நண்பர்கள் இணைந்து தயாரித்த ‘ஜிகிரி தோஸ்த்’

11 Nov 2023

அரன்.வி, இயக்கத்தில் ஷாரிக் ஹாசன், அரன்.வி, அம்மு அபிராமி, விஜே ஆஷிக், பவித்ரா லட்சுமி மற்றும் பலர் நடிக்கும் படம் ‘ஜிகிரி தோஸ்த்’.

பிரதீப் ஜோஸ்.கே மற்றும் அரன்.வி இணைந்து தயாரித்திருக்கும் இப்படத்தின் இணை தயாரிப்பை எஸ்.பி.அர்ஜுன் மற்றும் ஹக்கா.கே கவனித்துள்ளனர்.

படம் பற்றி இயக்குநரும், மூன்று நாயர்களில் ஒருவராகவும் நடித்துள்ள அரன் படம் பற்றி பேசகையில்

 “நான் ஷங்கர் சாரிடம் உதவி இயக்குநராக 2.0 படத்தில் பணியாற்றி இருக்கிறேன். சில குறும்படங்களையும் இயக்கி உள்ளேன்.  அந்த படங்கள் சைமா உள்ளிட்ட பல விருதுகளை வென்றது. என்னுடைய குறும்படத்தை பார்த்துவிட்டுத்தான் இப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான பிரதீப் சார் படம் பண்ணலாம் என்றார்.  அதன்படி, பிரதீப் சார், என்னுடைய நண்பர் அர்ஜுன் ஆகியோருடன் இணைந்து இந்த படத்தை நானும் சேர்ந்து தயாரிக்கவும் செய்திருக்கிறேன். இந்த படத்தின் இசையமைப்பாளர் அஷ்வினும் என்னுடைய நண்பர் தான். அதனால், ஜிகிரி தோஸ்த்தான நாங்கள் சேர்ந்து தான் இந்த ‘ஜிகிரி தோஸ்த்’ படத்தை உருவாக்கியிருக்கிறோம்.

பொறியியல் கல்லூரியில் படிக்கும் மாணவரான நான் ஒரு டிவைஸ் கண்டுபிடிக்கிறேன். அதன் மூலம் 500 மீட்டரில் உள்ள செல்போன் உரையாடல்களை ஒட்டு கேட்க முடியும். அப்படி ஒரு தொழில்நுட்பக் கண்டுபிடிப்பை சுற்றி தான் கதை நகரும். கல்லூரி நண்பர்களின் ஜாலியான வாழ்க்கை, அதில் ஒரு கண்டுபிடிப்பு அதைச் சுற்றி நடக்கும் சம்பவங்களை விறுவிறுப்பாகவும், பரப்பாகவும் சொல்லியிருக்கிறேன்,” என்றார்.

நாயகன் ஷாரிக் ஹாசன் பேசுகையில்,

“பிக் பாஸ் முடித்துவிட்டு வந்தவுடன் இந்தக் கதையை அரன் என்னிடம் கூறினார். கதை சொன்ன போதே, ஜாலியாக இருக்கும், மூன்று நண்பர்கள் அவர்களுடைய ஜாலியான வாழ்க்கை மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் சில பிரச்சனைகள் தான் கதை என்றார். எனக்கும் அது பிடித்திருந்ததால் நடித்தேன். முதலில் என்னிடம் தலைப்பு ஜேடி என்று கூறினார். ஜேடி என்றதும் நான் நிறைய யோசித்தேன், சரக்கு பெயரா என்றெல்லாம் கூட யோசித்தேன். ஆனால், அதுவெல்லாம் இல்லை ‘ஜிகிரி தோஷ்த்’ என்றதோடு, சரக்கடிப்பது போன்ற காட்சிகள் படத்தில் எதுவும் இல்லை என்றார். அப்ப ரொம்ப நல்லதா போச்சு, வாங்க உடனே ஆரம்பிக்கலாம் என்று நடித்தேன். படத்தின் பலமே திரைக்கதை தான், அரன் என்னிடம் சொன்னதை விட படத்தை சிறப்பாக இயக்கியிருக்கிறார். நிச்சயம் இந்தப் படம் எனக்கு நல்ல அடையாளத்தை கொடுக்கும்,” என்றார்.

விஜே ஆஷிக் படம் பற்றி கூறுகையில்,

“நான் இப்போது நிறைய படங்களில் நடித்து வருகிறேன், ஆனால் இந்தப் படம் எனக்கு மிக முக்கியமான படம், காரணம் படம் முழுவதும் நான் வருகிறேன். நம்ம வேலை உண்டு நாம் உண்டு, தேவையில்லாத பிரச்சினையில் தலையிடக் கூடாது என்று நினைக்கும் ஒரு கதாபாத்திரம், அதே சமயம், பிரச்சினையில் இருக்கும் நண்பர்களை விட்டுவிட்டு போக மனம் இல்லாமல் அங்கேயே இருக்கும் ஒரு கதாபாத்திரம். ஹீரோவின் நண்பர் வேடம் என்றாலும் திரைக்கதையில் எனக்கும் முக்கியத்துவம் இருக்கும். முழு படமும் விறுவிறுப்பாக பயணிக்கும். ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படம் போல தொழில்நுட்பத்தை மையப்படுத்திய விறுவிறுப்பான திரைக்கதை கொண்ட படமாக இருக்கும்.” என்றார்.

நடிகர் கெளதம் சுந்தரராஜன் பேசுகையில்,

 “இயக்குநர் அரன் இயக்கிய குறும்படத்தில் நான் நடித்திருக்கிறேன். அந்த குறும்படம் என்னை வெகுவாகக் கவர்ந்தது. காரணம், அதில் உள்ள விசயங்கள் அனைத்தும் பாசிட்டிவாக இருக்கும். சிகரெட் புகைப்பது, மது அருந்துவது போன்ற காட்சிகள் இல்லாமல் அனைத்துமே நல்ல விசயங்களை கொண்ட படமாக இருக்கும். அதைத் தொடர்ந்து இந்த படத்தில் நடித்திருக்கிறேன், இந்த படமும் பாசிட்டிவான படம் தான். நல்ல விறுவிறுபான படமாக மட்டும் இன்றி அனைத்து தரப்பினரும் பார்க்க கூடிய ஒரு பொழுதுபோக்கு படமாக இருக்கிறது. புதுமுக மற்றும் வளர்ந்து வரும் கலைஞர்கள், இவர்களுக்கு பத்திரிகையாளர்கள் ஆதரவளிக்க வேண்டும்.” என்றார்.

நாயகி அம்மு அபிராமி படம் குறித்து கூறுகையில், “முன்னணி வேடங்களில் நடிக்க தொடங்கிய நேரத்தில், நல்ல நல்ல கதைகள் வராதா என்று எதிர்பார்த்த நேரத்தில் தான் இந்த பட வாய்ப்பு கிடைத்தது. ஹீரோயின் என்பதைத் தாண்டி, நண்பர்களாக நடித்தது தான் இந்த படத்தில் எனக்கு மிகவும் பிடித்தது. தீவிரவாதம், தொழில்நுட்பம், கடத்தல் என்று பல விசயங்கள் படத்தில் இருக்கிறது, அவை அனைத்தும் திரைக்கதையில் அழகாக ஒன்று சேர்ந்து படத்தை விறுவிறுப்பாக நகர்த்தி செல்கிறது. நான் ஷாரிக்கின் காதலியாக நடித்திருந்தாலும், என்னுடைய வேடத்திற்கு என்று தனித்துவமான விசயம் இருக்கும், அதில் ஒரு சிறிய திருப்புமுனையும் இருக்கும். அதை இப்போது சொல்ல முடியாது, படத்தை பார்த்தால் நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும். வளர துடிக்கும் இளைஞர்களின் குழு நாங்கள், உங்களுடைய ஆதரவு இருந்தால் படம் நிச்சயம் மக்களிடம் சென்றடையும்.” என்றார்.

 


  

Tags: jigiri dhosth, aran

Share via: