ஜெய் பீம் - சூர்யா, இயக்குனர் ஞானவேலைப் பாராட்டிய நல்லக்கண்ணு

26 Nov 2021

2 டி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், த.செ.ஞானவேல் இயக்கத்தில், சூர்யா, லிஜிமோள் ஜோஸ், மணிகண்டன் மற்றும் பலர் நடித்து இந்த மாதம் 4ம் தேதி ஓடிடி தளத்தில் வெளிவந்த படம் ‘ஜெய் பீம்’.

இப்படத்திற்கு ரசிகர்களிடம் இருந்தும், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களிடம் இருந்தும் பாராட்டுக்கள் வந்தது.

இப்படத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு பார்த்தார். அவருடன் நடிகர் சூர்யா, சூர்யாவின் தந்தை சிவக்குமார், இயக்குநர் த.செ.ஞானவேல், 2 டி நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன் ஆகியோரும் படத்தைப் பார்த்தனர்.

முன்னதாக படத்தை தொலைக்காட்சியில் பார்த்த நல்லக்கண்ணு, திரையில் காண விருப்பம் தெரிவித்திருந்தார். அதற்கேற்ப படத்தைத் திரையிட ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி, வியாழக்கிழமை இரவு படத்தைத் திரையில் கண்டு ரசித்தார்.

படத்தைப் பார்த்துவிட்டு நல்லக்கண்ணு, நடிகர் சூர்யாவையும், படத்தின் இயக்குநர் த.செ.ஞானவேலுவையும் வெகுவாகப் பாராட்டினார். நடிகர் சூர்யாவின் கன்னத்தில் செல்லமாக வருடிக் கொடுத்து தனது பாராட்டை நல்லக்கண்ணு பதிவு செய்தார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி பல்வேறு அரசியல் கட்சியினரும் படத்திற்கு பாராட்டும், படக்குழுவினருக்கு வாழ்த்தும் தெரிவித்துள்ளனர்.

அந்த வரிசையில், தற்போது ஜெய்பீம் திரைப்படத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு பார்த்துவிட்டு நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் த.செ.ஞானவேலுவையும் பாராட்டியுள்ளார்.

தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவரின் பாராட்டு, நடிகர் சூர்யாவையும் ஜெய்பீம் படக்குழுவினரையும் மகிழ்ச்சியடையச் செய்துள்ளது.

Tags: jai bhim, suriya, tha se gnanavel, sean roldan, Prakash Raj, Rajisha Vijayan, Manikandan, Lijo Mol Jose

Share via: