும் நாயகன், அவருடைய ஆசையை புரிந்துக்கொண்டு அதை நிறைவேற்றினாரா?, இல்லையா? என்பது தான் கதை.

காதல் கதைக்கு இசை மிக முக்கியம், அதன்படி இசை ரீதியாக இந்த படத்தை வேறு ஒரு தளத்திற்கு சித்துகுமார் கொண்டு சென்றுவிட்டார். படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களை திரும்ப திரும்ப கேட்க வைக்கும் ரகமாக இருப்பதோடு, அவர்களின் மனதை உலுக்கும் விதமாகவும் இருக்கும். படத்திற்கு இசை மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கிறது. படம் பார்க்கும் போது நீங்களும் அதை உணர்வீர்கள்.” என்றார்.

படத்தின் நாயகன் ரியோ ராஜ் பேசும் போது,

”எனக்கு இது மூன்றாவது படம். எனக்கு வேறு ஒரு ஆசை இருந்தது, நண்பர்கள் குழுவாக சேர்ந்து படம் பண்ணும் போது அது எப்படி இருக்கும் என்று ஆசைப்பட்டேன், அதனால் தான் இந்த படம் பண்ணிணோம். என்னுடைய முதல் படத்திலேயே அதன் வெற்றியை நான் உணர்ந்தேன், அதனால் தான் அதுபோல் தொடர்ந்து படம் பண்ண வேண்டும் என்று நினைத்தேன். இயக்குநர் ஹரிஹரன் ராம் இந்த கதையை என்னிடம் சொல்லும் போது நான் நடிப்பதாக இல்லை. ஒரு காதல் கதை இருக்கிறது, சொல்கிறேன் என்று சொல்லி தான் என்னிடம் சொன்னார். கதையை கேட்டதும் அவரிடம் உள்ள உரிமையில், இதை இப்படி பண்ணலாம், அப்படி பண்ணலாம் என்று யோசனை சொல்ல ஆரம்பித்து விட்டேன், அப்படி தான் இந்த படம் தொடங்கியது. 

இந்த படத்தில் பணியாற்றியவர்கள் அனைவரும் புதியவர்கள் அல்லது வளர்ந்து வருபவர்கள், அதனால் எல்லோருக்கும் இது புதிய அனுபவமாக இருந்த போது அருளானந்தம் சார் தான் இந்த படத்தை நாம் பண்ணலாம் என்று சொல்லி தொடங்கினார். இந்த கதைக்கும், படத்துக்கும் எவ்வளவு தேவையோ அதை செலவு செய்தார். இந்த படத்திற்காக நியாயமாக என்ன செய்ய வேண்டுமோ அதை அவர் செய்தார். 

இது சிறப்பான காதல் கதையை கொண்ட படமாக வந்திருக்கிறது. படத்தில் பார்க்கிற கதாபாத்திரங்கள் மற்றும் சம்பவங்கள் நிச்சயம் அனைவரது வாழ்க்கையிலும் நடந்திருக்கும். உங்கள் வாழ்க்கையில் அல்லது உங்கள் நெருங்கியவர்களின் வாழ்க்கையில் நடந்தவைகளாக தான் இருக்கும். இதை படம் பார்க்கும் ஒவ்வொருவரும் உணர்வதோடு, தங்களுடன் படத்தை தொடர்புபடுத்திக் கொள்வார்கள், அந்த வகையில் படம் இயல்பான காதல் கதையாக வந்திருக்கிறது. இந்த படத்தை தொடங்கினோம், முடித்தோம் என்று இல்லாமல், எங்களுடைய நெருக்கமானவர்கள், நண்பர்கள் என பலருக்கு படத்தை போட்டு காட்டினோம், அவர்கள் அனைவரும் சொன்னது படம் ரியலாக இருப்பதோடு, உணர்வுப்பூர்வமாக இருக்கிறது, படம் ரொம்ப பிடிச்சிருக்கு என்று சொன்னார்கள், படத்தை பார்த்தால் நிச்சயம் உங்களுக்கும் பிடிக்கும்.

joe rio raj

நான் முதல் முறையாக தாடி வைத்து இந்த படத்தில் நடித்திருக்கிறேன். இதற்காக ஒன்றரை வருடம் தாடி வளர்த்தேன். தொலைக்காட்சிகளில் நிறைய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தேன். ஆனால், தாடி வளர்த்ததால் அந்த வேலையையும் என்னால் செய்ய முடியவில்லை. காரணம், படத்தின் கதைக்கு தாடி ரொம்ப முக்கியம் என்பதால் அதை எடுக்காமல் வளர்த்து வந்தேன். காதல் தோல்வி என்றாலே தாடி வளர்க்க வேண்டுமா? என்று கேட்கிறார்கள். தாடி என்பது காதல் தோல்விக்கானது மட்டும் அல்ல, ஒருவரது வாழ்க்கை பயணம் மற்றும் காதல் தோல்வியில் இருந்து அவனால் மீள முடியாத சூழலை வெளிக்காட்டுவதாகும். எப்படி இருந்தாலும், காதலில் தோல்வியடைந்தவர்கள் அல்லது அதில் இருந்து மீண்டு வர முடியாமல் தவிப்பர்கள் நிச்சயம் தாடி வளர்த்துக்கொண்டு தான் இருப்பார்கள். அந்த இயல்பு நிலையை வெளிக்காட்டும் வகையில் தான் நான் தாடி வளர்த்தேன்.

இயக்குநர் ஹரிஹரன் ராமுக்கு இது தான் முதல் படம், ஆனால் படத்தை பார்த்தால் அவரை முதல் பட இயக்குநர் என்று சொல்ல மாட்டோம். இதை பலர் சொல்லியிருந்தாலும், இந்த இடத்தில் நானும் இதை சொலித்தான் ஆக வேண்டும். இயக்குநர் ஹரிஹரன் ராமின் இயக்கம் மிக சிறப்பாக இருக்கிறது. நிச்சயம் இந்த படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.” என்றார்.

இசையமைப்பாளர் சித்து குமார் கூறுகையில்,

”யுவன் சார் பாட்டு பாடியதோடு, அந்த பாடலில் தோன்றிருப்பது பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. நான் இசையமைப்பாளராவதற்கு யுவன் சார் தான் தூண்டுதலாக இருந்தார். இந்த பாடலும் யுவன் சாரின் குரலிலை கேட்டது. அதனால் அவர் பாடினால் நன்றாக இருக்கும் என்று அனைவரும் விரும்பினோம். அதன்படி, பாடலுடன் அவரை சந்தித்தோம், பாட்டை கேட்டதும் அவர் பாட சம்மதம் தெரிவித்துவிட்டார். பாடலில் அவர் தோன்றியதற்கு ரியோ ராஜ் தான் காரணம். அவர் தான் யுவன் சாரிடம் பாடலில் நடிக்க வேண்டும் என்று கேட்டார். தன்னுடைய பாடலை தவிர வெளி பாடல்களில் யுவன் சார் தோன்றியதில்லை, ஆனால் எங்கள் பாட்டுக்காக அவர் நடித்துக் கொடுத்தார். இது எங்கள் படத்திற்கு மிகப்பெரிய அடையாளமாக அமைந்திருக்கிறது.” என்றார்.

Tags: joe, rio raj, siddhu kumar, hariharan ram

Share via: